under review

குங்குலியக்கலய நாயனார்

From Tamil Wiki
குங்குலியக்கலய நாயனார் (ஓவியம்: அமரர் எஸ். மாலையப்பன்)

குங்குலியக்கலய நாயனார், சைவ சமய அடியார்களாகிய 63 நாயன்மார்களில் ஒருவர்.

வாழ்க்கைக் குறிப்பு

சோழ நாட்டின் திருக்கடவூரில் வாழ்ந்தவர் குங்குலியக்கலய நாயனார். அவ்வூர் ஆலயத்திலுள்ள சிவபெருமானுக்கு அனுதினமும் குங்குலியத் தூபம் இட்டு வணங்கினார். அதனால் குங்குலியக்கலயர் என்று அழைக்கப்பட்டார்

தொன்மம்/சிவனின் ஆடல்

சிவபெருமானின் திருவிளையாடலால் அவரை வறுமை சூழ்ந்தது. அதுகண்டு மனத்தளர்ச்சி கொள்ளாத நாயனார், தினமும் இறைவனுக்குக் குங்குலியத் தூபம் இட்டு வணங்கினார். தொடர் வறுமையால் தமக்குச் சொந்தமான நிலங்களை விற்றும், தனக்கு அடிமையாயிருந்தவர்களை விற்றும், தமது செல்வங்களை விற்றும் வாழ்க்கை நடத்தினார். அப்போதும் ஆலயத் திருப்பணியை விடாது செய்து வந்தார்.

நாளடைவில் கொடிய வறுமைசூழ்ந்தது. உண்பதற்கு உணவு இல்லாமல் போனதால், நாயனாரின் மனைவி, தன் பொன் மாங்கல்யத்தைக் கழற்றிக் கொடுத்து நெல் வாங்கி வரும்படி கூறினார். வெளியே சென்ற கலயனார் முன் குங்குலிய வியாபாரி ஒருவர் எதிரே வந்தார். அவரிடம் தாலியைக் கொடுத்து, குங்குலியப் பொதியைப் பெற்றார் குங்குலியக்கலய நாயனார். பின் திருவதிகை வீரட்டானம் தலதுக்குச் சென்று அங்கேயே தங்கி குங்குலியத் தொண்டு புரிந்தார்.

கலயனாரின் குடும்பத் துயரைப் போக்க எண்ணிய இறைவன், ஒரே இரவில் அக்குடும்பத்தில் செல்வச் செழிப்பை உண்டாக்கினார். கலயனாரின் மனைவியின் கனவில் தோன்றி அதனைப் பற்றி எடுத்துரைத்தார். ஆலயத்தில் தியானத்தில் ஆழ்ந்திருந்த நாயனாரிடம், சிவபெருமான் அசரீரியாக, “அன்பனே, நீ மிகவும் பசித்திருக்கிறாய்; உனது இல்லத்திற்குச் சென்று பாலுடன் கலந்த இனிய உணவை உண்டு இப்பசித்துன்பம் நீங்குவாயாக” என்றருளிச் செய்தார். சிவ வாக்கை ஏற்றுத் தன் இல்லம் திரும்பிய குங்குலியக் கலய நாயனார், மீண்டும் செல்வச் செழிப்புடன் தனது குடும்பம் இருந்ததைக் கண்டு மகிழ்ந்தார். சிவனின் திருவருளே காரணம் என்பதைப் புரிந்து வணங்கினார்.

இந்நிலையில் திருப்பனந்தாளில் உள்ள ஆலயத்தில் உறையும் சிவபெருமான், பக்தை ஒருவரது வேண்டுகோளை நிறைவேற்றுவதற்காக ஒரு பக்கமாகச் சாய்ந்திருந்தான். அவ்விறைவனை நேரே நிறுத்தி வணங்க வேண்டும் என்று ஆவல் கொண்ட அப்பகுதி மன்னன், அதற்கான முயற்சிகளை மேற்கொண்டான். யானை முதலியவற்றைக் கொண்டு சாய்ந்திருந்த லிங்கத் திருமேனியை நிமிர்த்த முயன்றான். பலமுறை முயன்றும் முடியவில்லை. அதனால் அவன் மிகுந்த மனவருத்தம் கொண்டான்.

