under review

திருவாரூர்ப் பிறந்தார்

From Tamil Wiki
திருவாரூர்ப் பிறந்தார் (ஓவியம்: அமரர் எஸ். மாலையப்பன்)

சேக்கிழார் பெருமான், பெரிய புராணத்தில் 63 நாயன்மார்களுடன் தொகையடியார்கள் ஒன்பது பேரைப் பற்றி பாடியுள்ளார். ‘திருவாரூர்ப் பிறந்தார் புராணம்' என்பது அவற்றில் ஒன்று.

திருவாரூர்ப் பிறந்தார் - விளக்கம்

“அருவமாகவும், உருவமாகவும் எல்லாப் பொருள்களிலும் நிறைந்திருப்பவன் சிவபெருமான். அப்படிப் புகழ்வாய்ந்த சிவபிரானின் தொண்டர்கள் வாழும் ஊர் திருவாரூர். இவ்வூரில் பிறந்தவர்கள் மிகச் சிறந்தவர்கள். அவர்கள் செய்யும் திருத்தொண்டின் சிறப்பை சிறியேனாகிய என்னால் எங்ஙனம் உரைக்க இயலும்?” - என்கிறார் சேக்கிழார் பெருமான்.

“சிவபெருமான் மகிழ்ச்சியுடன் விற்றிருக்கும் திருவாரூர்த் தலத்தில் பிறக்கும் பேறு பெற்றவர்கள் எல்லாரும் திருக்கயிலையில் வீற்றிருந்தருளும் சிவபெருமானின் திருக்கணத்தவராவர். அவர்களுடைய திருவடிகளை வணங்கி வழிபடுபவர்களுக்கு, உயர்ந்த வீட்டு நெறி சித்திக்கும் என்பது திண்ணம்” - என்று திருவாரூர்ப் பிறந்தார் புராணத்தில் குறிப்பிட்டுள்ளார் சேக்கிழார்.

திரு ஆரூர்ப் பிறந்தார்கள் எல்லார்க்கும் அடியேன் - சுந்தரர் (திருத்தொண்டத் தொகை)

பாடல்கள்

பெரிய புராணத்தில் இப்புராணக் கதையை விளக்கும் பாடல்கள்

அருவாகி யுருவாகி யனைத்துமாய் நின்றபிரான்
மருவாருங் குழலுமையாண் மணவாளன் மகிழ்ந்தருளுந்
திருவாரூர்ப் பிறந்தார்க டிருத்தொண்டு தெரிந்துணர
ஒருவாயாற் சிறியேனா லுரைக்கலாந் தகைமையதோ?
திருக்கயிலை வீற்றிருந்த சிவபெருமான் றிருக்கணத்தார்
பெருக்கியசீர்த் திருவாரூர்ப் பிறந்தார்க ளாதலினால்
றருக்கியவைம் பொறியடக்கி மற்றவர்தந் தாள்வணங்கி
யொருக்கியநெஞ் சுடையவர்க்கே யணித்தாகு முயர்நெறியே.

குரு பூஜை

திருவாரூர்ப் பிறந்தார்களின் குரு பூஜை, சிவாலயங்களில், ஒவ்வோராண்டும், பங்குனி மாதத்தின் இறுதி நாளன்று நடைபெறுகிறது.

உசாத்துணை


✅Finalised Page