under review

சமணம்

From Tamil Wiki
சமணப்படுகைகள் (கழுகுமலை)

சமணம் என்னும் சொல் 'சிரமண' என்னும் வடசொல்லின் திரிபு. சிரமணரை தமிழில் சமணர் என அழைத்தனர். இந்தியாவில் தோன்றிய தொன்மையான சமயங்களில் ஒன்று.

பொருள்

சமணர் (ஸ்ரமணர்) என்பதற்கு துறவிகள் என்று பொருள். துறவு பூண்டவரே வீடுபெறுவர் என வற்புறுத்திக் கூறுவதால் சமணம் எனப் பெயர் பெற்றது. இன்பதுன்பம் ஆகிய இரண்டையும் சமமாக ஏற்பவர்; நட்பு, பகை அற்றவர்; அன்பும் அருளும் நிறைந்தவர்; இறப்பையும் பிறப்பையும் பொருட்படுத்தாமல் உலகில் நல்லவற்றைச் செய்ய வேண்டும் என்பதற்காகத் தங்களின் எல்லாச் சுகங்களையும் துறந்தவர் என்றும் பொருள்படும். ஐம்புலன்களையும் தன்வயப்படுத்தியவர்; யான், எனது என்னும் செருக்கினை அழித்தவர்; எக்காரணத்தாலும் எவ்வுயிர்க்கும் தீங்கு நினையாதவர்; ஒழுக்கத்தை உயிரினும் மேலாகக் காப்பவர் என்ற விரிவான பொருள்படும்.

பொதுவாக வடஇந்தியாவில் மகாவீரர் காலத்திற்கு முன்பாக தன்னை வருத்தி தவம் செய்யும் எல்லாச் சமயத் துறவிகளையும் சிரமணர் என்று குறிப்பிடும் வழக்கம் இருந்துள்ளது. பிராகிருத மொழியில் ஸமண என்று அழைக்கப்பட்ட சொல்லே 'சிரமண' என்று சமஸ்கிருத மொழியில் மாறி வழங்கித் தமிழில் அமணர், சமணர் என்று வழங்கப்பட்டது. பொ.யு. 7-ஆம் நூற்றாண்டில் திருஞானசம்பந்தர் இவர்களை அமணர் என்று குறிப்பிட்டார். 'அமணன்' என்ற சொல் பொ.யு. 2-ம் நூற்றாண்டிற்கு முற்பட்ட மெட்டுப்பட்டித் தமிழ் பிராமிக் கல்வெட்டிலும், புகளூர்த் தமிழ்பிராமிக் கல்வெட்டிலும் சமணத்துறவியரைக் குறிக்க வழங்கப்பட்டுள்ளதைக் கூறுகிறது.

சமணசமயத் தோற்றம்

சரவணபெலகோலா

சமணசமயக் கொள்கைகளை உலகத்தில் பரவச் செய்ய தீர்த்தங்கரர்கள் தோன்றுகின்றனர் என்பது சமண சமய நம்பிக்கை. சமண சமயத்தின் தோற்றம் முதல் தீர்த்தங்கரராகிய ஆதிநாதரால் (விருஷபதேவர்/ஆதிபகவன் ) தோற்றுவிக்கப்பட்டது என்பது சமணர் கொள்கை. ஆனால் வரலாற்றாசிரியர்கள் சமண சமயம் இருபத்தி மூன்றாம் தீர்த்தங்கரராகிய பார்ஸ்வ நாதர் சமண சமயத்தைத் தோற்றுவித்தார் எனவும் இருபத்தி நான்காம் தீர்த்தங்கரராகிய வர்த்தமான மகாவீரர் சீர்திருத்தி அமைத்தார் எனவும் கருதினர். இவர்களுக்கு முன் இருந்த இருபத்தி இரண்டு தீர்த்தங்கரர்களும் கற்பனைப் பெரியார் என்று அழைத்தனர். மகாவீரர் காலத்தில் கௌதம புத்தர் வாழ்ந்தார். இவர்களின் தோற்றமும் எழுச்சியும் இந்திய வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தை, மறுமலர்ச்சியை கொணர்ந்தது.

