சடைய நாயனார்
சைவ அடியார்களான அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர் சடையனார். இவர் இசைஞானியாரை மணந்தார். சுந்தரமூர்த்தி நாயனாரின் தந்தை.
வாழ்க்கைக் குறிப்பு
சடைய நாயனார் திருமுனைப்பாடி நாட்டில் திருநாவலூரில் ஆதி சைவர் குலத்தில் பிறந்தார். அவரின் முன்னோர்கள் அனைவரும் சிவனாருக்கு தொண்டு செய்து வந்தனர். சடையனாரும் தம்முடைய முன்னோர்களைப் போலவே சிவ வழிபாடும், சிவத்தொண்டும் செய்து வந்தார்.
இசைஞானியாரை மணந்தார். சுந்தரமூர்த்தி நாயனார் இவரது மகன். திருநாவலூர் இரைவனை வழிபட வந்த நரசிங்கமுனையரைய நாயனார் திருநாவலூர் வீதியில் விளையாடிய சுந்தரரைக் கண்டு அழகில் மயங்கினார். சடைய நாயனாரிடம் சென்று ஆரூராரை வளர்க்கும் பணியை தம்மிடம் ஒப்படைக்குமாறு வேண்டினார். சடைய நாயனாரும் அதற்கு ஒப்புக்கொண்டு ஆரூராரை நரசிங்க முனைய நாயனாரிடம் ஒப்படைத்தார்.
சடைய நாயனார் இறுதியில் இறைவனின் திருபாதம் அடைந்து வீடுபேற்றினைப் பெற்றார் என்று பெரிய புராணம் குறிப்பிடுகிறது. சுந்தரர் சடைய நாயனாரை, ‘ஊரன் சடையன்றன் காதலன்’, ‘சடையன்றன் சிறுவன் வன்றொண்டன்’, ‘சடையன் திருவாரூரன்’ ‘நண்புடைய நன்சடையன் சிறுவன்’ ‘சடையன் காதலன்’ என தம்முடைய பாடல்களில் பல இடங்களில் சிறப்பித்துள்ளார்.
சிவபக்தராக இருந்ததாலும் ,, சுந்தரரை மகனாகப் பெற்றதாலும் சடைய நாயனார் 63 நாயன்மார்களில் ஒருவராக வைத்துப் போற்றப்படுகிறார். ‘அரனடியே அடைந்திட்ட சடையனுக்கு அடியேன்’- திருத்தொண்டத் தொகை
பாடல்கள்
பெரிய புராணம் கூறும் சடைய நாயனார் வரலாறு
தம்பிரானைத் தோழமை கொண்டு அருளித் தமது தடம் புயம் சேர்
கொம்பனார் பால் ஒரு தூது செல்ல ஏவிக் கொண்டு அருளும்
எம்பிரானைச் சேரமான் பெருமாள் இணைஇல் துணைவராம்
நம்பி ஆரூரைப் பயந்தார் ஞாலம் எல்லாம் குடிவாழ.
திருத்தொண்டர் திருவந்தாதி
தலம்விளங் குந்திரு நாவலூர் தன்னிற் சடையனென்னுங்
குலம்விளங் கும்புக ழோனை யுரைப்பர் குவலயத்தின்
நலம்விளங் கும்படி நாம்விளங் கும்படி நற்றவத்தின்
குலம்விளங் கும்படி யாரூ ரனைமுன் பயந்தமையே
குருபூஜை
சடைய நாயனாரின் குருபூஜை மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தன்று சிவாலயங்களில் நடக்கிறது.
உசாத்துணை
சடைய நாயனார் புராணம், சைவம்.ஆர்க்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
04-May-2023, 06:36:37 IST