under review

சாக்கிய நாயனார்

From Tamil Wiki
சாக்கிய நாயனார் (ஓவியம்: அமரர் எஸ். மாலையப்பன்)

சாக்கிய நாயனார், சைவ சமய அடியார்களாகிய 63 நாயன்மார்களில் ஒருவர்.

வாழ்க்கைக் குறிப்பு

சாக்கிய நாயனார், திருச்சங்கமங்கை என்னும் தலத்தில் வேளாளர் குலத்தில் பிறந்தார். மானுடப் பிறவியிலிருந்து விடுதலை பெறுவதை தனது நோக்கமாகக் கொண்டார். அதற்காக காஞ்சிபுரம் தலத்தை அடைந்தார். சாக்கியர்களைச் (பௌத்த சமயத்தினர்) சார்ந்து அவர்கள் தம் மதம் சேர்ந்தார். தத்துவத்தின் வழி வகைகளை ஆராய்ந்தார். அதுபோலவே பிற சமயத்தின் நூல்களையும் கற்றுத் தெளிந்தார்.

தனது ஆய்வின் முடிவில், சிவனின் அருள் கை கூடி, சைவ சமயமே உண்மைச் சமயம் என்பதை அறிந்தார். சிவனே மெய்ப்பொருள் என்ற உண்மையை உணர்ந்தார். அதுமுதல் சிவனிடத்தும் அவனது அடியார்களிடத்தும் அன்பு பூண்டவரானார். உடையில் பௌத்த சமயத்தைச் சார்ந்தவராய் இருந்தாலும், உள்ளத்தில் சிவபெருமானை வழிபட்டார். தினமும் சிவதரிசனத்திற்குப் பின்னர் தான் உண்பது என்ற பழக்கத்தைக் கை கொண்டார்.

தொன்மம்/சிவனின் ஆடல்

ஒருநாள் சாக்கிய நாயனார் தான் செல்லும் வழியில் சிவலிங்கம் ஒன்று வழிபாடு ஏதுமின்றி இருப்பதைக் கண்டார். இன்னது செய்கின்றோம் என்று அறியாது களிப்புற்ற நிலையில், கீழே கிடந்த கல் ஒன்றினை எடுத்து, அதை மலராக நினைத்து, சிவனைப் பூசிப்பதாய்க் கருதி, சிவலிங்கத்தின் மீது எறிந்தார். குழந்தைகள் உள்ளன்போடு இகழும்படியான செயல்களைச் செய்தாலும் அதைத் தந்தை பெரும் குற்றமாகக் கருதாதது போல, அன்பின் மிகுதியால் சாக்கிய நாயனார் செய்த செயலை, சிவபெருமான் மகிழ்ந்து அன்போடு ஏற்றுக் கொண்டார்.

மறுநாளும் அவ்வாறே சிவனைக் கல்லால் எறிந்து வழிபட்டார். சிவனைக் கல்லால் எறிந்து வழிபடுவதையே அவர் தனது வழிபாடாகத் தொடர்ந்து செய்து வந்தார். மற்றவர்கள் பார்வையில் அவர் எறிந்தது ’கல்’ ஆக இருந்தாலும், சிவபெருமான் அதனை மலராகவே கருதி ஏற்றுக் கொண்டார்.

ஒரு நாள் சாக்கிய நாயனார் தனது சிவ வழிபாட்டை மறந்து விட்டு உணவு உண்பதற்காக அமர்ந்தார். திடீரென்று. தான் அன்று சிவவழிபாடு செய்யவில்லை என்ற எண்ணம் தோன்ற, உடன் விரைந்து புறப்பட்டார். சிவலிங்கத்தைக் கண்டு வணங்கியவர், வழக்கம் போல் அன்பின் மிகுதியால் கல்லை எடுத்து எறிந்தார். அவரது அன்பிற்கு மெச்சிய இறைவன் வானில் பார்வதி தேவியுடன் காட்சி அளித்தார். சாக்கிய நாயனார், இரு கரம் கூப்பி, இறைவனைப் பணிந்து வணங்கினார். சிவபெருமான் அவருக்கு சிவ சாயுஜ்ஜியம் அருளி, மீண்டும் பிறவாப் பேரின்பம் அளித்து, தனது திருவடி நிழலில் இணைத்துக் கொண்டார்.

வார் கொண்ட வன முலையாள் உமை பங்கன் கழலே மறவாது கல் எறிந்த சாக்கியற்கும் அடியேன் - சுந்தரர் (திருத்தொண்டத் தொகை)

பாடல்கள்

பெரிய புராணத்தில் இப்புராணக் கதையை விளக்கும் பாடல்கள்:

சிவநெறியே உண்மை நெறி என சாக்கிய நாயனார் உணர்ந்தது

அந் நிலைமைச் சாக்கியர்தம் அரும் கலை நூல் ஓதி அது
தன் நிலையும் புறச் சமயச் சார்வுகளும் பொருள் அல்ல
என்னும் அது தெளிந்து ஈசர் அருள் கூட 'ஈறு இல் சிவ
நல் நெறியே பொருள் ஆவது' என உணர்வு நாட்டுவார்

உடையில் பௌத்த சமயத்தவராய் இருந்து சிவனை வழிபட்டது

'எந் நிலையில் நின்றாலும் எக் கோலம் கொண்டாலும்
மன்னிய சீர்ச் சங்கரன் தாள் மறவாமை பொருள்' என்றே
துன்னிய வேடம் தன்னைத் துறவாதே தூய சிவம்
தன்னை மிகும் அன்பினால் மறவாமை தலை நிற்பார்

சிவலிங்கத்தைக் கல்லெறிந்து வழிபட்டது

நாள் தோறும் சிவலிங்கம் கண்டு உண்ணும் அது நயந்து
மாடு ஓர் வெள் இடை மன்னும் சிவலிங்கம் கண்டு மனம்
நீடு ஓடு களி உவகை நிலைமை வரச் செயல் அறியார்
பாடு ஓர் கல் கண்டு அதனைப் பதைப்போடும் எடுத்து எறிந்தார்

சாக்கிய நாயனாருக்கு சிவபெருமான் காட்சியும் அருளிச் செயலும்

கொண்டது ஒருகல் எடுத்துக் குறிகூடும் வகை எறிய
உண்டி வினை ஒழித்து அஞ்சி ஓடி வரும் வேட்கை யொடும்
கண்டு அருளும் கண்நுதலார் கருணை பொழி திருநோக்கால்
தொண்டர் எதிர் நெடும் விசும்பில் துணைவி யொடும் தோன்றினார்.
மழ விடைமேல் எழுந்து அருளி வந்த ஒரு செயலாலே
கழல் அடைந்த திருத்தொண்டர் கண்டு கரம் குவித்து இறைஞ்சி,
விழ, அருள் நோக்கு அளித்து அருளிமிக்க சிவலோகத்தில்
பழ அடிமைப் பாங்கு அருளிப் பரமர் எழுந்து அருளினார்.

குருபூஜை

சாக்கிய நாயனாரின் குருபூஜை, சிவாலயங்களில், ஒவ்வோராண்டும், மார்கழி மாதம், பூராட நட்சத்திரத்தில் நடைபெறுகிறது.

உசாத்துணை✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 04-May-2023, 06:42:21 IST