தீர்த்தங்கரர்கள்

தீர்த்தங்கரர் என்பதற்குத் 'தம் ஆன்மாவைப் பிறவிக்கடலிலிருந்து கரையேற்றிக் கொண்டவர்' என்பது பொருள். இதுவரை 24 தீர்த்தங்கரர்கள் தோன்றியுள்ளார்கள் என்பதும் இனியும் 24 தீர்த்தங்கரர்கள் தோன்றுவர் என்பதும் சமணர்களின் நம்பிக்கை.

பார்க்க: சமண தீர்த்தங்கரர்கள்

சமணத்தின் தொன்மை

சமண சமயம் வேதகாலத்திற்கும் முற்பட்டது. நால்வகை வேதத்தில் பழமையானது என்று கருதப்படும் ரிக்வேதத்தில் சமண சமயத்தைப் பற்றிய குறிப்பு உள்ளது. ஆதி நாதரைப் போற்றும் தோத்திரங்கள் பல உள்ளன. யஜுர் வேதத்தில் நேமிநாதர் (22-ம் தீர்த்தங்கரர்) துதி உள்ளது. பதினெண் புராணங்களிலும் தீர்த்தங்கரர்கள் பற்றிய செய்திகள் உள்ளன. சிவபுராணம், அக்கினிபுராணம் ஆகியவற்றிலும் ஆதிபகவனின் துதியைக் காணலாம். சமண சமயம் சார்ந்த சாசனங்களும் இக்கருத்தினை உறுதி செய்கின்றன.

சமண வழிபாடு

தெய்வங்களாகத் தொழப்படுகின்ற 24 தீர்த்தங்கரர்களும் தம்மை வணங்குபவர்க்கு எதையும் தருவதோ, தவறு செய்தோரைத் தண்டிப்பதோ இல்லை. தீர்த்தங்கரர்கள் சென்ற பாதையில் அவர்கள் விளக்கும் நற்காட்சி, நல்ஞானம் இவற்றின் அடிப்படையில், நல்லொழுக்கத்தில் வாழ்ந்து, அதன்பின் தெய்வநிலை அடைவதற்காக சமணர்கள் வணங்குகிறார்கள். உருவ வணக்கம் சாவகர்களுக்கு (சமண இல்லறத்தார்) மிக முக்கியமானது. இல்லறத்தார் கோவிலுக்குச் சென்று வணங்குதல் அவர்தம் அன்றாடக் கடமைகளில் ஒன்று என சமணமதம் வலியுறுத்துகிறது.

சமணத்தின் வேறு பெயர்கள்

ஐம்புலன்களையும் இருவினைகளையும் ஜெயித்தவர் (வென்றவர்) என்பதால் தீர்த்தங்கரர், ஜினர் என்று போற்றப்படுகிறார். ஜினரைக் கடவுளாக உடைய மதம் ஜைன மதம் என்று அழைக்கப்பட்டது. இதை தமிழில் சமண மதம் என்பர். தீர்த்தங்கரரை, அருகபதவியை (பேரின்ப நிலை) அடைந்தவர் என்பதால் அருகன் என்பர். அருகனை வணங்குவோர் ஆருகதர் எனப்பட்டனர். அம்மதம் ஆருகதமதம் என்று வழங்கப்பட்டது. சமணர் நிக்கந்தர் என வழங்கப்பட்டனர். நிக்கந்தர் என்றால் பற்றற்றவர் என்று பொருள்படும். அதனால் சமணர் நிகண்டர் என்பர். சமண சமயம் நிகண்டமதம் எனப்பெயர்பெற்றது. அசோக (பிண்டி) மரத்தைப் போற்றுவது சமணர் வழக்கமாதலின் சமணர் பிண்டியர் என்றும் குறிக்கப்பட்டனர்.

