under review

ஆளுடையபிள்ளையார் திருவந்தாதி

From Tamil Wiki

ஆளுடையபிள்ளையார் திருவந்தாதி திருஞான சம்பந்தரைப் பாடிய அந்தாதி என்னும் சிற்றிலக்கியம். அகத்துறைப் பாடல்களால் ஆனது. சேக்கிழாரின் பெரிய புராணத்தில் சம்பந்தரின் வரலாற்றுக்கு மூலநூல்களில் ஒன்றாக அமைந்தது. ஆளுடைய பிள்ளையார் திருஞான சம்பந்தரைக் குறிக்கும் மற்றொரு பெயர்.

ஆசிரியர்

ஆளுடைய பிள்ளையார் திருவந்தாதியை இயற்றியவர் நம்பியாண்டார் நம்பி. சைவத் திருமுறைகளைத் தொகுத்தவர். திருஞான சம்பந்தர் மேல் கொண்ட பக்தியால் அவரை ஆறு பிரபந்தங்களில் போற்றிப் பாடினார்.

நூல் அமைப்பு

ஆளுடைய பிள்ளையார் திருவந்தாதி திருஞான சம்பந்தரை 100 கட்டளைக்கலித்துறைப் பாடல்களால் பாடிய, அந்தாதித் தொடையில் அமைந்த நூல். முதல்பாடல் 'பார்மண்டலத்து' எனத் தொடங்கி இறுதிப்பாடல் 'பாரகத்தே' என மண்டலித்து முடிகிறது. 101-ஆவது பாடல் பலன்கூறும் தனிவெண்பாவாக அமைந்தது.

திருஞான சம்பந்தரைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்ட அகத்திணைப் பாடல்களால் அமைந்தது இந்நூல். தலைவி, தலைவன், தோழி, பாங்கன், நற்றாய், செவிலி இவர்களின் கூற்றாக ஐந்திணைகளின் கூடல், இருத்தல், ஊடல், இரங்கல், பிரிவு ஆகிய உரிப்பொருள்கள் பயின்று வருகின்றன. 65-ஆவது பாடலின் பொருள் 'கொங்குதேர் வாழ்க்கை' எனத் தொடங்கும் குறுந்தொகையின் முதற்பாடலை மிகவும் ஒத்ததாக உள்ளது.

பாடல்களில் தமிழாகரன்' என்றும் 'தமிழ் விரகன்' என்றும் போற்றப்படும் 'திருஞான சம்பந்தரின் பக்தியும், சிறப்பும் தலைவி மற்றும் பிறரின் கூற்றாகப் பேசப்படுகின்றன. திருஞான சம்பந்தர் திருமருகலில் ஆயிழை என்னும் வணிகப் பெண்ணின் மாமனைப் பாம்பு தீண்டிய நஞ்சை நீக்கியது, ஆண்பனையை பெண்பனையாக மாற்றியது, சமணர்களை வாதில் வென்றது, திருமறைக்காட்டில் அவரது ஒரே பாடலில் கதவு திறந்தது, பச்சை ஏட்டுப் பதிகம் தீயில் எரியாமல் நின்றது, பூம்பாவையை உயிர்பித்தது, ஆற்றில் விட்ட அவரது பதிகங்கள் திரும்பி வந்தது, பஞ்சத்தில் மக்களின் பசிப்பிணி தீர்க்க 'வாசி இரவே காசு ஈல்குவீர்‌' என வேண்டி சம்பந்தர் நற்காசு பெற்றது என அவர் வாழ்வில் நடந்த நிகழ்வுகளும், நிகழ்த்திய அற்புதங்களும் கூறப்படுகின்றன. 99-ம் பாடல் இப்பிரபந்தத்தின் பயனைக் கூறுகிறது(பலஸ்ருதி). 100-ஆவது பாடல் சீர்காழியின் 12 பெயர்களையும் கூறுகிறது.

பாடல் நடை

ஞான சம்பந்தர் புரிந்த அற்புதங்கள்

அணங்கமர் யாழ்முரித்(து) ஆண்பனை பெண்பனை யாக்கி,அமண்
கணங்கழு வேற்றிக் கடுவிடந் தீர்த்துக் கதவடைத்துப்
பிணங்கலை நீரெதி ரோடஞ் செலுத்தின, வெண்பிறையோ(டு)
இணங்கிய மாடச் சிரபுரத் தான்தன் இருந்தமிழே.

கார்ப் பருவம் கண்டு தலைவி இரங்கியது

நாமுகந் தேத்திய ஞானசம் பந்தனை நண்ணலர்போல்
ஏமுக வெஞ்சரஞ் சிந்திவல் இஞ்சி யிடிபடுக்கத்
தீமுகந் தோன்றிகள் தோன்றத் தளவம் முகையரும்பக்
காமுகம் பூமுகங் காட்டிநின் றார்த்தன காரினமே.

சீர்காழியின் பன்னிரு பெயர்கள்

பிரமாபுரம்வெங் குருசண்பை தோணி புகலிகொச்சை
சிரமார் புரம்நற் புறவந் தராய்காழி வேணுபுரம்
வரமார் பொழில்திரு ஞானசம்பந்தன் பதிக்குமிக்க
பரமார் கழுமலம் பன்னிரு நாமம்இப் பாரகத்தே.

உசாத்துணை


✅Finalised Page