under review

முப்போதும் திருமேனி தீண்டுவார்

From Tamil Wiki
முப்போதும் திருமேனி தீண்டுவார் (ஓவியம்: அமரர் எஸ். மாலையப்பன்)

சேக்கிழார், பெரிய புராணத்தில் 63 நாயன்மார்களுடன் தொகையடியார்கள் ஒன்பது பேரைப் பற்றி பாடியுள்ளார். ‘முப்போதும் திருமேனி தீண்டுவார் புராணம்' என்பது அவற்றில் ஒன்று.

முப்போதும் திருமேனி தீண்டுவார் - விளக்கம்

“சிவபெருமானது திருவருளினால், உண்மையான சிவாகம ஞானநெறியில் நின்று, முறை தவறாமல் காலங்கள் தோறும் வழிபாடு செய்வதில் பேரார்வமும் அன்பும் உடையவர்கள் இவர்கள். நாள்தோறும் விடியற்காலையில் எழுந்து நீராடித் திருநீறணிந்து திருவைந்தெழுத்தோதி ஈசனை வணங்கும் தன்மையர்கள். காலை, நண்பகல், இரவு என்னும் மூன்று காலங்களிலும் சிவலிங்கத் திருமேனியைத் தீண்டி அர்ச்சிக்கும் பேறு பெற்ற ஆதிசைவ அந்தணர்களே 'முப்பொழுதும் திருமேனி தீண்டுவார்' என்னும் திருக்கூட்டத்தினராவர்.

வழிவழியாக, சிவனது திருத்தொண்டை விரும்பி வழிபாடுகள், அர்ச்சனைகள் செய்யும் கடமைகள் சிவமறையோர்களுக்கே உரியன. அந்தப் பெருந்தகையாளர்களது பெருமை என்னால் புகழப்படும் தன்மையுள் அடங்குமோ?

பிரம்மா, விஷ்ணு போன்ற தேவர்களுக்கும் அரியவராகவும், வேதங்களின் முழுமுதல் பொருளாகவும் விளங்குவர் சிவபெருமான். அவரை அன்பு காரணமாக அர்ச்சனை செய்து, வணங்கித் துதிக்கும் இச்சிவ மறையோர்களின் திருவடிகள் என்றும் வணங்கத்தக்கன” - என்று பெரிய புராணத்தில் சேக்கிழார் பெருமான் குறிப்பிட்டுள்ளார்.

முப்போதும் திருமேனி தீண்டுவார்க்கு அடியேன் - சுந்தரர் (திருத்தொண்டத் தொகை)

பாடல்கள்

பெரிய புராணத்தில் இப்புராணக் கதையை விளக்கும் பாடல்கள்

எப்போது மினியபிரா னின்னருளா லதிகரித்து
மெய்ப்போத நெறிவந்த விதிமுறைமை வழுவாமே
அப்போதைக் கப்போது மார்வமிகு மன்பினராய்
முப்போது மருச்சிப்பார் முதற்சைவ ராமுனிவர்
தெரிந்துணரின் முப்போதுஞ் செல்கால நிகழ்காலம்
வருங்கால மானவற்றின் வழிவழியே திருத்தொண்டின்
விரும்பியவர்ச் சனைகள்சிவ வேதியர்க்கே யுரியன அப்
பெருந்தகையார் குலப்பெருமை யாம்புகழும் பெற்றியதோ?
நாரணற்கு நான்முகற்கு மறிய வொண்ணா
நாதனையெம் பெருமானை ஞான மான
ஆரணத்தி னுட்பொருள்க ளனைத்து மாகும்
அண்ணலையெண் ணியகால மூன்று மன்பின்
காரணத்தா லர்ச்சிக்கு மறையோர் தங்கள்
கமலமலர்க் கழல்வணங்கிக் கசிந்து சிந்தைப்
பூரணத்தான் முழுநீறு பூசிவாழும்
புனிதர்செய லறிந்தவா புகல லுற்றேன்.

குரு பூஜை

முப்போதும் திருமேனி தீண்டுவார்களின் குரு பூஜை, சிவாலயங்களில், ஒவ்வோராண்டும், பங்குனி மாதத்தின் இறுதி நாளன்று நடைபெறுகிறது.

உசாத்துணை


✅Finalised Page