மதங்கள் ஏகாந்த வாதம், அனேகாந்த வாதம் என இருவகைப்படும். ஒரு பொருளை ஒரு நோக்கில் மட்டும் பார்ப்பது ஏகாந்தவாதம், ஒரு பொருளைப் பல்வேறு நோக்கில் பார்ப்பது அனேகாந்தவாதம். சமணம் தவிர, பிற மதங்கள் ஏகாந்தவாதத்தைக் கூறுவன. சமணம் மட்டுமே அனேகாந்தவாதக் கொள்கையைக் கூறுவதால் அனேகாந்தவாதம் என்று அழைக்கப்பட்டது. "எப்பொருளையும் ஒரு நோக்கில் காண்பது முழுமையான உண்மையைத் தராது. பல கோணத்திலிருந்து பார்ப்பதன் மூலமே அப்பொருளின் முழுமையான உண்மையை அறிய முடியும்" என்பது சமணர்களின் கொள்கை. இதனால் சமணமதம் அநேகாந்தவாத மதம் என்றழைக்கப்பட்டது. அநேகாந்தவாதம் என்பதும் ஸியாத்வாதம் ஒரே பொருளில் வரும்.

வேறுபெயர்கள்

  • ஜினர்: ஜைனமதம்
  • அருகர்: அருகமதம்
  • நிக்கந்தர்: நிக்கண்ட மதம்
  • பிண்டியர்: பிண்டியர் மதம்
  • அநேகாந்தவாத மதம்
  • ஸியாத்வாத மதம்
சமண சமயத்தின் பிரிவுகள் (tamilvu)

சமண சமய கோட்பாடுகள்

சமணம் இவ்வுலகினைப் படைத்தத கடவுள் ஒருவர் உண்டு என்பதை நம்புவதில்லை. மனிதன் உயிர் (ஆன்மா), உடல் (ஜடம்) என்று இரு கூறுகளால் ஆனவன் என்றும் புற உலகான சடத்தை உயிர் கட்டுப்படுத்தி கர்ம வினைகளிலிருந்து விடுபட்டால் பிறவியற்ற நிலையை அது அடையும் என்றும் கடவுள் தன்மையை அடைந்த இதனையே சமணர்கள் வீடுபேறு என்றும் முக்திநிலை என்று கருதினர்.

ஆறு திரவியங்கள்
  • உயிர் (ஆன்மா)
  • புத்தலம்
  • தர்மம்
  • அதர்மம்
  • ஆகாயம்
  • காலம்
நவபதார்த்தங்கள்
  • ஜீவன் - உயிர்
  • அஜீவன் - உயிரற்ற சடப்பொருள்
  • புண்ணியம் - நல்வினை
  • ஆஸ்வரம்
  • பந்தம்
  • சம்வரை
  • நிர்ஜரை
  • மோட்சம்
மும்மணிகள்
  • நற்காட்சி
  • நல்ஞானம்
  • நல்லொழுக்கம்

சமணத்தின் பிரிவுகள்

தொடக்கத்தில் வழக்கத்தில் இருந்த திகம்பரச் சமணம் சுவேதாம்பர சமணம், ஸ்தானகவாசி சமணம் இரண்டாகப் பிரிந்தது. மூன்று பெரும் பிரிவுகளைக் கொண்டதாயிற்று.

திகம்பரச் சமணத் துறவியர் ஆடை அணியார். திக்குகளையே ஆடையாக உடுத்தியவர்கள். திகம்பரச் சமணக் கோயில்களில் உள்ள தீர்த்தங்கரர் சிலைகளும், திருவுருவங்களும் ஆடையுடுத்தப் பெறாமல் திகம்பரமாக இருக்கும். சுவேதாம்பரத் துறவியர் வெண்ணிற ஆடை அணிவர். திகம்பரச் சமணரும் சுவேதாம்பரச் சமணரும் உருவ வழிபாட்டினர். ஆனால் ஸ்தானகவாசியைச் சேர்ந்த சமணர் தம் கோயில்களில் சமண சமய ஆகம நூலையே வணங்கும் வழக்கமுடையர். ஆயினும் இவர்களுக்குள் அடிப்படை வேற்றுமை ஏதுமில்லை.

