under review

மூர்த்தி நாயனார்

From Tamil Wiki
மூர்த்தி நாயனார் (ஓவியம்: அமரர் எஸ். மாலையப்பன்)

மூர்த்தி நாயனார், சைவ சமய அடியார்களாகிய 63 நாயன்மார்களில் ஒருவர்.

வாழ்க்கைக் குறிப்பு

மூர்த்தி நாயனார், பாண்டிய நாட்டின் மதுரையில், வணிகர் குலத்தில் தோன்றினார். சிறந்த சிவபக்தராகத் திகழ்ந்த இவர், மதுரையில் எழுந்தருளியிருக்கும் சோமசுந்தரக் கடவுளுக்கு தினந்தோறும் சந்தனத்தை அரைத்துக் கொடுப்பதைத் தனது வழக்கமாக வைத்திருந்தார்.

தொன்மம்/சிவனின் ஆடல்

வடுகக் கருநாடக அரசன் ஒருவன், திடீரென மதுரை மீது போர் தொடுத்தான். போரில் வென்ற அவன், ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்டான். சமண சமயத்தைச் சேர்ந்த அவன் சைவத்தை வெறுத்தான். சைவர்களுக்குப் பல துன்பங்களைச் செய்தான். சைவத்தை முற்றிலும் மதுரையைவிட்டு ஒழிக்க எண்ணிய அவன், அதற்காகச் சமண முனிவர்கள் பலரைத் தன் நாட்டில் இருந்து வரவழைத்தான். அவர்கள் மூலம் சமண மதத்தைப் பரப்ப முற்பட்டான்.

சைவர்கள் அதற்குத் தடையாக இருப்பதை உணர்ந்தவன் அவர்களுக்குப் பல கொடுமைகளைச் செய்தான். சிவாலயங்களில் திருப்பணிகள் எதுவும் நடக்காத வண்ணம் பல தடைகளை ஏற்படுத்தினான். அந்த வகையில் மூர்த்தி நாயனாருக்கும் பல கொடுமைகள் புரிந்தான்.

மூர்த்தி நாயனார், அவனது தடைகளை எல்லாவற்றையும் மீறி, இறைவனுக்குச் சந்தனம் அரைத்துத் தரும் தம் திருப்பணியை விடாது செய்து வந்தார். இதனால் சீற்றமுற்ற அச்சமண மன்னன், நாயனாருக்கு அரைப்பதற்குச் சந்தனக் கட்டை கிடைக்காதவாறு சூழ்ச்சி செய்தான்.

மூர்த்தி நாயனார் மதுரையில் பல இடங்களில் தேடியும் அன்றைய சிவ வழிபாட்டிற்கான சந்தனம் கிடைக்காததால் மனம் வருந்தி ஆலயத்துக்கு வந்தார். “இன்று இறைவனது மெய்ப்பூச்சுக்குச் சந்தனம் கிடைக்காது போனாலும், அதனைத் தேய்க்கும் இந்தக் கைக்கு எந்தவிதத் தடையும் இல்லையே!” என்று எண்ணினார். உடன் சந்தனம் அரைக்கும் கற்பாறையில் தமது முழங்கையை வைத்துத் தனது தோலும், எலும்பும், நரம்பும் கரைந்து போகும்படித் தேய்க்க ஆரம்பித்தார்.

அவர் தேய்க்கத் தேய்க்க முழங்கையானது தோல் உரிந்து, ரத்தம் சொரிந்து, அது தேய்த்துச் செல்லும் இடமெல்லாம் எலும்பு திறந்து, உள் நரம்பு வெளிப்பட்டது. அது கண்டு பொறுக்காத சிவபெருமான் அசரீரியாக, “அன்பனே! இச்செயல் செய்யாதே! உன்னை வருத்திய தீயோன் ஆண்ட நாடு முழுவதும் நீயே ஆள்வாயாக! துன்பத்தையெல்லாம் முழுமையாகப் போக்கி இந்த உலகத்தைக் காப்பாயாக!. பின்பு உனது நியதியாகிய திருப்பணிகளைச் செய்து, நிறைவுற்று நம் உலகு சேர்வாயாக!” என்று சொல்லி ஆசிர்வதித்தார்.

அசரீரி கேட்டு நாயனார் தான் செய்து கொண்டிருந்த செயலை நிறுத்தினார். உடனே அவரது தேய்ந்த கையில் உள்ள புண்கள் எல்லாம் நீங்கின. இனிய நறுமணம் எங்கும் சூழ்ந்தது. அவர் உடலும் பொன் போல் ஒளி வீசியது. இறைவனின் கருணையை எண்ணி மூர்த்தி நாயனார் அழுதார்.

அந்த நாளின் இரவில் வடுக மன்னன் திடீரென இறந்து போனான். அவனுக்கு வாரிசுகள் யாரும் இல்லாததால் அமைச்சர்கள் உடனிருந்து அவனது ஈமக் கடன்களைச் செய்து முடித்தனர். அடுத்த மன்னராக அவர்கள் வழக்கப்படி பட்டத்து யானையின் கண்களைக் கட்டி அதன் துதிக்கையில் பூமாலையைக் கொடுத்து அனுப்புவது என்றும், அது யாரைத் தேர்ந்தெடுக்கிறதோ அவரையே அந்த நாட்டின் மன்னராக முடிசூட்டுவது என்றும் முடிவு செய்தனர்.

