under review

உமாபதி சிவாசாரியார்

From Tamil Wiki
சிவாசாரியார் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: சிவாசாரியார் (பெயர் பட்டியல்)

உமாபதி சிவாசாரியார்(உமாபதி சிவம், கொற்றவன்குடி உமாபதி சிவாசாரியார், உமாபதி தீட்சிதர்) (பொ.யு. 14-ம் நூற்றாண்டு) சைவத்தின் சந்தான குரவர்கள் நால்வருள் ஒருவர். மெய்கண்ட சாத்திரங்கள் எனப்படும் சைவ சித்தாந்த நூல்கள் பதினான்கில் எட்டு நூல்களை இயற்றினார். மறைஞானசம்பந்தரின் மாணவர்.

வாழ்க்கைக் குறிப்பு

உமாபதி சிவம் இயற்றிய சங்கற்ப நிராகரணத்தில் பாயிர வரிகள் 26-29-ல் அவர் இன்னூலை இயற்றிய காலம் சக ஆண்டு 1235 என்று குறித்துள்ளார். எனவே பொ.யு. 1313-ல் இந்த நூல் இயற்றப்பட்டிருக்கிறது எனலாம். ஆகவே, ”உமாபதி சிவத்திற்கு எண்பத்தோராண்டுகட்கு முன் கி.பி 1232-ல் மெய்கண்ட தேவர் இருந்தனர் என்பது எவ்வாற்றானும் ஏற்புடைத்தேயாம்” என்கிறார் பேராசிரியர் டி.வி. சதாசிவ பண்டாரத்தார்.

உமாபதி சிவாசாரியார் தில்லையில், தீட்சிதர் மரபில், சம்பு தீட்சிதர் - கௌரி அம்மையார் தம்பதிக்கு கி.பி. 13-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பிறந்தார்.

வேதங்களையும், சிட்சை, கல்பம், வியாகரணம், சந்தஸ், நிருத்தம், ஜோதிடம் என்ற ஆறு அங்கங்களையும் கற்றதோடு மட்டுமில்லாமல் திருக்குறள், பன்னிரு திருமுறைகளையும் கற்றார். வடமொழி, தமிழ் இரண்டிலும் புலமை பெற்றார்.

பதினாறாம் வயதில் இவருடைய திருமணம் நடந்தது. வைதீக முறையில் தீட்சைகள் செய்விக்கப்பட்டு, சிதம்பரம் நடராஜருக்கு பூஜைகள் செய்யும் உரிமையும் வழங்கப்பட்டது. உமாபதி தீட்சிதர், தமக்குரிய பூஜை முறை நாட்களில், தில்லை திருச்சிற்றம்பலத்தானுக்கு பூஜைகள் செய்தார். மற்ற நாட்களில் தனது தந்தை தமக்கு பெட்டகத்துடன் அளித்திருந்த சிவகாமி, நடராஜர் விக்கிரகங்களைப் பூஜித்து வந்தார்.