பிற்காலத்தில் திகம்பரர், சுவேதாம்பர பிரிவினரிடையேயும் சில உட்பிரிவுகள் தோன்றின. சங்கம், கணம், குலம், கச்சம், அன்வயம், வம்ச என பலவாறாக அழைக்கப்பட்டன. பிற்காலத்தில் தோன்றிய முக்கிய பிரிவுகள் பீஸபந்தா, தேரபந்தா, தாரணபந்தா, தோடபந்தி ஆகியவை. சுவேதம்பர பிரிவில் லோன்கச்சா பீசாமத, ஸ்தானகவாசி, தேராபந்தி ஆகிய பிரிவுகள் உள்ளன. திகம்பர பிரிவில் சேனகணம் நந்திசங்கம் திராவிட - திரமிள சங்கம், மூலசங்கம் ஆகிய முக்கியப் பிரிவுகள் உள்ளன.

சமணர் ஒழுக்கம்

இல்லறத்தில் உள்ளவர்கள் பின்பற்றும் ஒழுக்கத்தைச் சமணம் சாவகதருமம் (சிராவக தருமம்) என்றும் துறவிகள் கடைபிடிக்க வேண்டிய ஒழுக்கத்தை யதி தருமம் என்றும் சமணம் கூறுகின்றது. சமணப்பிரிவினரான திகம்பரர், ஸ்வேதம்பரர் ஆகிய இரு பிரிவினரிடையே இல்லற தர்மத்திலும், துறவற தருமத்திலும் சில மாறுபாடுகள் உள்ளன.

சாவகதருமம்

கொல்லாமை, பொய்யாமை, கள்ளாமை, பிறன்மனை நயவாமை, மிகுபொருள் விரும்பாமை ஆகிய அணுவிரதங்களை இல்லறத்தார் கடைபிடிக்க வேண்டும். இவை தவிர திக்விரதம், தேசவிரதம், அனர்த்த தண்டவிரதம் ஆகிய மூன்று திக்விரதங்களைக் கடைபிடிக்க வேண்டும். இவை தவிர குணாவிரதம் எனப்படும் சமாயிகம், புரோஷதோ உபவாசம், உபபோக பரிபோக பரிமாணவிரதம், அதித சிம்பாவிக விரதம் என்ற நான்கு விரதங்களைக் கடைபிடிக்க வேண்டும். மாதந்தோறும் நான்கு நாட்கள் தண்ணீர், உணவு உண்ணாமல் நோன்பிருக்க வேண்டும்.

யதி தருமம்
  • மகாவிரதங்கள் - 5
  • சமிதி - 5
  • ஐம்பொறியடக்கம் - 5
  • ஆவஸ்யகம் - 6
  • லோசம் - 1
  • திகம்பரம் - 1
  • நீராடாமை - 1
  • வாயைச் சுத்தம் செய்யாமை - 1
  • தரையில் படுத்தல் - 1
  • நின்றுண்ணல் - 1
  • ஒரேவேளை உண்ணல் - 1

திகம்பர சமணம் பெண்கள் ஆண்களாகப் பிறந்தே துறவு மேற்கொண்டு வீடுபேறு அடைய முடியும் என்று கருதுகிறது.

சமணத்தில் வழிபாடு

சமண சமயத்தில் கடவுள் வழிபாடு இல்லை. குறியீடுகள் வழிபாடுகள் தொடக்க காலத்தில் இருந்ததை மதுராவில் கங்காலிதிலா அகழாய்வு சான்றுகள் காட்டுகின்றன. சமணர்கள் தர்மசக்கரம், மானஸ்தம்பம், இந்திரதுவஜம், சைத்தியமரம், ஆயாகபட்டா (சிலாதலம்), ஸ்தூபம் முதலியவற்றை வழிபட்டுள்ளனர். சமவசரணம், பஞ்சமேரு, அஷ்டபாதம், சரணபாதுகை அஷ்டமங்கலச் சின்னங்கள் ஆகியவற்றை உருவமாக வடித்து வழிபட்டனர்.

பஞ்சபரமேஷ்டிகளை வணங்கும் பஞ்சமந்திர வழிபாடு சமண சமயத்தவரின் முக்கிய வழிபாடாக உள்ளது. அருகர், சித்தர், ஆச்சாரியார், உபாத்தியாயர், சாதுக்கள் என்ற ஐவரைப் போற்றும் வழிபாடு இது.