மறுநாள் யானையின் கண்களைக் கட்டி, துதிக்கையில் மலர் மாலையைக் கொடுத்து அனுப்பினர். யானை, ஆலவாயான் திருக்கோயிலின் வாயிலில் நின்று கொண்டிருந்த மூர்த்தி நாயனாரின் கழுத்தில் அம்மாலையை இட்டது. சமண மன்னனின் அமைச்சர்கள் மூர்த்தி நாயனாரை மன்னனாகப் பொறுப்பேற்க வேண்டினர்.

மூர்த்தி நாயனார் அதற்கு, “சமண சமயம் நீங்கி, முழுமுதற் சைவம் ஓங்குவதாக இருந்தால் மட்டுமே நான் அரசாட்சியை ஏற்றுக் கொள்வேன்” என்றார். அனைவரும் அதற்கு ஒப்புக் கொண்டனர். மேலும் மூர்த்தி நாயனார், “நான் ஆட்சியை ஏற்பதாக இருந்தால் சிவபெருமானது திருமேனியில் விளங்கும் திருநீறே எனக்குச் செய்யும் மகுடாபிஷேகமாகவும், ஐயனின் அடையாளமாகிய ருத்திராட்சமே எனது அணிகலனாகவும், இறைவனது திருஅடையாளமாகிய சடாமுடியே எனக்குக் கிரீடமாகவும் இருக்கட்டும்” என்று அறிவித்தார். அனைவரும் அதற்கு உடன்பட்டனர். மூர்த்தி நாயனார் மன்னராகப் பொறுப்பேற்றார்.

மூர்த்தி நாயனார் பல காலம் அரசாண்டு சைவ சமயத்தைத் தழைத்தோங்கச் செய்து, சிவனடியார்களுக்குப் பல நற்பணிகளைச் செய்து இறுதியில் சிவபதம் அடைந்தார்.

மும்மையால் உலகு ஆண்ட மூர்த்திக்கும் அடியேன் - சுந்தரர் (திருத்தொண்டத் தொகை)

பாடல்கள்

பெரிய புராணத்தில் இப்புராணக் கதையை விளக்கும் பாடல்கள்:

மூர்த்தி நாயனார், சந்தனம் சாற்றும் திருப்பணி செய்தது

அந்திப் பிறை செஞ்சடை மேல் அணி ஆலவாயில்
எந்தைக்கு அணி சந்தனக் காப்பு இடை என்றும் முட்டா
அந்தச் செயலின் நிலை நின்று அடியார் உவப்பச்
சிந்தைக்கு இனிது ஆய திருப்பணி செய்யும் நாளில்

சமண மன்னன், மூர்த்தி நாயனாருக்குச் சந்தனம் கிடைக்காமல் செய்தது

எள்ளும் செயல் வன்மைகள் எல்லை இல்லாத செய்யத்
தள்ளும் செயல் இல்லவர் சந்தனக் காப்புத் தேடிக்
கொள்ளும் துறையும் அடைத்தான் கொடுங்கோன்மை செய்வான்
தெள்ளும் புனல் வேணியர்க்கு அன்பரும் சிந்தை நொந்து

மூர்த்தி நாயனார் தன் கையையே சந்தனமாக அரைத்தது

நட்டம்புரி வாரணி நற்றிரு மெய்ப்பூச் சின்று
முட்டும்பரி சாயினுந் தேய்க்குங்கை முட்டா தென்று
வட்டந்திகழ் பாறையின் வைத்து முழங்கை தேய்த்தார்
கட்டும்புறந் தோனரம் பென்பு கரைந்து தேய

சிவனின் அசரீரி வாக்கு

அன்பின் துணிவால் இது செய்திடல் ஐய உன்பால்
வன்புன்கண் விளைத்தவன் கொண்ட மண் எல்லாம் கொண்டு
முன்பு இன்னல் புகுந்தன முற்றவும் நீத்துக் காத்துப்
பின்பு உன் பணி செய்து நம் பேர் உலகு எய்துக என்ன

மூர்த்தி நாயனார், மன்னர் ஆகி சைவம் தழைத்தோங்கச் செய்தது

நுதலின் கண் விழித்தவர் வாய்மை நுணங்கு நூலின்
பதம் எங்கும் நிறைந்து விளங்கப் பவங்கள் மாற
உதவும் திருநீறு உயர் கண்டிகை கொண்ட வேணி
முதன் மும்மையினால் உலகு ஆண்டனர் மூர்த்தியார் தாம்

குரு பூஜை

மூர்த்தி நாயனாரின் குரு பூஜை, சிவாலயங்களில், ஒவ்வோராண்டும், ஆடி மாதம், கார்த்திகை நட்சத்திரத்தில் நடைபெறுகிறது.

உசாத்துணை


✅Finalised Page