under review

மூர்க்க நாயனார்

From Tamil Wiki
மூர்க்க நாயனார் (ஓவியம்: அமரர் எஸ். மாலையப்பன்)

மூர்க்க நாயனார், சைவ சமய அடியார்களாகிய 63 நாயன்மார்களில் ஒருவர்.

வாழ்க்கைக் குறிப்பு

மூர்க்க நாயனார், தொண்டை நாட்டின் திருவேற்காட்டில் வேளாளர் குலத்தில் தோன்றினார். சிவனடியார்களையே சிவனெனத் துதித்தும், திருநீறே மெய்ப்பொருள் என்று கருதியும் வாழ்ந்தார். சிவனடியார்களைத் தனது இல்லத்திற்கு அழைத்துவந்து திருவமுது செய்வித்து, பின்னரே தாம் உண்பார். சிவனடியார்களுக்கு வேண்டும் பொருள்கள் அளித்து மகிழ்வித்தார்.

தொன்மம்/சிவனின் ஆடல்

மூர்க்க நாயனாரின் சிவத் தொண்டு பற்றி அறிந்த சிவனடியார்கள் பலரும் அவரை நாடி வந்து உதவிகள் பெற்றுச் சென்றனர். தொடர்ந்த சிவத்தொண்டால், மூர்க்க நாயனாரின் செல்வ வளம் குறையத் தொடங்கியது. இருந்தாலும் தம்மிடம் உள்ள உடைமைகள் எல்லாவற்றையும் விற்றுத் தம் திருப்பணியைச் செய்துவந்தார். நாளடைவில் நாயனாரது பொருட்கள் யாவும் செலவழிந்து போயின. சிவத்தொண்டிற்குப் பொருள் இல்லாது போயிற்று. அதனால் தான் முன்னமே நன்கு அறிந்திருந்த சூதாடும் தொழில் மூலம் பொருளீட்ட எண்ணினார். ஆனால், அவ்வூரில் மூர்க்க நாயனாரோடு சூதாடுபவர்கள் யாரும் இல்லாததால் வெளியூர்களுக்குச் சென்று சூதாட முற்பட்டார்.

மூர்க்க நாயனார், சிவன் உறையும் தலங்களுக்குச் சென்று சிவனை வழிபட்டார். அங்குள்ளோரிடம் சூதாடி அதன்மூலம் பொருளீட்டி, அதைக்கொண்டு அடியவர்களுக்கான திருப்பணிகளைச் செய்தார்.

மூர்க்க நாயனார், சூதாட்டத்தின்போது முதல் ஆட்டத்தில் தான் தோற்றுப் போவார். பின்னர் தொடர்ந்து ஆடும் மற்ற ஆட்டங்களில் வென்று பணயப் பொருள் அனைத்தையும் தனதாக்கிக் கொள்வார். அதனை எதிர்ப்பவர்களை, வஞ்சச் சொற்களால் தன் வெற்றியை மறுத்தவர்களை, உடைவாளை உருவிக் குத்தி விடுவார். இவ்வாறு சூதில் வென்ற அப்பணத்தைத் தம் கையால் தீண்டாமல், அமுது ஆக்குவோர்களைக் கைக்கொள்ளச் செய்து, அதுகொண்டு பொருட்கள் வாங்கிச் சமைக்கச் செய்து, அங்குள்ள சிவனடியார்களுக்குத் திருவமுது செய்விப்பார். எல்லாரும் உண்ட பிறகு கடைசிப் பந்தியில் அமர்ந்து தானும் உண்பார்.

சிவனடியார்களுக்குத் திருவமுது செய்விப்பதையும், திருத்தொண்டு செய்வதையும் தமது முதற் கடமையாகக் கொண்டு செயல்பட்டார். அதற்காகச் சூதாடியும், சூதில் வஞ்சகம் செய்பவர்களைத் தாக்கியும் மூர்க்கத் தனமாக நடந்து கொண்டதால் இவர் ‘மூர்க்க நாயனார்’ என்று அழைக்கப்பட்டார். இறுதியில் சிவ பதம் அடைந்தார்.

பாடல்கள்

பெரிய புராணத்தில் இப்புராணக் கதையை விளக்கும் பாடல்கள்:

மூர்க்க நாயனாரின் சிவத்தொண்டு

தூய அடிசில் நெய் கன்னல் சுவையின் கறிகள் அவைஅமைத்து
மேய அடியார் தமைப் போற்றி விருப்பால் அமுது செய்வித்தே
ஆய பொருளும் அவர் வேண்டும் படியால் உதவி அன்பு மிக
ஏயுமாறு நாள் தோறும் இனைய பணி செய்து இன்புற்றார்

சூதாடி வந்த பொருளைக் கொண்டு சிவனடியார்களுக்குத் தொண்டு செய்தது

இருள் ஆரும் மணிகண்டர் அடியார்க்கு இன் அமுது அளிக்கப்
பொருள் ஆயம் எய்துதற்குப் புகழ்க் குடந்தை அம்பலத்தே
உருளாயச் சூது ஆடி உறு பொருள் வென்றன நம்பர்
அருளாகவே கொண்டு அங்கு அமுது செய்வித்து இன்பு உறுவார்

மூர்க்கர் எனும் பெயர் பெற்றது

முன் சூது தாம் தோற்று முதல் பணயம் அவர் கொள்ளப்
பின் சூது பல முறையும் வென்று பெரும் பொருள் ஆக்கிச்
சொல் சூதால் மறுத்தாரைச் சுரிகை உருவிக் குத்தி
நல் சூதர் மூர்க்கர் எனும் பெயர் பெற்றார் நானிலத்தில்

குரு பூஜை

மூர்க்க நாயனாரின் குரு பூஜை, சிவாலயங்களில், ஒவ்வோராண்டும், கார்த்திகை மாதம், மூல நட்சத்திரத்தில் நடைபெறுகிறது.

உசாத்துணை


✅Finalised Page