வட்டமான உலோகத்தட்டின் நடுவில் புடைப்புருவாக தீர்த்தங்கரரைச் சுற்றி வடித்து பீடம் ஒன்றில் அதனைப் பொருத்தி வைத்து சமணர்கள் வழிபடுகின்றனர். பஞ்சபரமேஷ்டி உருவங்களோடு சமண ஆகமம், சமண அறச்சக்கரம், ஜீனபிம்பம், ஜீனசைத்யாலயம் முதலிய நான்கு உருவங்களையும் சேர்த்து ஒன்பது உருவங்களாக ஒரே உலோகத்தகட்டில் புடைப்புருவங்களாக வடித்து வழிபடுவது நவதேவதை வழிபாடு. ஒவ்வொரு தீர்த்தங்கரருக்குத் தனியாகவும் அல்லது கூட்டாகவும் கோயில் அமைத்து வழிபடுகின்றனர். சமணர் கோயில் வளாகத்தில் தீர்த்தங்கரர்களுக்குக் காவலாக யட்சன், யட்சி ஆகியோருக்கு தனிச் சிற்றாலயம் அமைத்தும் வழிபடுகின்றனர். நவகிரகங்களை வழிபடும் வழக்கம் சமணர்களிடம் பிற்காலத்தில் தோன்றியது.

சமண ஆகமங்கள்

சமண சமயத்தில் முக்கிய கோட்பாடுகளையும் நடைமுறைகளையும் கூறூம் புனித நூற்கள் உள்ளன. மகாவீரரின் மறைவிற்குப் பின் பாடலிபுத்திரம், மதுரா, வலபீ முதலிய இடங்களில் நடைபெற்ற சமண முனிவர்களின் கூட்டத்திற்குப் பின்னர் பொ.யு. 5-ம் நூற்றாண்டில் ஆகமம், சுருதம் எனப்படும் சமணக்கோட்பாட்டு மறை நூல்கள் தொகுக்கப்பட்டன. இவை பூர்வாகமம், அங்க ஆகமம் என இரு வகைப்படும். பூர்வாகமம் பதினான்கு பிரிவுகளையுடையது. அங்க ஆகமம் பன்னிரெண்டு பிரிவுகளையுடையது.

சமணப் பெரியோர்களின் வரலாற்றையும், தத்துவத்தையும் நடைமுறைகளையும் கூறும் நூல்கள் எழுதப்பட்டுள்ளன. ஸ்ரீபுராணம், மேருமந்திரபுராணம், திரிசஸ்டிசலாக்கா புருஷசரிதம், தத்துவார்த்த சூத்திரம், திரவிய சங்கிரகம், சமணசுத்தம், சமயசாரம், பஞ்சாஸ்திகாயசாரம் ஆகியவை வட இந்தியாவில் தோன்றியவை. திருக்குறள், நாலடியார், நான்மணிக்கடிகை, சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி ஆகியவை சமணர்களால் இயற்றப்பட்டதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

தென்னகத்தில் சமணம்

சந்திரகுப்த மௌரியர் அவரின் குருவாக அமைந்தவர் பத்திரபாகு என்னும் சமண முனிவரின் மூலம் சமணத்தில் பற்று கொண்டு அரசைத் தந்துவிட்டு துறவறம் மேற்கொண்டான். வட இந்தியாவில் கொடிய பஞ்சம் உண்டாகும் என்பதை முன்னதாக அறிந்து பத்திரபாகு முனிவர் அங்கிருந்து தென்னகம் வந்தார். பன்னிரண்டு ஆண்டுகள் நீடித்த அப்பஞ்சத்தால் ஜைன சங்கத்தார் பல ஆயிரம் துறவிகளுடன் தென்னிந்தியாவில் குடிபுகுந்தனர். தென்னகத்தில் குடியேறிய முனிவர்கள் அவர்களுடைய மொழி, பண்பாடு, நாகரிகம் ஆகியவற்றை நன்கு அறிந்து கொண்டதோடு அவற்றில் நல்ல பயிற்சியும் பெற்றனர். அவர்கள் சங்கம் சமண சமயக் கொள்கைகளோடு தமிழ், கலை, இலக்கியம் ஆகியவற்றையும் வளர்க்கத் தொடங்கியது.

