under review

பூசலார்

From Tamil Wiki
பூசலார் திருவுருவம், இருதயாலீஸ்வரர் கோவில் வல்லமை.காம்

பூசலார் சிவனின் அடியார்களான 63 நாயன்மார்களில் ஒருவர். தன் மனதில் கோவில் கட்டி சிவனை வழிபட்டவர்.

வாழ்க்கைக் குறிப்பு

பூசலார் பொ.யு. எட்டாம் நூற்றாண்டில் தொண்டை நாட்டின் திருநின்றவூரில் அந்தணர் குலத்தில் பிறந்தார். சிவனிடம் மிகுந்த பக்தி கொண்டிருந்தார். சிவனடியார்களுக்குத் தொண்டு செய்து வந்தார். தான் வணங்கும் லிங்க மூர்த்திக்கு ஓர் கோவில் எழுப்ப வேண்டும் என்று ஆவல் கொண்டிருந்தார். அதற்கான செல்வம் அவரிடம் இருக்கவில்லை.

தொன்மம்/சிவனின் ஆடல்

பூசலார் கோவில் கட்டுவதற்காக பொருள் தேடும் முயற்சிகள் வெற்றி பெறாததால் தன் மனதில் கோவிலைக் கட்ட எண்ணினார். தியானத்தில் அமர்ந்து மனதிலேயே கோவில் கட்டுவதற்கான பொருள்களையும், தச்சர்களையும், சிற்பி, ஸ்தபதிகளையும் தேர்ந்தெடுத்து, ஆகம விதிகளின்படி நல்ல நாளும் நேரமும் குறித்து அடிக்கல் நாட்டி, கருவறை, கொடி மரம், மண்டபம் ,மதில்கள், திருக்குளம், திருக்கிணறு, யாகசாலை ராஜகோபுரம் அனைத்தையும் பல நாட்கள் எடுத்து தன் நினைப்பினாலே கோவிலைக் கட்டி முடித்தார். சிவனை எழுந்தருளச்செய்து குடமுழுக்கு செய்ய நாள் குறித்தார்.

அதே சமயம் காடவர்கோன் என்னும் மன்னன் காஞ்சியில் பெரிய சிவாலயம் எழுப்பிக்கொண்டிருந்தான். தெய்வச்சிலையை எழுந்தருளச்செய்து குடமுழுக்குக்கு நாள் குறித்தான். குறித்த நாளின் முன் தினம் இரவில் சிவன் மன்னன் கனவில் தோன்றி, "எம் பகதன் பூசலார் எழுப்பிய கோவில் கட்டி முடிப்பப்பட்டுவிட்டது. நான் நாளை அங்கு எழுந்தருள வேண்டும். உனது கோவில் தாபிதத்தை(பிரதிஷ்டை) பிறிதொரு நாளுக்கு மாற்றி வைப்பாய்" எனக் கூறினார். மன்னன் பூசலார் கட்டிய கோயிலைத் தேடிச் சென்றான். கோவிலைக் காணாததால் பூசலாரைத் தேடிச் சென்று தான் கண்ட கனவைக்கூறி, அவரது கோவிலைக் காட்டுமாறு வேண்டினான். பூசலார் தன்னையும் பொருட்டாக எண்ணி சிவன் தன் கோவிலில் எழுந்தருளப்போவதை எண்ணி மகிழ்ந்து தான் மனதில் கோவிலைக் கட்டி முடித்ததைக் கூறினார். மன்னன் தான் பெருஞ்செல்வம் கொண்டு கட்டிய கோவிலை விட பூசலாரின் பக்தி உயர்ந்தது எனறு உணர்ந்து அவரை வணங்கினான். பூசலார் தன் வாழ்வின் இறுதியில் சிவபதவி அடைந்தார்.

பூசலார் தன் மனத்தில் கட்டிய கோவிலின் நினைவாக திருநின்றவூரில் இருதயாலீஸ்வரர் கோவில் பின்னாட்களில் கட்டப்பட்டது. கருவறையில் பூசலாரின் செப்புச்சிலை நிறுவப்பட்டுள்ளது.

பாடல்கள்

பெரிய புராணத்தில் பூசலார் நாயனார் குறித்த பாடல்கள் 18 இடம்பெறுகின்றன.

பூசலார் பொருள் இன்மையால் மனத்தில் கோவில் கட்ட முடிவு செய்தல்

மனத்தினால் கருதி எங்கும் மாநிதி வருந்தித் தேடி
'எனைத்தும் ஓர் பொருள் பேறு இன்றி என் செய்கேன்' என்று நைவார்
நினைப்பினால் எடுக்க நேர்ந்து நிகழ் உறு நிதியம் எல்லாம்
தினைத்துணை முதலாத் தேடிச் சிந்தையால் திரட்டிக் கொண்டார்.

பூசலார் மனதில் சிவாலயம் எழுப்புதல்

அடிமுதல் உபானம் ஆதி ஆகிய படைகள் எல்லாம்
வடிவு உறும் தொழில்கள் முற்ற மனத்தினால் வகுத்து, மான
முடிவு உறு சிகரம் தானும் முன்னிய முழத்தில் கொண்டு,
நெடிது நாள் கூடக் கோயில் நிரம்பிட நினைவால் செய்தார்.

சிவன் மன்னனின் கனவில் வந்து பூசலார் கட்டிய கோயில் பற்றிச் சொல்லல்

நின்ற ஊர்ப் பூசல் அன்பன் நெடு நாள் நினைந்து செய்த
நன்று நீடு ஆலயத்துள் நாளை நாம் புகுவோம் நீ இங்கு
ஒன்றிய செயலை நாளை ஒழிந்து பின் கொள்வாய்' என்று,
கொன்றை வார் சடையார் தொண்டர் கோயில் கொண்டு அருளப் போந்தார்.

குருபூஜை

பூசலார் நாயனாரின் குருபூஜை சிவாலயங்களில் ஐப்பசி மாதம் அனுஷத்தன்று நடைபெறுகிறது.

உசாத்துணை


✅Finalised Page