under review

திருவாலியமுதனார்

From Tamil Wiki

திருவாலியமுதன்னர் (பொ.யு. 10-ம் நூற்றாண்டு) ஒன்பதாம் திருமுறையான திருவிசைப்பாவைப் பாடிய ஒன்பது புலவர்களில் ஒருவர். அவரது பாடல்கள் திருவிசைப்பாவில் ஏழாவது தொகுப்பாக அமைகின்றன.

வாழ்க்கைக் குறிப்பு

திருவாலியமுதர் அந்தண மரபில் மயிலாடுதுறையில் பிறந்தார். அவரது பெற்றோர்கள் சீர்காழிக்கு அருகிலுள்ள திருவாலி நகரத்தில் கோவில் கொண்ட அமுதனார் என்னும் விஷ்ணுவின் பக்தர்களானதால் திருவாலியமுதனார் என்று அவருக்குப் பெயரிட்டனர். திருவாலியமுதனார் திருமாலை வழிபடும் குடும்பமாக இருந்த போதும் சிவபெருமான் மீது, குறிப்பாக தில்லை நடராஜர் மீது மிகுந்த பக்தி கொண்டிருந்தார்.

தஞ்சை கோயிலில் சில கல்வெட்டுகளில் இறைவனின் சேவைக்காகத் தங்களை அர்ப்பணித்த சில பெண்களின் பெயர்கள் 'எடுத்த பாதம்', 'மழைச் சிலம்பு' என்று உள்ளன. இவை திருவாலி அமுதரது மூன்றாவது பதிகத்தில் உள்ள ஐந்தாவது பாடலில் உள்ள சொற்றொடர்கள் என்பதால் அவரது காலம் ராஜராஜனுக்கு முன்( பொ.யு. 985-க்கு முன்) என்று அறிஞர்களால்கருதப்படுகிறது.

திருவாலியமுதனார் தம்மை `மயிலையர் மன்னன்` என்றும், தாம் பாடிய திருவிசைப்பாவில், ``வரைசெய்மாமதில் மயிலையர் மன்னவன் மறைவல திருவாலி`` எனவும் பாடி உள்ளதால், இவர் மயிலையில் பிறந்திருக்கலாம் என்றும், நான்காம் பதிகத்தில் ``அறை செந்நெல் வான்கரும்பின் அணியானைகள் சூழ் மயிலை `` என்று பாடி உள்ளதால் மருத நிலத்தில் அமைந்த மயிலை, அதாவது மயிலாடுதுறையாக இருக்கலாம் என்றும் இருவேறு கருத்துகள் உள்ளன.

இலக்கிய வாழ்க்கை

திருவாலியமுதர் பாடிய திருவிசைப்பாப் பதிகங்கள் (பாதாதி கேசம், பவளமால்வரை, அல்லாய்ப் பகலாய், கோல மலர்). நான்கும் சிதம்பரம் கோவிலையும் தில்லைக் கூத்தனையும் பாடிய பாடல்கள். திருவாலி அமுதனார் திருவிசைப்பா பஞ்சகம், நட்டராகம், இந்தளம் ஆகிய மூன்று பண்களில் அமைந்து நான்கு பதிகங்களாய் 42 பாடல்களைக் கொண்டுள்ளது.

பாடல் நடை

மையல் மாதொரு கூறன் மால்விடை யேறி மான்மறி யேந்தியதடம்
கையன் கார்புரை யும்கறைக் கண்டன் கனல்மழுவான்
ஐயன் ஆரழல் ஆடு வான்அணி நீர்வயல் தில்லை அம்பலத்தான்
செய்ய பாதம் வந்தென் சிந்தை உள்ளிடம் கொண்டனவே.

பவளமால்வரை

பவளமால் வரையைப் பனிபடர்ந்(து)
அனையதோர் படரொளிதரு திருநீறும்
குவளை மாமலர்க் கண்ணியும் கொன்றையும்
துன்றுபொற் குழல்திருச் சடையும்
திவள மாளிகை சூழ்தரு தில்லை
யுள்திரு நடம்புரி கின்ற
தவள வண்ணனை நினைதொறும்
என்மனம் தழல்மெழு(கு)ஒக் கின்றதே.

அல்லாய்ப் பகலாய்

அல்லாய்ப் பகலாய் அருவாய் உருவாய் ஆரா அமுதமாய்க்
கல்லால் நிழலாய் கயிலை மலையாய் காண அருளென்று
பல்லா யிரம்பேர் பதஞ்சலிகள் பரவ வெளிப்பட்டுச்
செல்வாய் மதில் தில்லைக்(கு) அருளித் தேவன் ஆடுமே

கோல மலர்

கோல மலர்நெடுங்கண் கொவ்வை வாய்க்கொடி ஏரிடையீர்
பாலினை இன்னமுதைப் பரமாய பரஞ்சுடரைச்
சேலுக ளும்வயல்சூழ் தில்லை நகர்ச் சிற்றம்பலத்(து)
ஏலவுடை எம்இறையை என்றுகொல் காண்பதுவே.

உசாத்துணை


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 01-Jan-2025, 15:44:24 IST