under review

புகழ்த்துணை நாயனார்

From Tamil Wiki
புகழ்த்துணை நாயனார் (ஓவியம்: அமரர் எஸ். மாலையப்பன்)

புகழ்த்துணை நாயனார், சைவ சமய அடியார்களாகிய 63 நாயன்மார்களில் ஒருவர்.

வாழ்க்கைக் குறிப்பு

புகழ்த்துணை நாயனார், சோழநாட்டின் செருவில்லிபுத்தூர் என்னும் தலத்தில் வேதியர் குலத்தில் தோன்றினார். சிவபக்தரான இவர், சிவபெருமானை சிவாகம முறைப்படி பூசித்து வழிபட்டு வந்தார்.

தொன்மம்/சிவனின் ஆடல்

இந்நிலையில் நாட்டைக் கொடிய பஞ்சம் தாக்கியது. வறுமை எங்கும் சூழ்ந்தது. உண்பதற்குக் கூட உணவு இல்லாத நிலை ஏற்பட்டது. புகழ்த்துணை நாயனாரும் வறுமையால் பாதிக்கப்பட்டார். அப்போதும் அவர் மனத் தளர்ச்சியுறாமல், ‘சிவபெருமானின் பூசையை எந்தத் தடை வந்தாலும் நிறுத்த மாட்டேன்’ என்று உள்ளத்தில் உறுதிபூண்டு, தொடர்ந்து செய்து வந்தார்.

ஒருநாள் இறைவனுக்கு அபிஷேகம் செய்யும்பொழுது, உண்ணாமையால் ஏற்பட்ட உடல் தளர்ச்சியால் குடம் நழுவி இறைவனின் மீது விழுந்தது. அதனால் அஞ்சிய புகழ்த்துணை நாயனார் கீழே விழுந்தார். சோர்வினால் உறக்கம் வந்த நிலையில் அவருக்கு ஒரு கனவு தோன்றியது. அதில் சிவபெருமான் தோன்றி, “அன்பனே, கவலை வேண்டாம்! பஞ்சம் நீங்கும்வரை தினந்தோறும் இங்கே உனக்கு ஒரு காசு வைப்போம்” என்று அருளிச்செய்தார்.

உடன் நாயனார் உறக்கத்திலிருந்து எழுந்தார். பீடத்தின் கீழே ஒரு பொற்காசு இருப்பதைக் கண்டு வியந்தார். சிவபூசைக்கு இனி தடை ஏற்படாது என்றெண்ணி மகிழ்ந்தார். தினந்தோறும் அவ்வாறு கிடைக்கும் பொற்காசுகளைக் கொண்டு நித்ய சிவபூசையைச் சிறப்புடன் செய்தார். இவ்வாறு புகழ்த்துணை நாயனார் நீண்ட காலம் வாழ்ந்து, இறைவனுக்குரிய சிவத்தொண்டை சீரியமுறையில் செய்து, இறுதியில் சிவபெருமானின் திருவடியை அடைந்தார்.

புடை சூழ்ந்த புலி அதள் மேல் அரவு ஆட ஆடி பொன் அடிக்கே மனம் வைத்த புகழ்த் துணைக்கும் அடியேன் - சுந்தரர் (திருத்தொண்டத் தொகை)

பாடல்கள்

பெரிய புராணத்தில் இப்புராணக் கதையை விளக்கும் பாடல்கள்:

புகழ்த்துணை நாயனார், வறுமையிலும் சிவ பூஜையைத் தொடர்ந்தது

தம் கோனைத் தவத்தாலே தத்துவத்தின் வழிபடும் நாள்
பொங்கு ஓத ஞாலத்து வற்கடமாய்ப் பசி புரிந்தும்
எம் கோமான் தனை விடுவேன் அல்லேன் என்று இராப் பகலும்
கொங்குஆர் பன் மலர் கொண்டு குளிர் புனல் கொண்டு அர்ச்சிப்பார்

சிவபூஜையின் போது தளர்ந்து விழுந்து உறங்கியது

மால் அயனுக்கு அரியானை மஞ்சனம் ஆட்டும் பொழுது
சால உறு பசிப்பிணியால் வருந்தி நிலை தளர்வு எய்திக்
கோல நிறை புனல் தாங்கு குடம் தாங்க மாட்டாமை
ஆலம் அணி கண்டத்தார் முடி மீது வீழ்த்து அயர்வார்

கனவில் தோன்றிய சிவபெருமானின் அருளிச் செயல்

சங்கரன் தன் அருளால் ஓர் துயில் வந்து தமை அடைய
அங் கணனும் களவின்கண் அருள் புரிவான் அருந்தும் உணவு
மங்கிய நாள் கழி அளவும் வைப்பது நித்தமும் ஒரு காசு
இங்கு உனக்கு நாம் என்ன இடர் நீங்கி எழுந்திருந்தார்

புகழ்த்துணை நாயனார், பொற்காசு கொண்டு சிவப்பணி செய்து சிவன் திருவடியை அடைதல்

அந்நாள் போல் எந்நாளும் அளித்த காசு அது கொண்டே
இன்னாத பசிப் பிணி வந்து இறுத்த நாள் நீங்கிய பின்
மின் ஆர் செஞ்சடையார்க்கு மெய் அடிமைத்தொழில் செய்து
பொன்நாட்டின் அமரர் தொழப் புனிதர் அடிநிழல் சேர்ந்தார்

குரு பூஜை

புகழ்த்துணை நாயனாரின் குரு பூஜை, சிவாலயங்களில், ஒவ்வோராண்டும், ஆவணி மாதம், ஆயில்ய நட்சத்திரத்தில் நடைபெறுகிறது.

உசாத்துணை


✅Finalised Page