under review

கழற்சிங்க நாயனார்

From Tamil Wiki
கழற்சிங்க நாயனார் (ஓவியம்: அமரர் எஸ். மாலையப்பன்)

கழற்சிங்க நாயனார், சைவ சமய அடியார்களாகிய 63 நாயன்மார்களில் ஒருவர்.

வாழ்க்கைக் குறிப்பு

பல்லவர் குலத்தில் பிறந்தவர் கழற்சிங்க நாயனார். காஞ்சிபுரத்திலிருந்து அரசாட்சி செய்து வந்தார். இவர் சிறந்த சிவபக்தராகத் திகழ்ந்தார். தனது திரண்ட பொருட்களை சிவாலய வழிபாட்டிற்கும், சிவனடியார்கள் தொண்டிற்கும் பயன்படுத்தினார்.

தொன்மம்/சிவனின் ஆடல்

ஒருசமயம் கழற்சிங்க நாயனார் தனது மனைவி மற்றும் பரிவாரங்களுடன் திருவாரூர்த் தல இறைவனைத் தரிசிப்பதற்காகச் சென்றார். அவர் இறைவனைத் தொழுத வேளையில் அரசி, ஆலயத்தைச் சுற்றி வந்து தரிசனம் செய்ய முற்பட்டார். பூமாலைகள் கட்டும் மண்டபத்தின் அருகே வந்த அவர், அங்கிருந்த புதிய பூ ஒன்றை எடுத்து முகர்ந்து பார்த்தார். அப்போது அங்கே வந்தார் செருத்துணை நாயனார் என்னும் சிவபக்தர். எம்பெருமானின் அழகு மேனிக்குச் சூடி மகிழும் மலரை நுகர்வது குற்றம். இனி இம்மலர்களை இறைவனுக்கு எப்படிச் சாற்றுவது என எண்ணி, கோபம் கொண்டு, ராணியின் மூக்கைத் தனது குறுங்கத்தியால் அறுத்து விட்டார்.

மூக்கிலிருந்து குருதி பொங்கவும் கூந்தல் கலையவும் கீழே விழுந்தார் அரசி. அப்போது அங்கே வந்த கழற்சிங்க நாயனார் மனைவியின் நிலை கண்டு சினமுற்றார். அங்கிருந்த செருத்துணையார் நடந்ததை அரசரிடம் கூறினார். உடனே அரசர், “மலரை நுகர்ந்தது குற்றம் தான். ஆனால், அந்த மலரை எடுப்பதற்கு உதவிய கரத்தையன்றோ முதலில் வெட்ட வேண்டும்” என்று கூறி, தன் உடைவாளை உருவி, அரசியாரின் கரத்தை வெட்டி வீழ்த்தினார்.

திகைத்த செருத்துணை நாயனார், மன்னரின் செயலை நினைத்து வணங்கினார். உடன் சிவபெருமான், உமையம்மையுடன் ரிஷப வாகனத்தில் தோன்றி, அவர்களது குறைகளைப் போக்கி அனைவரையும் ஆசிர்வதித்து அருள் புரிந்தார். கழற்சிங்கநாயனார், இந்நிலவுலகில் நெடுங்காலம் அரசாண்டு, சைவநெறிகளை மென்மேலும் தழைத்தோங்கச் செய்து இறுதியில் சிவபெருமானின் திருவடிகளை அடைந்தார்.

கடல் சூழ்ந்த உலகு எலாம் காக்கின்ற பெருமான் காடவர்கோன் கழற்சிங்கன் அடியார்க்கும் அடியேன் - சுந்தரர் (திருத்தொண்டத் தொகை)

பாடல்கள்

பெரிய புராணத்தில் இப்புராணக் கதையை விளக்கும் பாடல்கள்:

அரசி மலரை முகர்வதும், மூக்கறுபடுவதும்

கோயிலை வலம் கொண்டு அங்கண் குலவிய பெருமை எல்லாம்
சாயல் மா மயிலே போல் வாள் தனித் தனி கண்டு உவந்து
தூய மென் பள்ளித் தாமம் தொடுக்கும் மண்டபத்தின் பாங்கர்
மேயது ஓர் புதுப்பூ அங்கு விழுந்தது ஒன்று எடுத்து மோந்தாள்.
புதுமலர் மோந்த போதில் செருத்துணைப் புனிதத் தொண்டர்
இதுமலர் திருமுற்றத்துள் எடுத்து மோந்தனள் ஆம் என்று,
'கதும்' என ஓடிச்சென்று, கருவி கைக் கொண்டு பற்றி,
மதுமலர்த் திருஒப்பாள் தன் மூக்கினைப் பிடித்து வார்ந்தார்.
அரசன், அரசியின் கையை வெட்டுதல்:
கட்டிய உடைவாள் தன்னை உருவி, 'அக்கமழ் வாசப்பூத்
தொட்டு முன் எடுத்த கை ஆம் முன்படத் துணிப்பது' என்று
பட்டமும் அணிந்து காதல் பயில் பெருந்தேவி ஆன
மட்டு அவிழ் குழலாள் செங்கை வளையொடும் துணித்தார் அன்றே.

சிவனின் அருளிச் செயல்

அரிய அத் திருத் தொண்டு ஆற்றும் அரசனார் அளவில் காலம்
மருவிய உரிமை தாங்கி மால் அயற்கு அரியார் மன்னும்
திரு அருள் சிறப்பினாலே செய்ய சே வடியின் நீழல்
பெருகிய உரிமை ஆகும் பேர் அருள் எய்தினாரே.

குரு பூஜை

கழற்சிங்க நாயனாரின் குருபூஜை, சிவாலயங்களில், ஒவ்வோராண்டும், வைகாசி மாதம், பரணி நட்சத்திரத்தில் நடைபெறுகிறது.

உசாத்துணை


✅Finalised Page