தென்திசை நோக்கி வந்த பத்திரபாகு முனிவர் மைசூர் நாட்டில் வந்து வெள்ளைக்குளம் என்னும் பொருள்படும் சிரவணபௌகுளாவில் தம்முடன் வந்த முனிவர்களுடன் தங்கினார். தங்கியபின், தம் சீடர்களில் ஒருவரான விசாகமுனிவர் என்பவரை அனுப்பிச் சோழ, பாண்டிய நாடுகளில் சமண சமயக் கொள்கைகளைப் பரவச் செய்தார். பின்னர் சல்லேகனை நோன்பிருந்து பொ.மு. 297-ல் வீடுபேறு பெற்றார். இவரது சீடராகிய சந்திரகுப்தரும் அங்கேயே சல்லேகனை நோன்பிருந்து உயிர் நீத்தார்.

சமண தீர்த்தங்கரர்கள்

தமிழகத்தில் சமணம்

பாண்டிய நாட்டில் முன்பே சமணமதம் புழக்கத்தில் இருந்ததால் வடநாட்டுத் துறவிகளின் வருகை ஊக்கத்தை ஏற்படுத்தியது. தமிழகத்தில் பொ.மு. 3-ம் நூற்றாண்டிலேயே சமண சமயம் பரவி இருந்தது என்பதை பிராமிக் கல்வெட்டுகளின் வழி அறியலாம். இத்தகைய கல்வெட்டுகள் தமிழகத்தில் அச்சரப்பட்டி, மாங்குளம், திருப்பரங்குன்றம், அழகர்மலை முதலிய இடங்களில் காணப்படுகின்றன. கல்வெட்டுக்களின் வழி கர்நாடக மாநிலத்திலிருந்து கொங்கு நாட்டின் வழியாக முதலில் பாண்டி மண்டலத்திலும், பின்னர் தொண்டை மண்டலத்திலும் சமணம் பரவியிருக்கலாம் என ஆய்வாளர்கள் கணிக்கிறார்கள்.

சமணமத அழிவிற்கான காரணங்கள்

  • கொல்லாமைக் கொள்கை
  • திகம்பரர், சுவேதம்பரர் என்ற பிரிவுகளாக சமணமத உடைவு
  • பல்லவர், சோழர், பாண்டியர்களின் தாக்குதல்
  • சாதிப் பிரிவுகளின் தோற்றம்
  • முடியைப் பிடுங்குதல், பட்டினி போன்ற கடுமையான கட்டுப்பாட்டுக் கொள்கைகள்
  • சைவ சமயம் மீண்டெழுந்தமை
  • பிரபலமாகாத சீடர்கள்
  • புத்த சமய வளர்ச்சி
  • நாயன்மார், ஆழ்வார்களின் பக்தி நெறி
சமணர் கழுவேற்றம்

நின்றசீர்நெடுமாறன் மதுரையை ஆண்ட காலத்தில் சமணர்கள் நாயன்மார்களில் ஒருவரான திருஞான சம்பந்தரிடம் வாதத்தில் தோற்று கழுவேறினார்கள் என்று பெரியபுராணம் நூலில் உள்ள குறிப்புகள் மூலமாக அறியலாம்.

சமணமதக் கொடைகள்

  • சமண இலக்கிய நூல்கள் பாலி, பிராகிருதம், தமிழ் போன்ற மொழிகளில் உருவாயின.
  • சமுதாயத்தில் மக்களிடையே ஏற்றத் தாழ்வுகள் குறைய ஆரம்பித்தன.
  • கல்வி மறுக்கப்பட்டோருக்கு சமணக் கல்வி அளிக்கப்பட்டது.
  • இராஜஸ்தான் மவுண்ட் அபுவில் உள்ள பில்வாரா ஆலயம் கட்டப்பட்டது.
  • எல்லோரா, பண்டேல்கண்டு ஆகிய இடங்களில் உள்ள குகைக் கோயில்கள் கட்டப்பட்டன.
  • விலங்குகள் பலியிடப்பட்டது குறைய ஆரம்பித்தது.

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 06-Mar-2023, 16:39:52 IST