under review

முருக நாயனார்

From Tamil Wiki
முருக நாயனார் (ஓவியம்: அமரர் எஸ். மாலையப்பன்)

முருக நாயனார், சைவ சமய அடியார்களாகிய 63 நாயன்மார்களில் ஒருவர்.

வாழ்க்கைக் குறிப்பு

முருக நாயனார், சோழ நாட்டின் திருப்புகலூரில், அந்தணர் குலத்தில் தோன்றினார். சிவபக்தர். திருப்புகலூரிலிருக்கும் வர்த்தமானேச்சுரர் திருக்கோயிலில் ஆறு வேளைகளிலும் பூஜை நடக்கும். ஒவ்வொரு பூஜை காலத்திற்கும் ஒவ்வொரு வகையான மலர் மாலைகளை இறைவனுக்குச் சாற்றி பூஜை செய்வர். அம்மலர்த் தொண்டை முருக நாயனார் செய்தார்.

தொன்மம்/சிவனின் ஆடல்

விடியற்காலையில் எழுந்துகொள்ளும் முருகனார், நீராடி, சிவனைத் தொழுது, திரு ஐந்தெழுத்து ஓதுவார். தினமும் பூந்தோட்டத்திலிருந்து கொடிப்பூ, கோட்டுப்பூ, நீர்ப்பூ, நிலப்பூ என்னும் நான்கு வகையான பூக்களைப் பறிப்பார். அவற்றைத் திருக்கோவிலுக்கு எடுத்துச் சென்று இண்டை மாலை, கோவை மாலை, பத்து மாலை, கொண்டை மாலை, சர மாலை, தொங்குமாலை என்னும் ஆறு வகையான மாலைகளாகக் கட்டுவார். ஆறு பூஜை காலத்திற்கும் ஒவ்வொரு வகையான மாலையை வர்த்தமானேச்சுரருக்கு சாற்றுவித்து நெஞ்சுருகி சிவமந்திரத்தை ஓதி மகிழ்வார்.

இவ்வாறு முருக நாயனார் சிவபெருமானை வழிபட்டு வரும் நாளில், ஒருநாள் திருஞானசம்பந்தப் பெருமான் அவ்வூருக்கு வந்தார். முருக நாயனார் சம்பந்தரைக்கண்டு பணிந்து, அவரோடு உரையாடி மகிழ்ந்தார். திருஞானசம்பந்தப் பெருமானுக்கு நண்பராகும் பெருமை பெற்றார்.

வாழ்வாங்கு வாழ்ந்து சிவத்தொண்டுகள் புரிந்த முருக நாயனார், திருநெல்லூரில் நடந்த திருஞானசம்பந்தரின் திருமணத்திற்குச் சென்றார். அங்கே இறைவன் அருளிய பேரொளியில் திருஞானசம்பந்தர் புகுந்த பொழுது தாமும் அவருடன் புகுந்தார். சிவலோகம் அடைந்து, என்றும் நிலையான சிவானந்தப் பேற்றினைப் பெற்றார்.

முருகனுக்கும் உருத்திர பசுபதிக்கும் அடியேன் - சுந்தரர் (திருத்தொண்டத் தொகை)

பாடல்கள்

பெரிய புராணத்தில் இப்புராணக் கதையை விளக்கும் பாடல்கள்:

முருக நாயனாரின் சிவத் தொண்டு

புலரும் பொழுதின் முன் எழுந்து புனித நீரில் மூழ்கிப் போய்
மலரும் செவ்வித் தம் பெருமான் முடிமேல் வான் நீர் ஆறுமதி
உலவும் மருங்கு முருகு உயிர்க்க நகைக்கும் பதத்தின் உடன் பறித்த
அலகுஇல் மலர்கள் வெவ் வேறு திருப்பூங் கூடைகளில் அமைப்பார்

ஞான சம்பந்தப் பெருமானுக்கு நண்பர் ஆனது

தள்ளும் முறைமை ஒழிந்திட இத் தகுதி ஒழுகும் மறையவர் தாம்
தெள்ளு மறைகள் முதலான ஞானம் செம் பொன் வள்ளத்தில்
அள்ளி அகிலம் ஈன்று அளித்த அம்மை முலைப்பால் உடன் உண்ட
பிள்ளையார்க்கு நண்பரும் ஆம் பெருமை உடையார் ஆயினார்

முருக நாயனார் சிவபதம் பெற்றது

அங்கண் அமரும் திரு முருகர் அழகுஆர் புகலிப் பிள்ளையார்
பொங்கு மணத்தின், முன் செய்த பூசை அதனால் புக்கு அருளிச்
செங்கண் அடல் ஏறு உடையவர் தாம் சிறந்த அருளின் பொருள் அளிக்கத்
தங்கள் பெருமான் அடி நீழல் தலையாம் நிலைமை சார்வு உற்றார்

குரு பூஜை

முருக நாயனாரின் குரு பூஜை, சிவாலயங்களில், ஒவ்வோராண்டும், வைகாசி மாதம், மூலம் நட்சத்திரத்தில் நடைபெறுகிறது.

உசாத்துணை


✅Finalised Page