ஆன்மிக வாழ்க்கை

தொன்மம்
மெய்கண்டாரை குருவாக ஏற்றல்-தொன்மக்கதை

உமாபதி சிவம் மறைஞான சம்பந்தரிடம் சீடராகச் சேர்ந்த சம்பவம் பற்றிய ஓர் தொன்மம் நிலவுகிறது. அக்காலத்தில் தில்லை மூவாயிரவரில் முக்கியமாய்த் தலைமைப் பொறுப்பில் இருந்த தீக்ஷிதரை மேள, தாளத்தோடு பல்லக்கில் தீவட்டி மரியாதையோடு அனுப்பி வைக்கும் பழக்கம் இருந்து வந்தது. பகல் நேரமானாலும் இந்த தீவட்டி மரியாதை உண்டு. ஒருநாள் உமாபதி சிவம் கோயிலில் வழிபாடுகளை முடித்துக்கொண்டு பல்லக்கில் அமர்ந்து தீவட்டி மரியாதை சகிதம், மேளதாளத்தோடு சென்று கொண்டிருந்தார். அங்கே ஓர் வீட்டில் திண்ணையில் அமர்ந்திருந்த மறைஞான சம்பந்தர் இதைக் கண்டதும், "பட்ட மரத்தில் பகல் குருடு போகுது பார்!" என்று உமாபதி சிவத்தின் காதில் விழும்படி சத்தமாய்ச் சொல்லிச் சிரித்தார். அதைக் கேட்ட உமாபதி சிவத்திற்கு அதன் அர்த்தம் விளங்கியது. பல்லக்கிலிருந்து குதித்து மறைஞான சம்பந்தரின் கால்களில் விழுந்து வணங்கித் தன்னை சீடனாக ஏற்கும்படி கேட்டுக்கொண்டார். மறைஞானசம்பந்தர் ஒரு வார்த்தை கூடப் பேசாமல் அங்கிருந்து எழுந்து நடக்கத் தொடங்கினார். உமாபதி சிவம் அவரைப் பின்பற்றினார். சற்றுத் தூரம் சென்ற மறைஞான சம்பந்தர் ஒரு வீட்டின் வாசலில் நிற்க அங்கே அவர் கைகளில் கூழை வார்த்தனர். அந்தக் கூழை அப்படியே கைகளில் ஏந்திக் குடித்தார் மறைஞான சம்பந்தர். அப்போது கூழ் அவர் கைகளின் வழியே வழிந்தது. உமாபதி சிவம் சிந்திய கூழை குருப் பிரசாதம் எனக் கூறிவிட்டுக் கைகளில் வாங்கிக் குடித்தார். அன்று முதல் அவரின் சீடரானார்.

உமாபதி சிவம் சிவஞான போதம், சிவஞான சித்தியார் போன்ற பல நூல்களைக் கற்று, மறைஞான சம்பந்தரிடம் சித்தாந்தத் தெளிவு பெற்று, அவரின் தலைமை மாணவராகவும் உயர்ந்தார். அன்றைய நெறிகளை மீறி தில்லை மூவாயிரவர் அல்லாத ஒருவரைக் குருவாக ஏற்றதால் மூவாயிரவர் சமூகத்திலிருந்து விலக்கி வைக்கப்பட்டு பூசை செய்யும் உரிமையும் மறுக்கப்பட்டது. ஊரை விட்டு விலகி சிதம்பரத்தின் கிழக்கு எல்லையில் கொற்றவன்குடி' என்னும் பகுதியில் தங்கி, சைவ சித்தாந்த நெறிகளைப் பரப்பி வந்தார். அவரிடம் சித்தாந்தம் பயின்றவர்கள் அவருக்கு திருமடம் கட்டித் தந்தனர். நாளடைவில் இம்மடம் 'கொற்றவன்குடி உமாபதி சிவம் மடம்' எனப் பெயர் பெற்றது. உமாபதி சிவம் குருமூர்த்தம் (கொற்றவன் குடி திருமடம்), சிதம்பரத்தின் கிழக்கில் 1 கி.மீ. தொலைவில், அண்ணாமலை நகர் செல்லும் வழியில், அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் பொறியியல் கல்லூரிக்கு அருகில் அமைந்துள்ளது.

பெத்தான் சாம்பானுக்கு முக்தியளித்தல்

பெத்தான்சாம்பான் (பெற்றான் சாம்பான்)தில்லைக் கூத்தப்பெருமான் கோயிலுக்கு விறகு வெட்டிக் கொண்டுவரும் தொண்டு புரிந்தவர். அவரது பக்குவம் கண்டு நடராசப் பெருமான் சாம்பான் கனவில் தோன்றி, ஒரு கடிதத்தை உமாபதி சிவத்துக்கு அளிக்கும்படி ஆணையிட்டார். கடிதத்தில்

