under review

கொடிக்கவி

From Tamil Wiki

கொடிக்கவி மெய்கண்ட சாத்திரங்கள் என்னும் சைவசித்தாந்த நூல்களில் ஒன்று. சந்தான குரவர்களில் ஒருவரான உமாபதி சிவாசாரியார் இயற்றியது. சிதம்பரத்தில் கொடியேற்றுவதற்காகப் பாடப்பட்டது. ஐந்து பாடல்களில் சைவ சித்தாந்தத்தின் மூலக் கருத்துக்களை வெளிப்படுத்துவதாக அமைந்தது.

ஆசிரியர்

கொடிக்கவியை இயற்றியவர் சைவ சமயத்தின் சந்தானக் குரவர்களில் ஒருவரான உமாபதி சிவாசாரியார். மறைஞான சம்பந்தரின் மாணவர். சித்தாந்த அஷ்டகம் என்னும் எட்டு மெய்கண்ட சாத்திர நூல்களை எழுதியவர்.

தோற்றம், பெயர்க்காரணம்

சிதம்பரம் நடராஜருக்குப் பூசை செய்யும் உரிமை கொண்ட உமாபதி சிவம் , தீட்சிதர் அல்லாத மறைஞான சம்பந்தரைத் தன் குருவாக ஏற்றதால் மூவாயிரவர் சமூகத்திலிருந்து விலக்கி வைக்கப்பட்டு அவரது பூசை செய்யும் உரிமையும் மறுக்கப்பட்டது. இதனால் இவர் சிதம்பரத்தை விட்டு நீங்கி கொற்றவன்குடியில் வாழ்ந்துவந்தார்.

சைவ சித்தாந்தங்களின்படி கொடி மரம் உள்ள கோவில்களில் திருவிழாக்களை ரிஷபக் கொடி ஏற்றித் துவக்கி வைப்பது வழக்கம், உமாபதி சிவத்துக்கு உரிமையான சிதம்பரம் கோவிலில் கொடியேற்றும் முறை வேறொருவருக்குச் சென்றது. கோவில் விழாவின்போது எவ்வளவு முயன்றும் கொடி ஏறவில்லை. அசரீரியாக ஒலித்த நடராஜரின் கட்டளைப்படி அந்தணர்கள் உமாபதி சிவத்தை வரவழைத்துக் கொடியேற்றும்படி கேட்டுக் கொண்டனர். உமாபதி சிவம் கொடிக்கவியைப் பாட கொடி ஏறியது.

கொடி ஏறுவதற்காகப் பாடப்பட்டதால் 'கொடிக்கவி' எனப் பெயர் பெற்றது.

கொடிக்கவியில் கொடியேற்றம் ஆன்மாவின் தாழ்ந்த நிலையான மலபந்த நிலையிலிருந்து மேலே உயர்த்தி விழாமல் முக்திநிலையில் நிறுத்துதலைக் குறிப்பது.

நூல் அமைப்பு

கொடிக்கவி உமாபதி சிவத்தின் சித்தாந்த அஷ்டகம் என்னும் எட்டு நூல்களில் ஒன்று; மெய்கண்ட சாத்திரங்களில் மிகச்சிறியது. ஒரு கட்டளைக் கலித்துறைப் பாடலும், நான்கு வெண்பாக்களும் கொண்டது.

முதல் பாடல் முப்பொருள்களின் இயல்பையும், இரண்டாம் பாடல் பஞ்சாக்கரத்தையும் (ஐந்தெழுத்து), மூன்றாம் பாடல் பதியாகிய இறைவனின் மாயைகளுக்கு அப்பாற்பட்ட தன்மையையும், நான்காம் பாடல் தூலசூக்கும, அதிசூக்கும பஞ்சாக்கரங்களையும் (ஐந்தெழுத்தின் வேறு வடிவங்கள்) பற்றிக் கூறுகின்றன. ஐந்தாம் பாடல் கொடிக்கவி இயற்றப்பட்டதன் காரணத்தைக் கூறுகிறது. .

