திருநீலநக்க நாயனார்
திருநீலநக்க நாயனார், சைவ சமய அடியார்களாகிய 63 நாயன்மார்களில் ஒருவர்.
வாழ்க்கைக் குறிப்பு
நீலநக்க நாயனார், சோழ நாட்டில் உள்ள சாத்தமங்கையில், அந்தணர் குலத்தில் தோன்றினார். சிவனடியார்களுக்குத் திருவமுது செய்விப்பது முதல் ஆடைகள் அளிப்பது வரை அவர்களுக்குத் தேவையான பல உதவிகளைச் செய்தார். ஆகம வழிமுறைப்படி தினமும் வேள்வி செய்து சிவனை வழிபடுவதைத் தனது வழக்கமாகக் கொண்டிருந்தார்.
தொன்மம்/சிவனின் ஆடல்
நீலநக்க நாயனார், ஒரு திருவாதிரை நன்னாளில் சாத்தமங்கையில் உறையும் அயவந்தி நாதரைத் தரிசிக்க மனைவியுடன் சென்றார். சிவபெருமானை அர்ச்சனை செய்து வழிபட்டார். அப்பொழுது மேற்கூரையிலிருந்து வழுவிய சிலந்தி ஒன்று சிவலிங்கத்தின் மீது விழுந்தது. அது கண்ட நீலநக்கரின் மனைவி, லிங்கத் திருமேனிக்கு ஏதாவது ஊறு நேர்ந்து விடுமோ என்று எண்ணி, லிங்கத்தின் மீதிருந்த சிலந்தி விலகிப்போகும்படி, வேகமாக வாயினால் ஊதினார்.
அது கண்ட நீலநக்கர், சிவலிங்கத்தின் மீது வாயால் ஊதியதன் மூலம் மனைவி சிவ அபராதம் செய்துவிட்டதாகக் கருதினார். மனைவி மீது கடும் சினம் கொண்டார். “சிவபெருமானின் திருமேனி மீது விழுந்த சிலந்தியை வேறு வகையால் விலக்காமல், வாயினால் ஊதி விலக்கியதால் நீ சிவ அபராதம் செய்தவளாகிறாய். அதனால் உன்னை நான் இங்கேயே துறக்கிறேன்” என்று அறிவித்தார். கணவரின் சுடுசொல் கேட்ட மனைவி உடன் அங்கிருந்து விலகி நின்றார்.
நீலநக்கரும் முறைப்படிச் செய்ய வேண்டிய பூசைகள் எல்லாவற்றையும் முடித்துவிட்டு தன் இல்லம் திரும்பினார். அவரது மனைவி கணவரின் சொல்லுக்கு அஞ்சி ஆலயத்திலேயே தங்கி இருந்தார்.
நீலநக்கர், இரவு சிவபூசையை முடித்துவிட்டு, உணவுண்டபின் உறங்கச் சென்றார். அவர் கனவில் தோன்றிய சிவபெருமான், “இதோ உன் மனைவி ஊதிய இடம் தவிர மற்றைய எல்லா இடங்களிலும் சிலந்தியால் ஏற்பட்டிருக்கும் கொப்புளங்களைப் பார்” என்று கொப்புளங்களால் தாக்குண்ட தனது திருமேனியைக் காட்டினார்.
விழித்தெழுந்த நீலநக்கர், தனது தவறை நினைத்து வருந்தினார். சிவபெருமான் காட்சி கிடைத்த மகிழ்ச்சியில் விடியும் வரை உறங்காமல் இருந்தார். விடிந்ததும் சிவாலயம் சென்றவர், சிவபெருமானைப் பணிந்து வணங்கி, மனைவியை அழைத்துக் கொண்டு இல்லம் திரும்பினார். வழக்கம்போல் தனது சிவத் தொண்டுகளைத் தொடர்ந்தார்.
ஒருநாள் திருஞானசம்பந்தப் பெருமான் திருநீலகண்ட யாழ்ப்பாணர், பாணரின் மனைவி மதங்க சூளாமணி ஆகியோருடன் அவ்வூருக்கு வந்தார். நீலநக்கர் அவர்களை வரவேற்று தனது இல்லத்திற்கு எழுந்தருளச் செய்து அமுது படைத்தார். இரவு அவர்களைத் தன் இல்லத்தில் தங்க வைத்து உபசரித்தார். தான் வேள்வி செய்யும் அறையிலேயே திருநீலகண்ட யாழ்ப்பாணருக்கும், அவர் தம் மனைவிக்கும் படுக்கை அமைத்துக் கொடுத்தார். ஞானசம்பந்தர் மீது மிகுந்த பக்தி கொண்டவராகி அவர் செல்லும் இடங்களுக்கெல்லாம் தானும் சென்று வந்தார்.
