கணம்புல்ல நாயனார்
கணம்புல்ல நாயனார், சைவ சமய அடியார்களாகிய 63 நாயன்மார்களில் ஒருவர்.
வாழ்க்கைக் குறிப்பு
வடவெள்ளாற்றின் தென்கரையில் அமைந்துள்ள இருக்குவேளூர் என்ற ஊரில் வாழ்ந்தவர் கணம்புல்ல நாயனார். சிவபக்தரும் செல்வந்தருமான இவர், அந்தச் செல்வத்தின் பயன், ஆலயங்களில் திருவிளக்கெரித்தலே என்பதை உணர்ந்து, சிவபெருமானின் திருக்கோயில்களுக்கு நெய் விளக்கு ஏற்றும் பணியைச் செய்து வந்தார்.
தொன்மம்/சிவனின் ஆடல்
நற்பணி செய்து வந்த கணம்புல்ல நாயனாருக்கு இறைவனின் ஆடலால் நாளடைவில் செல்வம் குறைந்தது. வறுமை சூழ்ந்தது. அப்பொழுதும் கூட இவர் தவறாது சிவாலயங்களில் திருவிளக்கு ஏற்றும் பணியைத் தொடர்ந்து செய்தார். தொடர் வறுமையால் ஊரைவிட்டு நீங்கி சிதம்பரம் சென்றார். தனது வீட்டில் இருக்கும் பொருட்களை விற்று திருபுலீச்சுவரம் என்னும் தலத்தில் விளக்கேற்றி வந்தார். நாளடைவில் விற்பதற்கு எந்தப் பொருளும் இல்லாத நிலையில், கணம் புல்லுகளை அரிந்து கொண்டுவந்து, அதனை விற்று, அதில் கிடைக்கும் பணத்தைக்கொண்டு நெய் வாங்கித் தீபமேற்றினார். இதனால் ‘கணம்புல்லர்’ என்று பெயர் பெற்றார்.
ஒருநாள் அந்தப் புல்லையும் விற்க இயலாததால் புல்லையே தீபமாக்கி எரித்தார். ஆனால் அவ்விளக்கை முதல் ஜாமம் வரை எரிக்க இயலாததால், கணம்புல்ல நாயனார், தனது திருமுடியையே விளக்காகத் தீ மூட்டி எரித்தார் என்றும் சிவபெருமான் அவருக்கு சிவலோக வாழ்க்கையை அளித்தார் என்றும் பெரிய புராணம் கூறுகிறது.
கறைக் கண்டன் கழல் அடியே காப்புக் கொண்டிருந்த கணம் புல்ல நம்பிக்கும், காரிக்கும் அடியேன் - சுந்தரர் (திருத்தொண்டத் தொகை)
பாடல்கள்
பெரிய புராணத்தில் இப்புராணக் கதையை விளக்கும் பாடல்கள்:
கணம்புல்ல நாயனார் திருவிளக்கு எரித்தலும், வறுமையால் சிதம்பரம் செல்வதும்
'தாவாத பெரும் செல்வம் தலை நின்ற பயன் இது' என்று
ஓவாத ஒளிவிளக்குச் சிவன் கோயில் உள் எரித்து
நா ஆரப் பரவுவார் நல்குரவு வந்து எய்தத்
தேவாதி தேவர்பிரான் திருத்தில்லை சென்று அடைந்தார்
கணம்புல்ல நாயனார் திருமுடியில் திருவிளக்கேற்றி சிவலோகப் பதவி அடைதல்
தங்கள் பிரான் திரு உள்ளம் செய்து தலைத் திருவிளக்குப்
பொங்கிய அன்புடன் எரித்த பொருவில் திருத்தொண்டருக்கு
மங்கலம் ஆம் பெரும் கருணை வைத்து அருளச் சிவலோகத்து
எங்கள் பிரான் கணம் புல்லர் இனிது இறைஞ்சி அமர்ந்துஇருந்தார்
குரு பூஜை
கணம்புல்ல நாயனாரின் குருபூஜை, சிவாலயங்களில், ஒவ்வோராண்டும், கார்த்திகை மாதம், கார்த்திகை நட்சத்திரத்தில் நடைபெறுகிறது.
உசாத்துணை
- சேக்கிழார் பெருமான் அருளிய திருத்தொண்டர் புராணம்: தமிழ் இணையக் கல்விக் கழகம்
- கணம்புல்ல நாயனார் : தினமலர் இதழ் கட்டுரை
- சேக்கிழாரின் பெரிய புராணம்: பா.சு. ரமணன். தாமரை பிரதர்ஸ் மீடியா வெளியீடு
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
01-May-2023, 18:47:25 IST