under review

கோட்புலி நாயனார்

From Tamil Wiki
கோட்புலி நாயனார் (ஓவியம்: அமரர் எஸ். மாலையப்பன்)

கோட்புலி நாயனார், சைவ சமய அடியார்களாகிய 63 நாயன்மார்களில் ஒருவர்.

வாழ்க்கைக் குறிப்பு

சோழ நாட்டின் திருவாரூர் அருகே உள்ள நாட்டியத்தான்குடியில் தோன்றியவர் கோட்புலி நாயனார். வேளாண்குடியைச் சேர்ந்த இவர், சோழ மன்னரின் படைத்தலைவராகப் பணியாற்றினார். பகைவர்களுக்குப் புலி போன்று விளங்கியதால் கோட்புலி நாயனார் என்று அழைக்கப்பட்டார்.

சிறந்த சிவபக்தரான இவர், அரசரிடம் பணியாற்றிக் கிடைத்த செல்வம் அனைத்தையும் சிவத்தொண்டுக்குச் செலவழித்தார். செந்நெல்லை வாங்கி அவற்றைக் குவியல் குவியலாகச் சேர்த்து வைத்துச் சிவனடியார்களுக்கு வழங்கினார்.

தொன்மம்/சிவனின் ஆடல்

கோட்புலி நாயனார், மன்னனின் ஆணைக்கேற்ப போர்க்களத்திற்குச் செல்ல நேர்ந்தது. அதனால், சிவனடியார்களுக்கான தனது பணி தடைப்படக் கூடாது என்பதற்காகச் செந்நெல் குவியல்களைக் கூடாக அமைத்தார். தனது உறவினர்களை அழைத்து, அவற்றைச் சிவனடியார்களுக்கு மட்டுமே அளிக்க வேண்டும் என்றும், உறவினர்கள் அவற்றிலிருந்து எடுத்து எதையும் செலவு செய்யக் கூடாது என்றும் ஆணையிட்டுவிட்டுப் போர்க்களத்திற்குச் சென்றார்.

கோட்புலி நாயனார் சென்ற சில காலத்திலேயே அப்பகுதியைக் கொடும் பஞ்சம் தாக்கியது. அவருடைய சுற்றத்தார்கள் உண்ண உணவின்றி வருந்தினர். அதனால் அவர்கள், கோட்புலியார் வரும்போது திரும்ப அளித்துக் கொள்ளலாம் என்று நினைத்து நெற்குவியல்களில் இருந்த நெல்லை எடுத்து உண்டு உயிர் வாழ்ந்தனர்.

போரில் வெற்றி பெற்ற கோட்புலியார், தனது ஊருக்குத் திரும்பினார். உறவினர்கள் தான் சொன்னதற்கு மாறாக, சிவனடியார்களுக்காக வைத்திருந்த நெற்குவியலை எடுத்து உண்டதை அறிந்தார். அவர்கள் செய்ததைச் சிவ அபராதமாகக் கருதினார். அளவற்ற சினங்கொண்டார். அவர்கள் அனைவரையும் கொல்வேன் என உறுதி பூண்டார்.

அவர்கள் அனைவரையும் தன் இல்லத்திற்கு வரவழைத்தவர், எல்லாரையும் தம் வாளால் வெட்டி வீழ்த்தினார். தாய், தந்தை, மனைவி என்று கூடப் பாராது அனைவரையும் தம் வாள்கொண்டு வெட்டிச் சாய்த்தார். ஒரு குழந்தை அதில் தப்பிப் பிழைத்தது. உடனிருந்த காவலர், “ஐயா, இது பால் குடி மறவாத குழந்தை. நெல்லை இது உண்ணவில்லை. நம் குடிக்கு ஒரே புதல்வன். குடி விளங்க இக்குழந்தையை மட்டுமாவது கொல்லாமல் அருள்புரியுங்கள்” என்று வேண்டினார்.

நாயனார் அதற்கு, “இவன் அன்னத்தை உண்ணாவிடினும், அந்த அன்னத்தை உண்ட தாயின் முலைப் பாலை பருகியவன் அல்லவா?” என்று கூறி, அக்குழந்தையையும் தம் வாளால் இரு துண்டாக்கினார்.

