under review

கண்ணப்ப நாயனார்

From Tamil Wiki
கண்ணப்ப நாயனார் (ஓவியம்: அமரர் எஸ். மாலையப்பன்)

கண்ணப்ப நாயனார், சைவ சமய அடியார்களாகிய 63 நாயன்மார்களில் ஒருவர்.

வாழ்க்கைக் குறிப்பு

பொத்தப்பி நாட்டில் உடுப்பூர் என்னும் ஊரில் வாழ்ந்த வேடர் குலத் தலைவன் நாகன். அவன் மனைவி தத்தை. முருகனை வேண்டி அவர்களுக்குப் பிறந்த குழந்தைக்கு ‘திண்ணன்’ என்று பெயரிட்டு வளர்த்தனர். திண்ணன் வேடர்களுக்கு உரிய பயிற்சிகளைப் பெற்றார். வேட்டையாடுவதில் வல்லவரானார். நாளடைவில் திண்ணன் அந்த வேடுவர் குல மக்களின் தலைவரானார். வேட்டைத் தொழிலைத் திறம்படச் செய்து, கொடிய மிருகங்களிடமிருந்து வேடுவர் குல மக்களைக் காத்தார்.

தொன்மம்/சிவனின் ஆடல்

ஒருநாள் குலவழக்கப்படி வேட்டைக்குப் புறப்பட்டார் திண்ணனார். நாணன், காடன் என்ற இரு வேடர்கள் திண்ணனாருக்குத் துணையாக வந்தனர். பல கொடிய மிருகங்களை அவர்கள் வேட்டையாடினர். அந்நிலையில் ஒரு பெரிய காட்டுப் பன்றி அவர்கள் வலையில் சிக்கி அதிலிருந்து தப்பி ஓடியது. கண்ணப்பர் அதனைத் துரத்திக் கொண்டு ஓடினார். இறுதியில் அதனைக் கொன்று, துணைவர்களிடம் அதனைப் பக்குவமாகச் சமைக்கச் சொன்னார். மூவரும் திருக்காளத்தி மலைச் சாரலை அடைந்தனர்.

அந்த மலையைக் கண்டதும் அம்மலை உச்சிக்குச் செல்ல விரும்பினார் திண்ணப்பர். அங்கு குடுமித் தேவர் இருப்பதாக நாணன் கூறவும் விருப்பத்துடன் மலை ஏறிச் சென்றார். கல்வியறிவு இல்லாத, வெட்டு; குத்து, கொல் என்பதைத் தவிர வேறொன்றும் அறியாத திண்ணனார், தன் உள்ளத்தில் தோன்றிய ஓர் இனம் புரியாத உணர்ச்சியால் மலை ஏறி உச்சிப்பகுதிக்கு வந்தார். குடுமித் தேவர் என அழைக்கப்படும் சிவலிங்க மூர்த்தத்தைக் கண்டார். பல காலம் காணாமல் இருந்த தாயைக் கண்ட குழந்தை போல் ஓடிப் போய் சிவலிங்கத்தைக் கட்டிக் கொண்டார். கொடிய மிருகங்கள் வாழும் காட்டில் குடுமித் தேவர் தனியாக இருப்பது கண்டு வருந்தினார்.

சிவபெருமானுக்கு பூசை செய்யப்பட்டிருப்பதைக் கண்டு தானும் பூசை செய்ய விரும்பினார். சிவபெருமானுக்கு யார் உணவளிப்பது என்று யோசித்தவர், ’நானே போய்க் கொண்டு வந்து இவருக்கு ஊட்டுவேன்’ என்று முடிவு செய்து அங்கிருந்து புறப்பட்டார். பக்குவம் செய்த பன்றி இறைச்சியை வாயில் போட்டு அதக்கிப் பார்த்து, அதில் சுவையானதை தனியே எடுத்து வைத்துக் கொண்டார். தனது வாயில் நீரை முகந்து கொண்டார். காட்டுப் பூக்களைப் பறித்துக் கொண்டு சிவபெருமானிடம் சென்றார்.

