சு. அனவரத விநாயகம் பிள்ளை
சு. அனவரத விநாயகம் பிள்ளை (செப்டம்பர் 20,1877 – 1940) தமிழறிஞர், ஆய்வாளர், அகராதித் தொகுப்பாளர், எழுத்தாளர், பதிப்பாளர். ஔவையின் வரலாற்றை ஆய்வு முறையில் எழுதியவர்.
பிறப்பு, கல்வி
அனவரத விநாயகம் பிள்ளை செப்டம்பர் 20,1877-ல் சுப்பிரமணியபிள்ளை, ஈஸ்வர வடிவு அம்மாள் இணையருக்குப் பிறந்தார். பள்ளிக் கல்விக்குப்பின் சென்னைக் கிறிஸ்தவக் கல்லூரியில் தத்துவத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றார். முதுகலையில் நச்சினார்க்கினியர் குறித்த ஆராய்ச்சிக் கட்டுரைய எழுதினார்.
தனிவாழ்க்கை
அனவரத விநாயகம் பிள்ளை கிறிஸ்தவக் கல்லூரியில் முதலில் பயிற்றுனராகவும், பிறகு பிராந்திய மொழிகள் துறையில் மேற்பார்வையாளராகவும் (Superintendent of Vernacular Studies) பணியாற்றினார். கொழும்புப் பல்கலைக் கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராகவும் பணியாற்றினார்.
இலக்கிய வாழ்க்கை
அனவரத விநாயகம் பிள்ளை ரெவரன்ட் ஜே. எஸ். சண்ட்லர் (Rev.T. S. Chandler) தலைமையில் சென்னைப் பல்கலைக்கழகம் ஏற்படுத்திய பேரகராதிக் குழுவின் உறுப்பினராக இருந்தார். சாண்ட்லருக்குப் பிறகு குழுவின் முதன்மையாசிரியராகப்(1922-1924) பொறுப்பேற்றார். இக்காலத்தில்தான் பேரகராதியின் 16 படிவங்கள் அச்சிடப் பட்டன.
அனவரத விநாயகம் பிள்ளை இயற்றிய நூல்கள் நச்சினார்க்கினியர், சைவ சித்தாந்த வரலாறு, ஒளவையார், ஏகநாதர், தமிழ்ப் பெருமக்கள் வரலாறு, மாணவர் தமிழகராதி, பழமொழி அகராதி முதலியவை. பல தமிழ் நூல்களை ஆராய்ச்சி முன்னுரைகளுடன் பதிப்பித்திருக்கின்றார். தமிழ்ப் புராணங்கள், தமிழ் மொழி முதலிய பல பொருள்களைப்பற்றிய கட்டுரைகளும் எழுதியிருக்கிறார்.
"ஒளவையின் வரலாற்றை முதன்முதலாக வரைமுறையில் எழுத முயன்றவர் அனவரதவிநாயகம் பிள்ளை" என்று தமிழண்ணல் குறிப்பிடுகிறார். அனவரத விநாயகம் பிள்ளை 'நீதி நூல் திரட்டு' என்னும் நூலுக்கு 'ஒளவையார் சரித்திரம்' என்ற தலைப்பில் 78 பக்கங்களில் முன்னுரை எழுதினார். அது தனிநூலாகவும் வெளிவந்துள்ளது. "ஒளவையார் கன்னட நாட்டிலும் சஞ்சரித்ததாக அந்நாட்டு விருத்தாந்தங்களால் தெரிகிறதென்பர்” என்றும் ஔவையைப் பற்றிக் குறிப்பிடுகிறார்.
நூல்கள்
- நச்சினார்க்கினியர்
- சைவ சித்தாந்த வரலாறு
- ஒளவையார்
- ஏகநாதர்
- தமிழ்ப் பெருமக்கள் வரலாறு (1934)
- மாணவர் தமிழகராதி
- பழமொழி அகராதி (10760 பழமொழிகள் அடங்கியது)
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
20-May-2024, 08:42:48 IST