under review

முனையடுவார் நாயனார்

From Tamil Wiki
முனையடுவார் நாயனார் (ஓவியம்: அமரர் எஸ். மாலையப்பன்)

முனையடுவார் நாயனார், சைவ சமய அடியார்களாகிய 63 நாயன்மார்களில் ஒருவர்.

வாழ்க்கைக் குறிப்பு

முனையடுவார், சோழ நாட்டில், திருநீடூர் என்ற ஊரில், வேளாளர் குடியில் தோன்றினார். படை வீரரான இவர் தனது போர் வெற்றி மூலம் கிடைத்த செல்வங்களைக் கொண்டு சிவத் தொண்டுகள் செய்து வந்தார்.

சிவத்தொண்டு

முனையடுவார், சிவனடியார்கள் எது கேட்டாலும் அதனை மாறாது அளிக்கும் தன்மை உடையவராக இருந்தார். தன் கீழ் பல போர் வீரர்களைக் கொண்ட குழுவை வைத்திருந்தார். போரில் தோற்றவர்கள் மீண்டும் முனையடுவாரிடம் வந்து பெரும் பொருள் கொடுத்து அவரை நாடினால், நடுநிலையில் நின்று ஆராய்ந்து, அவர்களுக்கு உதவுவது அறநெறிப்படி சரியானதுதானா என்பது தெளிந்து தோற்றவருக்காகப் போர் செய்து வெற்றியைத் தேடித் தருவார். அதன் மூலம் பெற்ற செல்வத்தை எல்லாம் சிவத்தொண்டுக்கே செலவிடுவார்.

சிவனடியார்கள் கேட்டது கேட்டபடி பொருட்களை அளித்தும் பால், தயிர், நெய், கனிகளையும், பலவாறான உணவு வகைகளையும் அவர்களுக்கு அளித்து அவர்களைத் திருப்தியுறச் செய்வார். தம்மை நாடி வருபவர்கள் வெற்றி அடையும்படிப் போர் செய்த காரணத்தால் முனையடுவார் என்னும் சிறப்புப் பெயரை இவர் பெற்றார். இறுதியில் சிவபதம் அடைந்தார்.

அறைக் கொண்ட வேல் நம்பி முனையடுவாற்கு அடியேன் - சுந்தரர் (திருத்தொண்டத் தொகை)

பாடல்கள்

பெரிய புராணத்தில் இப்புராணக் கதையை விளக்கும் பாடல்கள்:

முனையடுவார், தோற்றவர்களுக்காக மீண்டும் போர் புரிந்தது

மாற்றார்க்கு அமரில் அழிந்து உள்ளோர் வந்து தம்பால் மா நிதியம்
ஆற்றும் பரிசு பேசினால் அதனை நடுவு நிலை வைத்துக்
கூற்றும் ஒதுங்கும் ஆள் வினையால் கூலி ஏற்றுச் சென்று எறிந்து
போற்றும் வென்றி கொண்டு இசைந்த பொன்னும் கொண்டு மன்னுவார்

போர் வெற்றி மூலம் பெற்ற செல்வத்தைக் கொண்டு சிவத்தொண்டு செய்தது

இன்ன வகையால் பெற்ற நிதி எல்லாம் ஈசன் அடியார்கள்
சொன்ன சொன்ன படி நிரம்பக் கொடுத்துத் தூய போனகமும்
கன்னல் நறு நெய் கறி தயிர் பால் கனி உள் உறுத்த கலந்து அளித்தூ
மன்னும் அன்பின் நெறி பிறழா வழித் தொண்டு ஆற்றி வைகினார்

முனையடுவார் என்னும் பெயர் பெற்று சிவபதம் பெற்றது

மற்று இந் நிலைமை பல்நெடு நாள் வையம் நிகழச் செய்து வழி
உற்ற அன்பின் செந்நெறியால் உமையாள் கணவன் திருஅருளால்
பெற்ற சிவலோகத்து அமர்ந்து பிரியா உரிமை மருவினார்
முற்ற உழந்த முனை அடுவார் என்னும் நாமம் முன் உடையார்

குரு பூஜை

முனையடுவார் நாயனாரின் குரு பூஜை, சிவாலயங்களில், ஒவ்வோராண்டும், பங்குனி மாதம், பூச நட்சத்திரத்தில் நடைபெறுகிறது.

உசாத்துணை


✅Finalised Page