உடனே சிவபெருமான் அங்கே தோன்றினார். “அன்பனே! உன்னால் கொல்லப்பட்ட சுற்றத்தவர் அனைவரும் சொர்க்கம் முதலிய உயர்ந்த உலகங்களில் புகுந்து பின்னர் நம்முலகை அடைவார்கள். நீ இப்போதே இந்நிலையிலேயே நம்முடன் வருவாயாக!” என்று அருளிச் செய்தார். கோட்புலியார் சிவனடியில் என்றும் நிலைத்து வாழும் பேறு பெற்றார்.

அடல் சூழ்ந்த வேல் நம்பி கோட்புலிக்கும் அடியேன் - சுந்தரர் (திருத்தொண்டத் தொகை)

பாடல்கள்

பெரிய புராணத்தில் இப்புராணக் கதையை விளக்கும் பாடல்கள்:

கோட்புலி நாயனார், உறவினர்களிடம், சிவனடியார்களுக்காக நெல்லைப் பாதுகாக்கக் கேட்டுக் கொண்டது:

வேந்தன் ஏவலின் பகைஞர் வெம் முனைமேல் செல்கின்றார்
பாந்தள் பூண் என அணிந்தார் தமக்கு அமுது படியாக
ஏந்தலார் தாம் எய்தும் அளவும் வேண்டும் செந்நெல்
வாய்ந்த கூடு அவை கட்டி வழிக் கொள்வார் மொழிகின்றார்
தம் தமர்கள் ஆயினார் தமக்கு எல்லாம் தனித்தனியே
எந்தையார்க்கு அமுது படிக்கு ஏற்றிய நெல் இவை அழிக்க
சிந்தை ஆற்றா நினைவார் திருவிரையாக் கலி என்று
வந்தனையால் உரைத்து அகன்றார் மன்னவன் மாற்றார் முனைமேல்

பஞ்சத்தால் உறவினர்கள் நெல்லை எடுத்து உண்டது:

மற்று அவர் தாம் போயின பின் சில நாளில் வற்காலம்
உற்றலும் அச் சுற்றத்தார் உணவு இன்றி 'இறப்ப அதனில்
பெற்றம் உயர்த்தவர் அமுது படி கொண்டாகிலும் பிழைத்துக்
குற்றம் அறப் பின் கொடுப்போம்' எனக் கூடு குலைத்து அழித்தார்.

கோட்புலி நாயனார் பெற்றோர் உள்பட தனது உறவினர்களை அழித்தல்:

தந்தையார் தாயார் மற்று உடன் பிறந்தார் தாரங்கள்
பந்தம் ஆர் சுற்றத்தார் பதி அடியார் மதி அணியும்
எந்தையார் திருப்படி மற்று உண்ண இசைந்தார் களையும்
சிந்த வாள் கொடு துணித்தார் தீய வினைப் பவம் துணிப்பார்.

சிறு குழந்தையை அழித்தல்:

பின் அங்குப் பிழைத்த ஒரு பிள்ளையைத் தம் பெயரோன் 'அவ்
அன்னம் துய்த்து இலது; குடிக்கு ஒரு புதல்வன் அருளும்' என
'இந்நெல் உண்டாள் முலைப்பால் உண்டது' என எடுத்து எறிந்து
மின்னல் லடிவாளால் இரு துணியாய் விழ ஏற்றார்.

கோட்புலி நாயனாருக்கு சிவபெருமானின் அருளிச் செயல்:

அந் நிலையே சிவபெருமான் அன்பர் எதிர் வெளியே நின்று
உன்னுடைய கை வாளால் உறுபாசம் அறுத்த கிளை
பொன் உலகின் மேல் உலகம் புக்கு அணையப் புகழோய் நீ
இந்நிலை நம் உடன் அணைக என்று ஏவி எழுந்து அருளினார்.

குருபூஜை

கோட்புலி நாயனாரின் குருபூஜை, சிவாலயங்களில், ஒவ்வோராண்டும், ஆடி மாதம், கேட்டை நட்சத்திரத்தில் நடைபெறுகிறது.

உசாத்துணை


✅Finalised Page