தத்துவ நாதர்
- தத்துவ என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: தத்துவ (பெயர் பட்டியல்)
தத்துவ நாதர்( பொ.யு. 14-ம் நூற்றாண்டு) சைவ சித்தாந்த சாத்திரங்கள் பதினான்கில் பதின்மூன்றாவதாக எண்ணப்படும் உண்மைநெறி விளக்கத்தை இயற்றியவர்.
வாழ்க்கைக் குறிப்பு
தத்துவ நாதர் சீர்காழியில் வாழ்ந்தவர். சிற்றம்பல நாடிகளின் மாணவர் என்பது
எண்ணும் அருள்நூல் எளிதின் அறிவாருக்கு
உண்மை நெறிவிளக்கம் ஓதினான் -வண்ணமிலா
தண்காழித் தத்துவனார் தாளே புனைத்தருளும்
நண்பாய தத்துவ நாதன்
என்னும் உண்மை நெறி விளக்கத்தின் பாயிரப் பாடலாலும், இருபா இருபஃது உரையில் இறுதியில் காணும் பின்வரும் பாடலாலும் விளங்கும்.
இருபா இருபது உரையெழுதினோன்முன்
ஒருவா விகற்பம் உணர்ந்தோன் -அருளுடம்பாம்
பண்புடைய சிற்றம் பலநாடி தாள்பணிவோன்
சண்பைநகர்த் தத்துவ நாதன்
இவரது வாழ்க்கை பற்றிய வேறு குறிப்புகள் எதுவும் அறியவரவில்லை.
ஆன்மிக வாழ்க்கை
தத்துவ நாதர் சிற்றம்பல நாடிகளின் மாணவர். உண்மைநெறி விளக்கம் என்னும் சைவ சித்தாந்த சாத்திர நூலை எழுதினார். இந்த நூலை உமாபதி சிவம் செய்தார் என்ற கருத்தும் அறிஞர்களிடையே உண்டு. இந்நூல் ஆறு பாடல்கள் உள்ளன. ஆன்மா ஆணவமலங்களால் கட்டுண்ட கேவலநிலை, வினையை நுகரும் சகலநிலை, வினைமாசுகள் நீங்கி முக்தி பெறும் சுத்தநிலை ஆகிய மூன்று நிலைகளிலும் படிப்படியாக வளர்ச்சி பெறுவதை தசகாரியம் என்னும் பத்து நிலைகளாக விளக்குகிறார் தத்துவ நாதர். உண்மை நிலை விளக்கத்தில் உள்ள ஆறு பாடல்களும் தசகாரியங்கள் என்னும் உண்மைகளை விளக்குவதால் இந்நூல் இப்பெயர் பெற்றது. இந்நூலுக்குப் பல உரைகள் உள்ளன.
தத்துவநாதர், அருணந்தி சிவாசாரியார் பாடிய இருபா இருபஃதுக்குச் சிறப்பான உரை எழுதியுள்ளார். இந்த உரை, மெய்கண்ட சாத்திர நூல்களுக்கு எழுதப்பட்ட உரைகள் அனைத்திலும் காலத்தால் மிகப் பழமையானது எனக் கருதப்படுகிறது.
நூல்கள்
- உண்மை நெறி விளக்கம்
- இருபா இருஃபது உரை
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
14-Feb-2024, 02:56:30 IST