கூற்றுவ நாயனார்
கூற்றுவ நாயனார், சைவ சமய அடியார்களாகிய 63 நாயன்மார்களில் ஒருவர்.
வாழ்க்கைக் குறிப்பு
திருக்களந்தை என்னும் பகுதியை ஆண்டு வந்த சிற்றரசர் கூற்றுவ நாயனார். சிவபக்தரான இவர் தேர்ப்படை, காலாட்படை, யானைப்படை, குதிரைப்படை என நால்வகைப் படைகளிலும் சிறந்து விளங்கினார். வீரத்தில் சிறந்த இவர், பகைவர்களுக்குக் கூற்றுவன் போல் இருந்ததால் இப்பெயரில் அழைக்கப்பட்டார்.
தொன்மம்/சிவனின் ஆடல்
கூற்றுவர் பகை மன்னர் பலரையும் வென்றார். சோழநாட்டிற்கு அரசனாக முடிசூட்டிக் கொள்ள எண்ணினார். தில்லை வாழ் அந்தணர்களது பாதுகாப்பில் வைக்கப்பட்டிருந்த, சோழ மன்னர்களுக்கே உரித்தான மணிமகுடத்தைத் தாம் அணிய விரும்பினார். தில்லை வாழ் அந்தணர்களை அணுகிக் கேட்க, அவர்கள், “நாங்கள் பரம்பரை பரம்பரையாகச் சோழ குலத்தில் பிறந்த மன்னர்களுக்கு மட்டுமே முடிசூட்டுவது வழக்கம். மற்ற குலத்து மன்னர்களுக்கு முடிசூட்டுவதில்லை” என்று சொல்லி மறுத்துவிட்டு, மன்னனுக்குப் பயந்து சேரநாட்டுக்குச் சென்றுவிட்டனர்.
இதனால் மனம் சோர்ந்த கூற்றுவர், சிதம்பரம் திருத்தலத்திற்குச் சென்றார். ஈசனின் திருவடிகளை வணங்கி, “சிவபெருமானே தங்களுடைய திருவடியையே நான் மணிமுடியாகப் பெறும் பேற்றை அடைய வேண்டும்” என்று வேண்டி உறங்கச் சென்றார். அவரது கனவில் சிவபெருமான் தோன்றி, தனது திருவடிகளை அவருக்கு மணிமுடியாகச் சூட்டி அருளினார்.
விழித்தெழுந்த கூற்றுவ நாயனார், மனம் மகிழ்ந்து, அத்திருவடிகளையே மணிமுடியாகத் தாங்கி, நல்லாட்சி புரிந்தார். சிவபெருமான் உறையும் தலங்களுக்கெல்லாம் சென்று வழிபட்டு, பல்வேறு திருப்பணிகளைச் செய்து இறுதியில் சிவபதம் அடைந்தார்.
ஆர் கொண்ட வேல் கூற்றன் களந்தைக் கோன் அடியேன் - சுந்தரர் (திருத்தொண்டத் தொகை)
பாடல்கள்
பெரிய புராணத்தில் இப்புராணக் கதையை விளக்கும் பாடல்கள்:
கூற்றுவ நாயனாரின் வீரச் சிறப்பு:
வென்றி வினையின் மீக்கூர வேந்தர் முனைகள் பல முருக்கிச்
சென்று தும்பைத் துறை முடித்தும் செருவில் வாகைத் திறம் கெழுமி
மன்றல் மாலை மிலைந்துஅவர் தம் வள நாடு எல்லாம் கவர்ந்து முடி
ஒன்றும் ஒழிய அரசர் திரு எல்லாம் உடையர் ஆயினார்
மன்னனின் வேண்டுதலும் தில்லை வாழ் அந்தணர்களின் மறுப்பும்:
மல்லல் ஞாலம் புரக்கின்றார் மணி மா மவுலி புனைவதற்குத்
தில்லை வாழ் அந்தணர் தம்மை வேண்ட அவரும் 'செம்பியர் தம்
தொல்லை நீடும் குல முதலோர்க்கு அன்றிச் சூட்டோம் முடி' என்று
நல்கார் ஆகிச் சேரலன் தன் மலை நாடு அணைய நண்ணுவார்
கூற்றுவர், சிவனின் திருவடியைத் திருமுடியாய்ப் பெற்றது:
அற்றை நாளில் இரவின் கண் 'அடியேன் தனக்கு முடி ஆகப்
பெற்ற பேறு மலர்ப் பாதம் பெறவே வேண்டும்' எனப் பரவும்
பற்று விடாது துயில் வோர்க்குக் கனவில் பாத மலர் அளிக்க
உற்ற அருளால் அவை தாங்கி உலகம் எல்லாம் தனிப் புரந்தார்
குருபூஜை
கூற்றுவ நாயனாரின் குருபூஜை, சிவாலயங்களில், ஒவ்வோராண்டும், ஆடி மாதம், திருவாதிரை நட்சத்திரத்தில் நடைபெறுகிறது.
உசாத்துணை
- சேக்கிழார் பெருமான் அருளிய திருத்தொண்டர் புராணம்: தமிழ் இணையக் கல்விக் கழகம்
- கூற்றுவ நாயனார்: தினமலர் இதழ் கட்டுரை
- சேக்கிழாரின் பெரிய புராணம்: பா.சு. ரமணன். தாமரை பிரதர்ஸ் மீடியா வெளியீடு
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
01-May-2023, 18:31:17 IST