பூஜை செய்யும் முறைகளை அறியாத திண்ணப்பர் தனது செருப்புக் கால்களால் சிவலிங்கத்தின் மீது உள்ள வாடிய பூக்களை அகற்றினார். வாயில் உள்ள நீரினால் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்தார். பின் தான் ருசித்துத் தனியாக எடுத்து வைத்திருந்த பன்றி இறைச்சியை இறைவனுக்குப் படைத்து உண்ணுமாறு வேண்டினார். விடிய விடிய இறைவனுக்குக் காவல் நின்றார். பொழுது புலர்ந்தும் இத்தேவருக்குப் பசியாற்ற இனிய இறைச்சியைக் கொண்டுவர வேண்டும் என்று எண்ணி மலையிலிருந்து கீழிறங்கிச் சென்றார்.

இவ்வாறு அவர் செல்வதும், அவர் சென்ற பிறகு தினமும் சிவபெருமானுக்குப் பூசை செய்யும் சிவகோசரியார் எனும் அந்தணர் வந்து அதனைச் சுத்தம் செய்து வழிபட்டுச் செல்வதும், அதன் பிறகு திண்ணனார் வந்து இறைச்சி படைத்துத் தொழுவதும் தினசரி வழக்கமானது. இது பல நாட்களாகத் தொடர்ந்ததால் சிவகோசரியார் மனம் கலங்கி, சிவபெருமானிடம் முறையிட்டுக் கொண்டார்.

அவர் கனவில் தோன்றிய சிவபெருமான், திண்ணப்பனார் அன்பு மிகுதியால் செய்யும் செயல்களே இவை என்று கூறி, மறுநாள் ஒளிந்திருந்து பார்க்கச் சொன்னார். அவ்வாறே மறுநாள் காலை சிவகோசரியார் இறைவனைப் பூஜித்துவிட்டு ஒரு மரத்தின் பின்னால் மறைந்துகொண்டார்.

திண்ணப்பர் அங்கு வந்து வழக்கம் போல் தனது வழிபாட்டைச் செய்தார். திண்ணப்பரின் பக்தியை உலகுக்கு உணர்த்த எண்ணிய சிவபெருமான், சிவலிங்கத்தின் ஒரு கண்ணில் குருதி வடியச் செய்தார். பதறிய திண்ணப்பர் இறைவனது கண்ணைத் துடைத்தார். ஆனாலும் ரத்தம் வருவது நிற்கவில்லை. பச்சிலை வைத்துக் கட்டலாம் என்று நினைத்து சில மூலிகைகளைப் பறித்து வந்து கண்ணில் அப்பினார். அப்போதும் ரத்தம் பெருகுவது நிற்கவில்லை. ‘ஊனுக்கு ஊனே மருந்து’ என்று எண்ணிய திண்ணப்பர், அம்பு ஒன்றால் தன் வலக்கண்ணைத் தோண்டி விழியைப் பெயர்த்தெடுத்து குருதி பெருகிக்கொண்டிருந்த இறைவனின் வலது கண்ணில் அப்பினார். உடனே ரத்தம் நின்றது. மகிழ்வுற்ற திண்ணப்பர் ஆனந்தக் கூத்தாடினார். இந்நிலையில் சிவபெருமான் தனது மறு கண்ணிலும் குருதி பெருகச் செய்தார்.

அதனைக் கண்ட திண்ணனார், ‘இதற்குத் தக்க மருந்து என்னிடம் உள்ளது. இன்னும் ஒரு கண் எனக்கு இருக்கிறதே, அதையும் தோண்டி இக்கண்ணில் அப்புவேன்’ என்றார். ஏற்கனவே ஒரு கண்ணை இழந்திருப்பவர், மற்றொரு கண்ணையும் இழந்தால் இறைவனின் கண் இருக்கும் இடம் தெரியாது, தன் கண்ணை அங்கே அப்ப முடியாது என்பதால் அதனை அடையாளம் வைத்துக் கொள்வதற்காக, இறைவனின் இடக் கண்ணில் தம்முடைய காலை ஊன்றிக் கொண்டார். அம்பை எடுத்துத் தம் கண்ணைத் தோண்ட முற்பட்டார். அச்செயல் பொறுக்க மாட்டாத சிவபெருமான், உடனே தன் திருக்கையை நீட்டி, “நில்லு கண்ணப்ப.. நில்லு கண்ணப்ப... என் அன்புடைத் தோன்றல் நில்லு கண்ணப்ப...” என்று சொல்லி, அக்கையைப் பிடித்துத் தடுத்தாட் கொண்டார். பின், “கண்ணப்பா, நீ எப்பொழுதும் என் வலப் பாகத்தில் நின்றிருப்பாயாக!” என்று அருள் செய்தார். தேவர்கள் பூமாரி பொழிந்தனர்.

