under review

நெஞ்சு விடு தூது (உமாபதி சிவம்)

From Tamil Wiki

To read the article in English: Nenju Vidu Thoothu (Umapathi Sivam). ‎

நெஞ்சு விடு தூது - உமாபதி சிவம்

நெஞ்சு விடு தூது (பொ.யு. 1311) உமாபதி சிவாசாரியார், தனது ஆசிரியர் மறைஞான சிவத்தின் பால் தனது நெஞ்சினைத் தூதாக விடுப்பதாக இயற்றப்பட்ட நூல். சைவசித்தாந்த நூல்களுள் ஒன்று. சாத்திர நூல்களில் இந்நூல் ஒன்றே சிற்றிலக்கிய வகையில் அமைந்துள்ளது. தமிழில் தோன்றிய முதல் தூது நூலாக இந்நூல் கருதப்படுகிறது.

நூல் தோற்றம்

நெஞ்சு விடு தூது நூல், சைவ சித்தாந்த அறிஞர் கொற்றவன்குடி உமாபதி சிவாசாரியாரால், பொ.யு. 1311-ல் இயற்றப்பட்டது. உமாபதி சிவாசாரியார், தனது ஞானாசிரியர் மறைஞான சிவத்தை இறைவனாகவும், தனது தலைவனாகவும் நினைத்து, தன்னைக் காதலியாகப் பாவித்து, தனது மனதை இறைவனின் அன்பையும் அருளையும் பெற்று வரத் தூதாக அனுப்புவதாக இந்நூல் இயற்றப்பட்டுள்ளது.

அஷ்டாவதானம் பூவை கலியாணசுந்தர முதலியாரின் உரையுடன், 1898-ல், சென்னை ஜீவகாருண்ய விலாச அச்சுக்கூடத்தில் நெஞ்சு விடு தூது நூல் பதிப்பிக்கப்பட்டது.

நூல் அமைப்பு

நெஞ்சு விடு தூது நூல் கலிவெண்பா யாப்பில் அமைந்துள்ளது. தூது என்னும் சிற்றிலக்கிய வகைமையில் அமைந்துள்ளது. சிறப்புப் பாயிரம் முதலில் இடம் பெற்றுள்ளது. நூலின் தலைவன், இறைவனாகிய சிவபெருமான் தான் என்பதால் சிவன் தொடர்பான செய்திகள் நூலில் இடம் பெற்றுள்ளன. சைவ சித்தாந்தத்தின் கொள்கையான பசு, பதி, பாச இயல்புகள் விளக்கப்பட்டுள்ளன.

பாடல்கள் மூன்று பிரிவுகளாக அமைந்துள்ளன. முதல் பிரிவில் இறைவனின் பெருமையும், பாசங்களால் பந்தத்திற்கு உள்ளாகி இருக்கும் உயிரின் தன்மைகளும் விளக்கப்பட்டுள்ளன. இறைவன், உயிர், தளை ஆகிய முப்பெரும் பொருள்களின் இயல்பை விரிவாக விளக்குகிறது முதற் பிரிவு.

இரண்டாம் பிரிவில், தலைவனாகிய இறைவனின் புகழ் தசாங்கங்களாக விளக்கப்பட்டுள்ளது. இறைவனாகிய சிவபெருமானின் பத்து சிறப்புக்களான மலை (குணக்குன்று), ஆறு (ஆனந்தம்), நாடு, ஊர், மாலை (கொன்றை), குதிரை, யானை, கொடி, முரசு, ஆணை ஆகியன இப்பகுதியில் விரித்துரைக்கப்பட்டுள்ளன.