இதுபற்றிக் கேள்வியுற்ற குங்குலியக்கலய நாயனார் திருப்பனந்தாள் சிவாலயம் சென்றார். இறைவனைத் தொழுது, தன் கழுத்தில் ஒரு கயிற்றைக் கட்டி அதன் மறுமுனையை சிவலிங்கத்தில் கட்டி இழுத்தார். நாயனாரின் அன்பிற்குக் கட்டுப்பட்டார் இறைவன். சாய்ந்திருந்த லிங்கம் நிமிர்ந்து நின்றது. உடன் தேவர்கள் பூ மாரி பொழிந்தனர். களைத்த சேனைகளும் யானைகளும் தம் களைப்பு நீங்கி எழுந்தன. மகிழ்வெய்திய மன்னன், குங்குலியக் கலய நாயனாரின் பாதத்தில் வீழ்ந்து வணங்கினான்.

திருக்கடவூர் திரும்பிய குங்குலியக்கலய நாயனார், சிவத்தொண்டுகளைத் தொடர்ந்தார். திருக்கடவூர் வந்திருந்த ஞானசம்பந்தப் பெருமானும், திருநாவுக்கரசரையும் வணங்கித் தொழுதார். தன் இல்லத்திற்கு அழைத்து விருந்தளித்துப் போற்றி ஆசி பெற்றார். வாழ்வாங்கு வாழ்ந்து, சிவத் திருப்பணிகளைச் செய்த குங்குலியக் கலய நாயனார், இறுதியில் சிவபதம் அடைந்தார்.

கடவூரில் கலயன் தன் அடியார்க்கும் அடியேன் - சுந்தரர் (திருத்தொண்டத் தொகை)

பாடல்கள்

பெரிய புராணத்தில் இப்புராணக் கதையை விளக்கும் பாடல்கள்

குங்குலியக் கலய நாயனார் வறுமையிலும் ஆலயத் திருப்பணி செய்தது

கங்கை நீர் கலிக்கும் சென்னிக் கண் நுதல் எம்பிராற்குப்
பொங்கு குங்குலியத் தூபம் பொலிவு உறப் போற்றிச் செல்ல
அங்கு அவர் அருளினாலே வறுமை வந்து அடைந்த பின்னும்
தங்கள் நாயகர்க்குத் தாம் முன்செய் பணி தவாமை உய்த்தார்.

குங்குலியக் கலய நாயனாரிடம் மனைவி மங்கல நாணை அளித்தல்

யாது ஒன்றும் இல்லை ஆகி இரு பகல் உணவு மாறிப்
பேது உறும் மைந்தரோடும் பெருகு சுற்றத்தை நோக்கி
காதல் செய் மனைவியார் தம் கணவனார் கலயனார் கைக்
கோது இல் மங்கல நூல் தாலி கொடுத்து நெல் கொள்ளும் என்றார்.

இறைவன், குங்குலியக் கலய நாயனாரை இல்லம் செல்லப் பணித்தது

காலனைக் காய்ந்த செய்ய காலனார் கலயனாராம்
ஆலும் அன்பு உடைய சிந்தை அடியவர் அறியும் ஆற்றால்
‘சாலநீ பசித்தாய் உன் தன் தட நெடு மனையில் நண்ணிப்
பால் இன் அடிசில் உண்டு பருவரல் ஒழிக' என்றார்.

குங்குலியக்கலய நாயனார் சிவலிங்கத்தைக் கயிறால் கட்டி இழுத்தல்

சேனையும் ஆனை பூண்ட திரளும் எய்த்து எழாமை நோக்கி
‘யானும் இவ் இளைப் புற்று எய்க்கும் இது பெற வேண்டும்' என்று
தேன் அலர் கொன்றையார் தம் திருமேனிப் பூங்கச் சேய்ந்த
மான வன் கயிறு பூண்டு கழுத்தினால் வருந்தல் உற்றார்.
நண்ணிய ஒருமை அன்பின் நாருறு பாசத்தாலே
திண்ணிய தொண்டர் பூட்டி இளைத்த பின், திறம்பி நிற்க
ஒண்ணுமோ கலயனார் தம் ஒருப்பாடு கண்ட போதே
அண்ணலார் நேரே நின்றார்; அமரரும் விசும்பில் ஆர்த்தார்.

குருபூஜை

குங்குலியக்கலய நாயனாரின் குருபூஜை, சிவாலயங்களில், ஒவ்வோராண்டும், ஆவணி மாதம், மூல நட்சத்திரத்தில் நடைபெறுகிறது.

உசாத்துணை


✅Finalised Page