"அடியார்க் கெளியன்சிற்ற்றம்பலவன் கொற்றங்
குடியார்க் கெழுதியகைச் சீட்டு - படியின்மிசைப்
பெற்றான்சாம் பானுக்குப் பேதமறத் தீக்கை செய்து
முத்தி கொடுக்க முறை

என்று சீட்டுக்கவியாக பெத்தான் சாம்பானுக்கு முக்தியளிக்கும்படி ஆணையிடப்பட்டிருந்தது. திருமுகத்தைப் படித்த உமாபதி சிவம், பெற்றான் சாம்பானுக்கு, 'சத்தியோ நிர்வாண' தீட்சையை செய்து முத்தியளித்தார். பெற்றான் சாம்பான் உடலோடு முத்தி பெற்றார்.

சாம்பானின் மனைவி உமாபதி சிவம் தன் கணவனைக் கொன்றுவிட்டதாக அரசனிடம் முறையிட, உமாபதி சிவம் பூஜை தீர்த்தத்தை ஒரு முள்ளிச்செடிமேல் தெளித்து அதற்கு முக்தியளித்தார். முள்ளிச்செடி ஒளிமயமான உருவத்துடன் விண் புகுந்ததைக்கண்ட அனைவரும் நடராஜர் உமாபதி சிவத்துக்கு முக்தியளிக்கும் உரிமையை அளித்ததை உணர்ந்தனர் என்று தொன்மக்கதை ஒன்று கூறுகிறது.

கொடிக்கவி

சிதம்பரம் நடராஜருக்குப் பூசை செய்யும் உரிமை கொண்ட உமாபதி சிவத்தை , தீட்சிதர் அல்லாதவரைத் தன் குருவாக ஏற்றதால் மூவாயிரவர் சமூகத்திலிருந்து விலக்கி வைக்கப்பட்டு பூசை செய்யும் உரிமையும் மறுக்கப்பட்டது. இதனால் இவர் சிதம்பரத்தை விட்டு நீங்கி வேறிடத்தில் வாழ்ந்துவந்தார். கோயிலில் கொடியேற்றுவதற்கென இவருடைய முறை வேறொருவருக்குச் சென்றது. எவ்வளவு முயன்றும் கொடி ஏறவில்லை. அந்தணர்கள் உமாபதி சிவத்தை வரவழைத்துக் கொடியேற்றும்படி கேட்டுக் கொண்டனர். உமாபதியார் நான்கு பாடல்களைப் பாடவும் கொடி ஏறியது.

இலக்கிய வாழ்க்கை

மெய்கண்ட சாத்திர நூல்கள்
  • சிவஞான போதம் முதல் நூலாகவும், சிவஞான சித்தியார் சார்புநூலாகவும் அமைய எழுதப்பட்ட புடைநூல் சிவப்பிரகாசம்,
  • சைவ சித்தாந்தக் கருத்துக்களைக் கொண்ட குறள் வெண்பாக்களால் ஆன நூல் 'திருவருட்பயன்'.
  • வினா வெண்பா தனது குரு மறைஞான சம்பந்தரிடம் உமாபதி சிவம் கேட்ட பதின்மூன்று கேள்விகளுக்கான 13 வெண்பாக்களைக் கொண்டது.
  • போற்றிப் பஃறொடை மறைஞான சம்பந்தரை பஃறொடை வெண்பாவால் சிவபரம்பொருளாகவே போற்றும் நூல்.
  • கொடிக்கவி சிதம்பரத்தில் கொடி ஏறுவதற்காக உமாபதி சிவம் பாடிய ஐந்து பாடல்கள் (நான்காவது பாடலில் கொடி ஏறியதாகக் கூறப்படுகிறது)
  • உமாபதி சிவம் தன் குரு மறைஞான சம்பந்தரிடம் தன் நெஞ்சினைத் தூதாக விடுப்பதாக இயற்றப்பட்ட நூல் நெஞ்சு விடு தூது. மெய்கண்ட சாத்திர நூல்களில் சிற்றிலக்கிய வகையில் அமைந்த ஒரே நூல். தமிழில் தோன்றிய முதல் தூது நூலாகவும் கருதப்படுகிறது.
  • உண்மைநெறி விளக்கம் எழுதியவர் உமாபதி சிவம் என்று மரபாகக் கூறப்பட்டு வந்தது. சு. அனவரத விநாயகம் பிள்ளை தன் ஆய்வின் முடிவில் இந்நூலின் ஆசிரியர் தத்துவ நாதர் என்று கண்டறிந்தார். தருமை ஆதினத்தின் மூலம் வெளிவந்த மெய்கண்ட சாத்திரப் பதிப்பும் ஆசிரியர் தத்துவ நாதர் என்றே குறிப்பிடுகிறது.
  • சங்கற்ப நிராகரணம் சைவ சித்தாந்தக் கருத்துக்களோடு பிற சமயக் கருத்துரைக்களை ஒப்பிட்டு ஏற்பனவற்றை ஏற்று, மற்றவற்றை மறுத்து, சைவ சித்தாந்தத்தை நிலைநாட்டும் நூல்.
பிற நூல்கள்

