under review

கோச்செங்கண் சோழ நாயனார்

From Tamil Wiki
கோச்செங்கண் சோழ நாயனார் (ஓவியம்: அமரர் எஸ், மாலையப்பன்)

கோச்செங்கண் சோழ நாயனார், சைவ சமய அடியார்களாகிய 63 நாயன்மார்களில் ஒருவர்.

தொன்மம்

கோச்செங்கண் சோழ நாயனாரின் பிறப்பு பற்றி பெரிய புராணம் நூலில் இடம் பெற்றிருக்கும் தொன்மக் கதை:

சோழநாட்டின், காவிரிக்கரையில் சந்திரதீர்த்தம் என்றதொரு பொய்கை இருந்தது. அதன் அருகே இருந்த வனத்தில் ஒரு வெண் நாவல் மரத்தின் கீழே சிவலிங்கம் ஒன்று இருந்தது. அதனை யானை ஒன்று தினந்தோறும் பூஜித்து வந்தது. யானை பூஜித்ததால் இத்தலம் ‘திருவானைக்கா’ என்ற பெயர் பெற்றது.

அந்நாவல் மரத்தில் ஞானம் உடைய சிலந்தி ஒன்று வசித்து வந்தது. அது, இறைவன் திருமுடி மேல் மரத்தின் சருகுகள் போன்றவை உதிராத வண்ணம், தன் வாயின் நூலினால் பந்தல் ஒன்றை அமைத்துக் காத்தது. யானை வழிபடச் செல்லும்போது சிலந்தி வாய் நீர் நூலினால் அமைத்த அப்பந்தலை தூய்மையற்றது எனக் கருதிச் சிதைத்தது. பின் தன் வழிபாட்டைத் தொடர்ந்தது. சிலந்தியோ, தான் அமைந்த பந்தல், யானையின் துதிக்கை பட்டுச் சிதைந்தது என்று எண்ணி, மீண்டும் தன் வாய் நூலினால் புதிதாகப் பந்தலைக் கட்டியது. அதனை யானை மீண்டும் தான் வழிபட வந்தபோது சிதைத்தது.

இது தொடர்ந்து நடந்ததால் சினமுற்ற சிலந்தி, யானையின் துதிக்கைக்குள் புகுந்து கடித்தது. அதனால் துன்புற்ற யானை தன் துதிக்கையை நிலத்தின் கீழே அறைந்து உயிர் துறந்தது. அதுனுள் இருந்த சிலந்தியும் இறந்தது.

சிவனின் ஆடல்

யானைக்கும் சிலந்திக்கும் அருள் புரிந்த சிவபெருமானின் திருவிளையாடல்:

சிவபெருமானின் அருளால் இறந்த யானை, கணங்களுள் ஒன்றாகும் தகுதி பெற்றது. இறந்த சிலந்திக்குச் சோழர் குலத்தில் பிறக்கும் வரம் கிடைத்தது. சோழமன்னன் சுபதேவனும் அவன் மனைவி கமலவதியும் பிள்ளைப் பேறு வேண்டி சிதம்பரம் தலத்திற்கு வந்து வழிபட்டனர். சிவபெருமான், சிலந்தியை அவர்களுக்கு மகனாகப் பிறக்கும்படிச் செய்தார்.

பிரசவ காலத்தில் வந்த ஜோதிடர்கள், “குழந்தை இன்னும் ஒரு நாழிகை கழித்துப் பிறந்தால், மூன்று புவனங்களையும் அரசாளும்” என்றனர். அதற்கு உடன்பட்ட அரசி, பிரசவம் தாமதமாவதற்காகத் தனது கால்களைக் கட்டி மேலே தூக்கி நிறுத்தும் படிக் கேட்டுக் கொண்டாள். அவ்வாறே செய்து, ஜோதிடர்கள் குறித்த காலம் வந்ததும் அரசியை இயல்பாக்கினர். இயல்பான நேரத்தில் பிறக்காமல் காலம் தாழ்ந்து பிறந்ததால் குழந்தை சிவந்த கண்களுடன் பிறந்தது. அதனால் அதற்குக் ‘கோச்செங்கண்' என்ற பெயர் வந்தது.

