under review

சோமாசி மாற நாயனார்

From Tamil Wiki
சோமாசி மாற நாயனார் (ஓவியம்: அமரர் எஸ். மாலையப்பன்)

சோமாசி மாற நாயனார், சைவ சமய அடியார்களாகிய 63 நாயன்மார்களில் ஒருவர்.

வாழ்க்கைக் குறிப்பு

சோமாசி மாற நாயனார், சோழநாட்டின் திருவம்பர் என்னும் தலத்தில் அந்தணர் மரபில் தோன்றியவர். சிவனடியார்களைக் கண்டால் அவர்களது பாதம் பணிந்து, அவர்களுக்கு அன்போடு திருவமுது செய்விப்பதைத் தனது வழக்கமாகக் கொண்டிருந்தார். தினந்தோறும் சிவபெருமானுக்காகப் பல்வேறு வேள்விகளைச் செய்து இவர் வணங்கி வந்தார். அதில் சிவனுக்காகச் செய்யப்படும் சோம வேள்வியை அதிகம் செய்ததால் இவர் சோமாசி மாற நாயனார் என்று அழைக்கப்பட்டார்.

சிவத்தொண்டு

சோமாசி மாற நாயனார், சிவபெருமானின் அன்பர்கள் எக்குலத்தில் பிறந்தவர்களாக இருந்தாலும், அவர்கள் தனக்கும் அன்பர்களே என்ற எண்ணம் கொண்டிருந்தார். திருவைந்தெழுத்தை தினமும் ஓதி வந்தார். ஒருமுறை திருவாரூக்குச் சென்றிருந்த சோமாசி மாற நாயனார், அங்கு சுந்தரமூர்த்தி நாயனாரைக் கண்டார். சுந்தரரின் பாதம் பணிந்து வணங்கினார். பின் திருவாரூரிலேயே தங்கி இறைவனை வழிபட்டு வந்தார்.

ஐம்புலன்களையும் காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாச்சரியம் என்னும் அறு வகைக் குற்றங்களையும் தனது தூய தவத்தால் வென்ற சோமாசி மாற நாயனார், நாள்தோறும் தவறாமல் வேள்விகளையும், சிவத்தொண்டுகளையும் செய்தார். சுந்தரருடைய திருவடிகளைத் தொழுது பெற்ற சிறப்பினால் என்றும் சிவலோகத்தில் நிலைத்திருக்கும் பேறு பெற்றார் என்று பெரிய புராணம் குறிப்பிடுகிறது.

அம்பரான் சோமாசி மாறனுக்கும் அடியேன் - சுந்தரர் (திருத்தொண்டத் தொகை)

பாடல்கள்

பெரிய புராணத்தில் இப்புராணக் கதையை விளக்கும் பாடல்கள்:

சோமாசி மாற நாயனார், சிவ நெறியில் நின்று வழிபட்டது

எத்தன்மையர் ஆயினும் ஈசனுக்கு அன்பர் என்றால்
அத் தன்மையர் தாம் நமை ஆள்பவர் என்று கொள்வார்
சித்தம் தெளியச் சிவன் அஞ்சு எழுத்து ஓதும் வாய்மை
நித்தம் நியமம் எனப் போற்றும் நெறியில் நின்றார்

சோமாசி மாற நாயனார், சிவபதம் பெற்றது

துன்றும் புலன் ஐந்து உடன் ஆறு தொகுத்த குற்றம்
வென்று இங்கு இது நல்நெறி சேரும் விளக்கம் என்றே
வன் தொண்டர் பாதம் தொழுது ஆன சிறப்பு வாய்ப்ப
என்றும் நிலவும் சிவலோ கத்தில் இன்பம் உற்றார்

குருபூஜை

சோமாசி மாற நாயனாரின் குருபூஜை, சிவாலயங்களில், ஒவ்வோராண்டும், வைகாசி மாதம், ஆயில்ய நட்சத்திரத்தில் நடைபெறுகிறது.

உசாத்துணை


✅Finalised Page