நீலநக்க நாயனார், திருஞானசம்பந்தப் பெருமானின் திருமணத்தை நடத்தி வைக்கும் அந்தணராகப் பொறுப்பேற்றார். அதனைத் திறம்பட நிகழ்த்தினார். இறையருளால் அப்போது தோன்றிய சோதியுள் சம்பந்தருடன் தானும் புகுந்து ஐக்கியமானார். சிவபதம் பெற்றார்.
ஒலி புனல் சூழ் சாத்த மங்கை நீல நக்கற்கு அடியேன் - சுந்தரர் (திருத்தொண்டத் தொகை)
பாடல்கள்
பெரிய புராணத்தில் இப்புராணக் கதையை விளக்கும் பாடல்கள்:
திருநீலநக்க நாயனாரின் சிவத் தொண்டு
மெய்த்த ஆகம விதி வழி வேத காரணரை
நித்தல் பூசனை புரிந்து எழு நியமமும் செய்தே
அத்தர் அன்பருக்கு அமுது செய்விப்பது முதலா
எத் திறத்தன பணிகளும் ஏற்று எதிர் செய்வார்
திருநீலநக்க நாயனார் சிவபூஜை செய்தபோது சிலந்தி சிவனது திருமேனி மீது விழுதல்
தொலைவில் செய் தவத் தொண்டனார் சுருதியே முதலாம்
கலையின் உண்மை ஆம் எழுத்து அஞ்சும் கணிக்கின்ற காலை
நிலையின் நின்று முன் வழுவிட நீண்ட பொன் மேருச்
சிலையினார் திருமேனி மேல் விழுந்தது ஓர் சிலம்பி
நாயனார் மனைவி வாயினால் சிலந்தியை ஊதுதல்
விழுந்த போதில் அங்கு அயல் நின்ற மனைவியார் விரைவு உற்று
எழுந்த அச்சமோடு இளங்குழவியில் விழும் சிலம்பி
ஒழிந்து நீங்கிட ஊதி முன் துமிப்பவர் போலப்
பொழிந்த அன்பினால் ஊதி மேல் துமிந்தனர் போக
நீல நக்கர் மனைவியைத் துறந்தது
மின் நெடுஞ் சடை விமலர் மேல் விழுந்த நூல் சிலம்பி
தன்னை, வேறு ஒரு பரிசினால் தவிர்ப்பது தவிர
முன் அனைந்து வந்து ஊதி, வாய் நீர்ப் பட முயன்றாய்
உன்னை யான் இனித் துறந்தனன் ஈங்கு என உரைத்தார்
சிவபெருமானின் காட்சி
பள்ளி கொள் பொழுது, அயவந்திப் பரமர் தாம் கனவில்
வெள்ள நீர்ச் சடையொடு நின்று மேனியைக் காட்டி,
'உள்ளம் வைத்து எமை ஊதி, முன் துமிந்த பால் ஒழியக்
கொள்ளும் இப் புறம் சிலம்பியின் கொப்புள்' என்று அருள
நீல நக்கர், திருஞானசம்பந்தரின் திருமணத்தில் கலந்துகொண்டு சிவபதம் அடைந்தது
பெருகு காதலில் பின் நெடு நாள் முறை பிறங்க
வருபெரும் தவ மறையவர் வாழி சீர்காழி
ஒருவர் தம் திருக் கல்லியா ணத்தினில் உடனே
திருமணத் திறம் சேவித்து நம்பர் தாள் சேர்ந்தார்.
குரு பூஜை
திருநீலநக்க நாயனாரின் குரு பூஜை, சிவாலயங்களில், ஒவ்வோராண்டும், வைகாசி மாதம், மூல நட்சத்திரத்தில் நடைபெறுகிறது.
உசாத்துணை
- சேக்கிழார் பெருமான் அருளிய திருத்தொண்டர் புராணம்: தமிழ் இணையக் கல்விக் கழகம்
- திருநீலநக்க நாயனார் : தினமலர் இதழ் கட்டுரை
- சேக்கிழாரின் பெரிய புராணம்: பா.சு. ரமணன், தாமரை பிரதர்ஸ் மீடியா வெளியீடு
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
18-Jun-2023, 07:08:29 IST