under review

தொகையடியார்கள்

From Tamil Wiki
நாயன்மார்கள்

சேக்கிழார் பெருமான், சுந்தரர் பாடிய நாயன்மார்களுடன், சுந்தரரையும், அவரது பெற்றோர்களான சடையனார், இசைஞானியார் ஆகியோரையும் சேர்த்து, அறுபத்து மூன்று நாயன்மார்களாக வகுத்தார். அவர்களது வரலாற்றை திருத்தொண்டர் புராணம் என்னும் பெரிய புராணமாக இயற்றினார். 63 நாயன்மார்களுடன் 9 தொகையடியார்களையும் இணைத்துப் பாடினார்.

தொகையடியார்கள் விளக்கம்

சுந்தரர் திருத்தொண்டத் தொகையிலும், நம்பியாண்டார் நம்பிகள் திருத்தொண்டர் திருவந்தாதியிலும் தொகையடியார்களைப் பற்றிப் பாடியுள்ளதால், அவற்றை மூல நூல்களாகக் கொண்டு ‘திருத்தொண்டர் புராணம்’ இயற்றிய சேக்கிழாரும், தொகையடியார்களைப் பற்றிப் பாடினார்.

சித்தத்தில் சிவத்தை ஏற்றி, முப்பொழுதும் சிவத்தொண்டில் ஈடுபட்டு, நன்னெறியில் வாழும் இவர்களை, நாயன்மார்களுடன் இணை வைத்துப் பாடினார்.

ஒன்பது தொகையடியார்கள்

1. தில்லைவாழ் அந்தணர்கள்

தில்லைவாழ் அந்தணர்களான 3000 பேரும் முதல் தொகையடியாராகப் போற்றப்படுகின்றனர்.

2. பொய்யடிமை இல்லாத புலவர்கள்

சங்க காலப் புலவர்களான நக்கீரர், கபிலர், பரணர் போன்ற நாற்பத்தொன்பதின்மர், பொய்யடிமை இல்லாத புலவர்களாகப் போற்றப்படுகின்றனர்.

3. பத்தராய்ப் பணிவார்

எங்கும், எவ்விடத்தும் சிவனை மறவாத சிந்தையர்களாகத் திகழ்பவர்களை பத்தராய்ப் பணிவார் என்று சேக்கிழார் பெருமான் குறிப்பிடுகிறார்.

4. பரமனைப் பாடுவார்

சிவபெருமானை மட்டுமே தங்கள் முழு முதற் கடவுளாக எண்ணிப் பாடுபவர்கள், பிற தெய்வத்தை பாடாதவர்கள் பரமனையே பாடுவார் ஆவர்.

5. சித்தத்தை சிவன்பாலே வைத்தார்

சிவயோக நெறியில் சித்தத்தை வைத்து முக்தியடைந்தவர்கள், சித்தத்தை சிவன்பாலே வைத்தோர் ஆவர்.

6. திருவாரூரில் பிறந்தார்

திருக்கயிலையில் உள்ள சிவகணங்களே திருவாரூரில் பிறந்தவர்களாக போற்றப்படுகின்றனர்.

7. முப்போதும் திருமேனி தீண்டுவார்

காலை, நண்பகல், இரவு என மூன்று காலங்களிலும் சிவபெருமானை அபிஷேகம் செய்து அர்ச்சிப்பவர்களை முப்போதும் திருமேனி தீண்டுவார் என்று போற்றுகிறார் சேக்கிழார்.

8. முழுநீறு பூசிய முனிவர்

உடல் முழுவதும் திருநீறு பூசி சிவபெருமானையே அனுதினமும் பூசித்து வருபவர்கள், முழுநீறு பூசிய முனிவர்களாகப் போற்றப்படுகின்றனர்.

9. அப்பாலும் அடிசார்ந்தார்

தமிழ்நாட்டின் எல்லைக்கு அப்பால் உள்ள நாடுகளில் வாழும் சிவனடியார்கள், அப்பாலும் அடிசார்ந்தார் என்று சேக்கிழாரால் போற்றப்படுகின்றனர்.

இவர்களில், தில்லைவாழ் அந்தணர்களை, தில்லைவாழ் அந்தணர் சருக்கத்தில், பிற நாயன்மார்களுடன் இணைத்துப் பாடியுள்ளார். அதுபோல் பொய்யடிமை இல்லாத புலவர்களை, ‘பொய்யடிமை இல்லாத புலவர் சருக்க’த்தில், பிற நாயன்மார்களுன் இணைத்துப் பாடியுள்ளார். பத்தராய்ப் பணிவார் தொடங்கி, அப்பாலும் அடிசார்ந்தார் வரை உள்ள ஏழு தொகையடியார்களையும் பத்தராய்ப் பணிவார் சருக்கத்தில் ஒன்றாக இணைத்துப் பாடியுள்ளார்.

உசாத்துணை


✅Finalised Page