உள்ளடக்கம்

கொடிக்கவி சைவ சித்தாந்தத்தின் மூலக் கருத்துக்களை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. கொடியேற்றம் பெத்தாத்மா (ஐம்புலன்களாலும், பாசத்தாலும் கட்டுண்ட ஆத்மா) சகலநிலை(உடல் எடுத்த நிலை) யிலிருந்து சுத்த நிலைக்கு உயர்வதற்கான உருவகம். கொடிமரம் பதியையும், கொடிச்சீலையும் அதில் வரையப்பட்டுள்ள ரிஷபமும் பசுவையும், கயிறு பாசத்தையும், கொடியில் உள்ள மஞ்சள் நூல் திரோதான சக்தியையும் குறிக்கின்றன.

இறையாகிய பதி, ஆசைகளுக்கு மூலமான பாசம் இரண்டும் இருப்பது பசுவாகிய உயிரிடத்தில். அப்படி இரண்டும் இருந்தாலும், இறைசக்தியான பதி, உயிரை பாசங்கள் தாக்கா வண்ணம் அருள் புரிந்து கொண்டே இருக்கின்றது. உயிர் உலகியல் இன்பங்களில் ஈர்க்கப்பட்டு கீழ் நோக்கிச் செல்லாமல், பதியை நோக்கி மேலே செல்ல வேண்டும் என்பதை உணர்த்த இந்தக் கொடியைக் கட்டுகின்றேன் எனப் பாடுகின்றார்.

ஓம் எனும் மூல மந்திரத்திலிருந்து எழுகின்ற ஐந்தெழுத்து மந்திரமாகிய நமசிவய மற்றும் அவற்றிலிருந்து எழுகின்ற மற்ற பல மந்திர அட்சரங்கள், அவற்றிலிருந்து உருவாகும், ஒலிகள், மொழிகள், இவற்றையும் கடந்த மௌன நிலை ஆகிய அனைத்தும் உயிரோடு கலந்திருக்கின்ற பரம் பொருளையே உணர்த்துகின்றன என்கின்றார். இறைசக்தி எல்லையற்ற கருணை கொண்டது. உயிர்கள் மலங்கள் நீங்கி தெளிவு பெற்று, அந்த தெளிந்த அறிவுடனே மாறாமல் இருக்கின்ற நிலையே சிவப்பேறு என்ற கருத்தையே கொடியேற்றம் மறைமுகமாக விளக்குகின்றது.

சைவ ஆலயங்களில் கொடியேற்றத்தின்போது கொடிக்கவி ஓதப்படுகிறது.

பாடல்கள்

கட்டளைக் கலித்துறை

ஒளிக்கு மிருளுக்கு மொன்றே யிடமொன்று மேலிடிலொன்
றொளிக்கு மெனினு மிருளட ராதுள் ளுயிர்க் குயிராய்த்
தெளிக்கு மறிவு திகழ்ந்துள தேனுந் திரிமலத்தே
குளிக்கு முயிரருள் கூடும் படிக் கொடி கட்டினனே.

வெண்பா

பொருளாம் பொருளேது போதேது கண்ணே
திருளாம் வெளியே திரவே - தருளாளா
நீபுரவா வையமெலா நீயறியக் கட்டினேன்
கோபுர வாசற் கொடி.

வாக்காலு மிக்க மனத்தாலு மெக்காலுந்
தாக்கா துணர்வரிய தன்மையனை - நோக்கிப்
பிறித்தறிவு தம்மிற் பிறியாமை தானே
குறிக்குமரு ணல்கக் கொடி.

அஞ்செழுத்து மெட்டெழுத்து மாறெழுத்து நாலெழுத்தும்
பிஞ்செழுத்து மேலைப் பெருவெழுத்தும் நெஞ்சழுத்திப்
பேசு மெழுத்துடனே பேசா வெழுத்தினையுங்
கூசாமற் காட்டாக் கொடி.

அந்த மலமறுத்திங் கான்மாவைக் காட்டியதற்
கந்த அறிவை அறிவித்தங் - கிந்தறிவை
மாறாமல் மாற்றி மருவு சிவப் பேறென்றுங்
கூறாமல் கூறக் கொடி.

உசாத்துணை


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 10-Aug-2024, 13:50:41 IST