கோயிற்புராணம், திருத்தொண்டர் புராணசாகரம், திருமுறை கண்ட புராணம், சேக்கிழார் புராணம் ஆகிய நூல்களையும் உமாபதி சிவம் இயற்றினர். கோயில் புராணம் தில்லைத்தல புராணம். திருத்தொண்ட புராணசாகரம் அறுபத்து மூன்று நாயன்மார்கள், தொகையடியார் ஒன்பதின்மர் ஆகியோர் வரலாறுகளைச் கூறுவது; திருமுறைகண்ட புராணம் என்பது சோழமன்னன் ஒருவன் தேவார மூவர் பாடிய திருப்பதிகங்களைத் நம்பியாண்டார் நம்பியின் துணைகொண்டு தில்லையில் தேடிக்கண்ட வரலாற்றைக்கூறுவது. சேக்கிழார் புராணம் குலோத்துங்க சோழன் வேண்டிக்கொண்டவாறு பெரிய புராணம் என வழங்கும் திருத்தொண்டர் புராணத்தைச் சேக்கிழார் அரங்கேற்றிய வரலாற்றைக் கூறுவது.

உமாபதி சிவம் வடமொழியில் பவுட்கர ஆகமத்துக்கு வடமொழியில் விருத்தியுரை எழுதினார். சிவபரத்துவமான கருத்துக்களோடு சிதம்பரம் நடராஜர் ஆலய அமைப்பைப் புலப்படுத்துகின்ற ' குஞ்சிதாங்கிரி ஸ்தவம்' என்ற வடமொழி தோத்திர நூலை இயற்றினார்.

மறைவு

உமாபதி சிவாசாரியார் சித்திரை மாதம் ஹஸ்த நட்சத்திரத்தன்று கொற்றவன்குடி திருமடத்தில் சிவனோடு கலந்தார்.

நூல் பட்டியல்

  • சிவப்பிரகாசம்
  • திருவருட்பயன்
  • வினாவெண்பா
  • போற்றிப் பஃறொடை
  • கொடிக்கவி
  • நெஞ்சுவிடு தூது
  • உண்மைநெறி விளக்கம் (தத்துவ ராயர் எழுதியதாகவும் கூறப்படுகிறது)
  • சங்கற்ப நிராகரணம்
பிற நூல்கள்
  • கோயிற்புராணம்
  • திருத்தொண்டர் புராணசாகரம்
  • திருமுறை கண்ட புராணம்
  • சேக்கிழார் புராணம்
வடமொழி
  • குஞ்சிதாங்க்ரி ஸ்தவம்
  • பௌட்கர ஆகம் விருத்தியுரை

உசாத்துணை




✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 05-Aug-2024, 21:46:23 IST