under review

காரி நாயனார்

From Tamil Wiki
காரி நாயனார் (ஓவியம்: அமரர் எஸ். மாலையப்பன்)

காரி நாயனார் , சைவ சமய அடியார்களாகிய 63 நாயன்மார்களில் ஒருவர்.

வாழ்க்கைக் குறிப்பு

திருக்கடவூரில் வாழ்ந்தவர் காரி நாயனார். தமிழ்ப் புலவரான இவர், ‘காரிக் கோவை’ என்னும் நூலை இயற்றி, அதனை மூவேந்தர்களிடத்தும் சென்று அரங்கேற்றினார். இவரது தமிழ்ப் புலமையைக் கண்டு வியப்படைந்த மூவேந்தர்கள், பொன்னும் பொருளும் பரிசாகக் கொடுத்து இவரைச் சிறப்பித்தனர். அப்பொருட்களைக் கொண்டு காரி நாயனார் சிவனடியார்களுக்குச் சிவத்தொண்டு புரிந்தார்.

சிவத்தொண்டு

தனக்குக் கிடைத்த திரண்ட செல்வங்களைக் கொண்டு காரி நாயனார், பல சிவாலயங்களை எழுப்பினார். பழைய சிவாலயங்களைப் புதுப்பித்தார். சிவனடியார்களுக்கு வேண்டியன கொடுத்து அவர்களை மகிழ்வுறச் செய்தார். ஆலயங்கள் தோறும் சென்று இறைவனைப் பாமாலை பாடித் துதித்தார். பல்வேறு தானங்களைச் செய்தார்.

தனது சீரிய சிவத்தொண்டால் திருக்கயிலையை அடைந்து என்றும் சிவபெருமானோடு நிலைத்து வாழும் பேற்றைப் பெற்றார் என்று பெரிய புராணம் குறிப்பிடுகிறது.

’காரிக்கும் அடியேன’ - சுந்தரர் (திருத்தொண்டத் தொகை)

பாடல்கள்

பெரிய புராணத்தில் இப்புராணக் கதையை விளக்கும் பாடல்கள்:

காரி நாயனார், மூவேந்தர்களிடம் சென்று நூல் அரங்கேற்றம் செய்தது

மறையாளர் திருக்கடவூர் வந்து உதித்து வண் தமிழின்
துறை ஆன பயன் தெரிந்து சொல் விளங்கிப் பொருள் மறையக்
குறையாத தமிழ்க் கோவை தம் பெயரால் குலவும் வகை
முறையாலே தொகுத்து அமைத்து மூவேந்தர் பால் பயில்வார்

காரி நாயனார், சிவத் தொண்டினால் கயிலை மலையில் வாழும் பேற்றைப் பெற்றது

ஏய்ந்த கடல் சூழ் உலகில் எங்கும் தம் இசை நிறுத்தி
ஆய்ந்த உணர்வு இடை அறா அன்பினர் ஆய் அணி கங்கை
தோய்ந்த நெடும் சடையார்தம் அருள் பெற்ற தொடர்பினால்
வாய்ந்த மனம் போல் உடம்பும் வடகயிலை மலை சேர்ந்தார்

குருபூஜை

காரி நாயனாரின் குருபூஜை, சிவாலயங்களில், ஒவ்வோராண்டும், மாசி மாதம், பூராட நட்சத்திரத்தில் நடைபெறுகிறது.

உசாத்துணை


✅Finalised Page