under review

தில்லைவாழ் அந்தணர்கள்

From Tamil Wiki
தில்லைவாழ் அந்தணர்கள் (ஓவியம்: அமரர் எஸ். மாலையப்பன்)

சேக்கிழார் பெருமான், பெரிய புராணத்தில் 63 நாயன்மார்களுடன் தொகையடியார்கள் ஒன்பதுபேரைப் பற்றி பாடியுள்ளார். தில்லைவாழ் அந்தணர்கள் புராணம் என்பது அவற்றில் ஒன்று.

தில்லைவாழ் அந்தணர்கள் - விளக்கம்

சுந்தரமூர்த்தி நாயனார் திருத்தொண்டர்கள் வரலாற்றைப் பாட முற்பட்டபோது, சிவபெருமான் முதலடியாக, ‘தில்லைவாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன்' என்பதைச் சொல்லி, அதனை முதலாகக் கொண்டு பாடும் படிப் பணித்தார். அவ்வாறே சுந்தரரும் திருத்தொண்டத் தொகை நூலைப் பாடினார். அதனை அடியொற்றித் திருத்தொண்டர் புராணம் என்னும் பெரிய புராணத்தை இயற்றிய சேக்கிழாரும், தில்லை வாழ் அந்தணர்களைப் போற்றித் துதித்து, தில்லை வாழ் அந்தணர் சருக்கத்தில் அவர்கள் வரலாற்றைப் பாடினார். “ஆகாயத் தலமாகப் போற்றப்படும் சிதம்பரம். இத்தலத்தில் சிவபெருமான் ஆடல்வல்லானாகக் காட்சி தருகிறான். இத்தலத்தில் சிவபெருமானுக்கான ஆராதனை முதலிய திருத்தொண்டைச் செய்பவர்களே தில்லைவாழ் அந்தணர்கள். ‘தில்லை மூவாயிரவர்’ என்று அழைக்கப்படும் இவர்கள், சிவபெருமானுக்குரிய பூசைகளை முறைப்படி வழுவாது செய்து வருபவர்கள். அனுதினமும் வேத மந்திரங்களால் இறைவனைத் துதிப்பவர்கள். சிவ சின்னங்களான திருநீற்றையும், ருத்திராட்சத்தையும் அணிபவர்கள்.

நால்வகை வேதங்களையும், அந்த வேதத்தின் ஆறு அங்கங்களையும் முறையாக அறிந்தவர்கள். அனுதினமும் தீ வளர்த்து வேள்வி செய்பவர்கள். ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல் என்னும் அறுதொழிலை மறவாதவர்கள். சரியை, கிரியை, யோகம், ஞானம் ஆகிய நால்வகை நெறியையும் நன்கு உணர்ந்தவர்கள். பெறுவதற்கென்று வேறு பேறு ஏதும் இல்லாமல் எல்லாவற்றையும் குறைவறப் பெற்றவர்கள். தமக்கு நிகரானவர்கள் தாமே தாம்; பிறர் யாருமில்லை என்னும் நிலைபெற்ற சிவத்தொண்டர்கள். சிவ சிந்தையர்களான இவர்களுடைய பெருமை இத்தகையது என்று சொல்வதற்கரியது.” - என்று பெரியபுராணத்தில் தில்லை வாழ் அந்தணர்களைப் பற்றிச் சேக்கிழார் குறிப்பிட்டுள்ளார்.

தில்லைவாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன் - சுந்தரர். (திருத்தொண்டத் தொகை)

பாடல்கள்

பெரிய புராணத்தில் இப்புராணக் கதையை விளக்கும் பாடல்கள்

பொங்கிய திருவில் நீடும் பொற்பு உடைப் பணிகள் ஏந்தி
மங்கலத் தொழில்கள் செய்து மறைகளால் துதித்து மற்றும்
தங்களுக்கு ஏற்ற பண்பில் தகும் பணித் தலை நின்று உய்த்தே
அங்கணர் கோயில் உள்ளா அகம் படித் தொண்டு செய்வார்
ஞானமே முதலாம் நான்கும் நவை அறத் தெரிந்து மிக்கார்
தானமும் தவமும் வல்லார் தகுதியின் பகுதி சார்ந்தார்
ஊனம் மேல் ஒன்றும் இல்லார் உலகெலாம் புகழ்ந்து போற்றும்
மானமும் பொறையும் தாங்கி மனை அறம் புரிந்து வாழ்வார்
செம்மையால் தணிந்த சிந்தைத் தெய்வ வேதியர்கள் ஆனார்
மும்மை ஆயிரவர் தாங்கள் போற்றிட முதல்வனாரை
இம்மையே பெற்று வாழ்வார் இனிப் பெறும் பேறு ஒன்று இல்லார்
தம்மையே தமக்கு ஒப்பான நிலைமையால் தலைமை சார்ந்தார்

குரு பூஜை

தில்லைவாழ் அந்தணர்களின் குரு பூஜை, சிவாலயங்களில், ஒவ்வோராண்டும், சித்திரை மாதத்தின் முதல் நாளன்று நடைபெறுகிறது.

உசாத்துணை


✅Finalised Page