கோச்செங்கண் சோழர், சிவபெருமானின் திருவருளினால் முன்னைப் பிறப்பின் உணர்வோடு இருந்தார். பல சிவாலயங்களை எழுப்பினார். திருவானைக்காவில் வெண் நாவல் மரத்தடியில் வீற்றிருந்த சிவபெருமானுக்குப் பெருந்திருக்கோயில் ஒன்றை அமைத்தார். அதை யானை நுழையாதபடி சிறிய வாயில் கொண்டதாக அமைத்தார். பல மாடக் கோயில்களை எழுப்பினார். சிவத்தொண்டுகள் பல புரிந்து, இறுதியில் சிவபெருமான் திருவடியை அடைந்தார்.

தென்னவனாய் உலகு ஆண்ட செங்கணாற்கு அடியேன் - சுந்தரர் (திருத்தொண்டத் தொகை)

பாடல்கள்

பெரிய புராணத்தில் இப்புராணக் கதையை விளக்கும் பாடல்கள்:

யானையும் சிலந்தியும் இறை வழிபாடு செய்தல்:

அப் பூங்கானில் வெண் நாவல் அதன் கீழ் முன் நாள் அரிதேடும்
மெய்ப் பூங்கழலார் வெளிப்படலும் மிக்க தவத்தோர் வெள்ளானை
கைப்பூம் புனலும் முகந்து ஆட்டிக் கமழ் பூங்கொத்தும் அணிந்து இறைஞ்சி
மைப்பூம் குவளைக் களத்தாரை நாளும் வழிபட்டு ஒழுகும் ஆல்.
ஆன செயலால் திருவானைக்கா என்று அதற்குப் பெயர் ஆக,
ஞானம் உடைய ஒரு சிலந்தி நம்பர் செம் பொன் திருமுடிமேல்
கானல் விரவும் சருகு உதிரா வண்ணம் கலந்த வாய் நூலால்
மேல் நல்திரு மேற்கட்டி என விரிந்து செறியப் புரிந்து உளதால்.

யானையும் சிலந்தியும் மரித்தலும் இறைவனின் வரமும்:

எம்பிரான் தன் மேனியின் மேல் சருகு விழாமை யான் வருந்தி
உம்பர் இழைத்த நூல் வலயம் அழிப்பதே என்று உருத்து எழுந்து
வெம்பிச் சிலம்பி துதிக்கையினில் புக்குக் கடிப்ப வேகத்தால்
கும்ப யானை கை நிலத்தில் மோதிக் குலைந்து வீழ்ந்தது ஆல்
தறையில் புடைப்பக் கைப்புக்க சிலம்பி தானும் உயிர் நீங்க
மறையில் பொருளும் தரும் ஆற்றான் மத யானைக்கும் வரம் கொடுத்து
முறையில் சிலம்பி தனைச் சோழர் குலத்து வந்து முன் உதித்து
நிறையில் புவனம் காத்து அளிக்க அருள் செய்து அருள நிலத்தின் கண்

அரசியின் முயற்சியும் குழந்தை பிறப்பும்:

பிறவா தொருநா ழிகைகழித்தென் பிள்ளை பிறக்கும் பரிசென்கால்
உறவார்த் தெடுத்துத் தூக்குமென வுற்ற செயன்மற் றதுமுற்றி
யறவா ணர்கள்சொல் லியகால மணையப் பிணிவிட் டருமணியை
இறவா தொழிவாள் பெற்றெடுத் “தென்கோச்செங்கண்ணா னோ?” வென்றாள்.

கோச்செங்கண் சோழன் சிவத்தொண்டு புரிந்து சிவன் திருவடியை அடைந்தது:

தேவர் பிரான் திருத்தொண்டில் கோச் செங்கண் செம்பியர் கோன்
பூவலயம் பொது நீக்கி ஆண்டு அருளிப் புவனியின் மேல்
ஏவிய நல்தொண்டு புரிந்து இமையவர்கள் அடி போற்ற
மேவினார் திருத்தில்லை வேந்தர் திருவடி நிழல் கீழ்

குருபூஜை

கோச்செங்கண் சோழ நாயனாரின் குருபூஜை, சிவாலயங்களில், ஒவ்வோராண்டும், மாசி மாதம், சதய நட்சத்திரத்தில் நடைபெறுகிறது.

உசாத்துணை


✅Finalised Page