மேற்கண்ட நிகழ்வைக் கண்ட சிவகோசரியார் திண்ணப்பரின் அன்பையும் இறைவனின் கருணையையும் எண்ணி வியந்தார்.

திண்ணப்பர், தன் கண்களை இறைவனுக்குத் தந்து கண்ணப்ப நாயனார் ஆனார்.

கலை மலிந்த சீர் நம்பி கண்ணப்பற்கு அடியேன் - சுந்தரர் (திருத்தொண்டத் தொகை)

பாடல்கள்

பெரிய புராணத்தில் இப்புராணக் கதையை விளக்கும் பாடல்கள்:

திண்ணப்பர் கொடிய மிருகங்களை வேட்டையாடுதல்

துடி அடியன மடி செவியன துறு கயமுனி தொடரார்
வெடி பட விரி சிறு குருளைகள் மிசை படு கொலை விரவார்
அடி தளர் உறு கரு உடையன அணை உறு பிணை அலையார்
கொடியன எதிர் முடுகியும் உறு கொலை புரி சிலை மறவோர்

திண்ணப்பரை இறைவன் ஆட்கொள்ளல்

திங்கள் சேர் சடையார் தம்மைச் சென்றுஅவர் காணா முன்னே
அங் கணர் கருணை கூர்ந்த அருள் திரு நோக்கம் எய்தத்
தங்கிய பவத்தின் முன்னைச் சார்பு விட்டு அகல, நீங்கிப்
பொங்கிய ஒளியின் நீழல் பொருஇல் அன்பு உருவம் ஆனார்

திண்ணனாரின் பெருமையை, சிவகோசரியருக்குச் சிவபெருமான் கூறுதல்

அவனுடைய வடிவு எல்லாம் நம் பக்கல் அன்பு என்றும்
அவனுடைய அறிவெல்லாம் நமை அறியும் அறிவு என்றும்
அவனுடைய செயல் எல்லாம் நமக்கு இனியவாம் என்றும்
அவனுடைய நிலை இவ்வாறு அறி நீ என்று அருள் செய்தார்

சிவபெருமான் திண்ணப்பருக்கு அருள் புரிதல்

செங் கண் வெள் விடையின் பாகர் திண்ணனார் தம்மை ஆண்ட
அங் கணர் திருக் காளத்தி அற்புதர் திருக்கை அன்பர்
தம் கண் முன் இடக்கும் கையைத் தடுக்க, மூன்று அடுக்கு நாக
கங்கணர் அமுதவாக்குக் 'கண்ணப்ப நிற்க' என்ற.
கானவர் பெருமானார் தம் கண் இடந்து அப்பும் போதும்
ஊனமுது உகந்த ஐயர் உற்று முன் பிடிக்கும் போதும்
ஞான மா முனிவர் கண்டார் நான்முகன் முதலாய் உள்ள
வானவர் வளர் பூமாரி பொழிந்தனர் மறைகள் ஆர்ப்ப
பேறு இனி இதன் மேல் உண்டோ பிரான் திருக் கண்ணில் வந்த
ஊறு கண்டு அஞ்சித் தம் கண் இடந்து அப்ப உதவும் கையை
ஏறு உயர்த்தவர் தம் கையால் பிடித்துக் கொண்டு 'என் வலத்தில்
மாறு இலாய்! நிற்க' என்று மன்னு பேர் அருள் புரிந்தார்.

குருபூஜை

கண்ணப்ப நாயனாரின் குருபூஜை, சிவாலயங்களில், ஒவ்வோராண்டும், தை மாதம், மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் நடைபெறுகிறது.

உசாத்துணை


✅Finalised Page