மூன்றாம் பகுதியில் இறைவனை அடைகின்ற நோக்கில் மனம் குழம்பி மாயாவாதம், உலோகாயுதம், சமணம், பௌத்தம், ஸ்மார்த்தம் ஆகிய கொள்கைகளில் செல்லாமல், குறிக்கோள் மாறாமல் தனது தலைவனை அடைந்து அவனின் அருளைப் பெற வேண்டிய அவசியம் மனதுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

திருஞானசம்பந்தர், திருவள்ளுவர் போன்றோரது கருத்துக்களும், திருவுந்தியார் போன்ற நூல்களில் உள்ள கருத்துக்களும் எடுத்தாளப்பட்டுள்ளன. திருக்குறள் உலக வாழ்க்கையை சிறப்புற வாழ்வதற்கு உதவும் நூல் என்ற குறிப்பும் நூலில் இடம் பெற்றுள்ளது. இறைவனிடம் கொன்றை மாலை வாங்கி வருவதுடன் நூல் நிறைவடைகிறது.

பாடல் நடை

இறைவனின் இயல்பு

பூமேவும் உந்திப் புயல்வண்ணன் பொற்பதுமத்
தார்மேவும் மார்பன் சதுமுகத்தோன் - தாம்மேவிப்
பன்றியும் அன்னமுமாய்ப் பாரிடந்தும் வான்பறந்தும்
என்றும் அறியா இயல்பினான் அன்றியும்

இந்திரனும் வானோரும் ஏனோரும் எப்புவியும்
மந்தர வெற்பும் மறிகடலும் - மந்திரமும்
வேதமும் வேத முடிவின்விளை விந்துவுடன்
நாதமுங் காணா நலத்தினான் - ஓத
அரியான் எளியான் அளவிறந்து நின்ற
பெரியான் சிறியான்பெண் பாகன்

இறைவனது நிலை

வந்திருக்க வல்லான் மதியாதார் வல்லரணஞ்
செந்தழலின் மூழ்கச் சிரித்தபிரான் - அந்தமிலா
வேத முடிவில் விளைவில் விளைவிலொளி
யாதி யமல நிமலனருட் - போத

அறிவிலறிவை யறியு மவர்கள்
குறியுள் புகுதுங் குணவ - னெறிகொள்
வெளியில் வெளியில் வெளியன் வெளியி
லொளியி லொளியி லொளியன்

குரு உபதேசம்

காணக்கிடையாதான் காண்பார்க்குக் காட்சியான்
பாணர் கிலகு பலகையிட்டான் - சேணிற்
சிறந்த வுருவான் றிலுமாக் கெட்டா
நிறைந்த திருவருவாய் நிற்போன் - கறங்குடனே

சூறைசுழல் வண்டு சுழல்கொள்ளி வட்ட மன
மாறில் கருணையினான் மாற்றினா - ணீறணிந்த
மெய்ய னமல னிமலனருள் வீடளிக்கு
மையனறி வுக்கறி வாயினான் - பொய்யாற்பாற்

பொய்மையாய் நின்றான் புரிந்தவர்தந் நெஞ்சத்துண்
மெய்மையாய் நின்று விளங்கினான்...

மாலை வாங்குதல்

பூங்குன்றை வாங்கிப் புகழ்ந்துபுரி நெஞ்சமே
யீங்கொன்றை வாரா யினி.
வெம்பும் பிறவியலை வீழாமல் வீடளித்த
சம்பந்த மாமுனிவன் தார்வாங்கி - அம்புந்தும்
வஞ்சமே வும்விழியார் வல்வினையெல் லாமகல
நெஞ்சமே வாராய் நினைத்து.

மதிப்பீடு

சைவ சித்தாந்த சாத்திர நூல்களில் நெஞ்சுவிடு தூது நூல் ஒன்றே சிற்றிலக்கிய வகையில் அமைந்துள்ளது. சைவ சித்தாந்த சாத்திர இயல்புகளும் இறைவனின் பெருமைகளும், சிறப்பும் இந்நூலில் விரிவாக விளக்கப்பட்டுள்ளன. தமிழில் தோன்றிய முதல் தூது நூலாக நெஞ்சுவிடு தூது நூல் அறியப்படுகிறது.

உசாத்துணை


✅Finalised Page