under review

சித்தத்தை சிவன்பாலே வைத்தார்

From Tamil Wiki
சித்தத்தை சிவன்பாலே வைத்தார் (ஓவியம்: அமரர் எஸ். மாலையப்பன்)

சேக்கிழார் பெருமான், பெரிய புராணத்தில் 63 நாயன்மார்களுடன் தொகையடியார்கள் ஒன்பது பேரைப் பற்றி பாடியுள்ளார். ‘சித்தத்தை சிவன்பாலே வைத்தார் புராணம்' என்பது அவற்றில் ஒன்று.

சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார் - விளக்கம்

சிவத்தை அடைய விரும்பும் தவயோகிகள் தியான, தவத்தோடு மௌன விரதத்தையும் மேற்கொள்வர். அவற்றில் வாய் பேசாமல் இருப்பது வாய் மௌனம். உடல் அசைவற்றுக் கிடப்பது காஷ்ட மெளனம். மனதை ஒருநிலைப்படுத்தி மகா மௌனத்தில் ஆழ்ந்திருப்பது மனோ லயம் எனப்படும். தொடர்ந்த பயிற்சிகளால் சிவனைத் தன்னுள் உணர்ந்து சிவனோடு ஒன்றிய நிலையில் இவர்கள் இருப்பார்கள்.

இவர்கள் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்னும் ஐந்தொழில்களைச் செய்யும் பிரம்மன், திருமால், ருத்ரன், மகேஸ்வரன், சதாசிவன் என்னும் ஐம்பெருங்கடவுளர் இருக்கும் ஐவகைத் தாமரைப் பீடங்களையுடைய பதவிகளைக் கடந்தவர்கள். அட்டாங்க யோகத்துள் இயமம், நியமம், ஆசனம், பிராணயாமம், பிரத்தியாகாரம் என்னும் ஐந்தினையும் பயின்றவர்கள். அதன் மூலம் சித்தத்தை ஒருவழியில் நிறுத்தும் தாரணையால், சிவஞான ஒளி வீசும் நாதாந்தத்தில், சித்தத்தை நிலை நிறுத்தும் தன்மை பெற்றவர்கள். இத்தகைய ஆற்றலினால் இவர்கள் சித்தத்தைச் சிவன் பாலே வைத்தவர்களாவர். இவர்கள் அம்பலக்கூத்தனை தொண்டின் வழி நின்று அடைந்த பெருமையை உடையவர்கள்.” - என்று பெரியபுராணத்தில் சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார் பற்றிச் சேக்கிழார் குறிப்பிட்டுள்ளார்.

சித்தத்தைச் சிவன் பாலே வைத்தார்க்கும் அடியேன் - சுந்தரர் (திருத்தொண்டத் தொகை)

பாடல்கள்

பெரிய புராணத்தில் இப்புராணக் கதையை விளக்கும் பாடல்

காரண பங்கயம் ஐந்தின் கடவுளர் தம் பதம் கடந்து
பூரண மெய்ப் பரஞ்சோதி பொலிந்து இலங்கு நாதாஅந்த
தாரணையால் சிவத்து அடைந்த சித்தத்தார் தனி மன்றுள்
ஆரண காரணக் கூத்தர் அடித்தொண்டின் வழி அடைந்தார்

குரு பூஜை

சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார்களின் குரு பூஜை, சிவாலயங்களில், ஒவ்வோராண்டும், பங்குனி மாதத்தின் இறுதி நாளன்று நடைபெறுகிறது.

உசாத்துணை


✅Finalised Page