சிறப்புலி நாயனார்
சிறப்புலி நாயனார், சைவ சமய அடியார்களாகிய 63 நாயன்மார்களில் ஒருவர்.
வாழ்க்கைக் குறிப்பு
சிறப்புலி நாயனார், சோழநாட்டில் உள்ள திரு ஆக்கூரில் அந்தணர் குலத்தில் தோன்றினார் . ஈகைத் திறம் மிகுந்திருந்த இவர், சிவனடியார்களுக்கு வேண்டியனவற்றை அளித்து அவர்களை ஆதரித்தார். சிவனடியார்களைக் கண்டால் எதிர் சென்று வணங்கி, இனிய மொழிகள் கூறி, அவர்கள் மகிழுமாறு உணவளித்தார். அவர்கள் வேண்டுவன எல்லாம் இல்லை என்று எண்ணாமல் வழங்கிப் புகழ்பெற்றார்.
சிவத்தொண்டு
சிறப்புலி நாயனார், சிவபெருமான் திருவடிகளிடம் அன்பு கொண்டு திருவைந்தெழுத்தினை நாள்தோறும் ஓதிவந்தார். சிவபெருமானைக் குறித்துப் பல வேள்விகளைச் செய்தார். இவ்வாறு பல புண்ணிய கர்மங்களைச் செய்ததால் சிறப்புலி நாயனாராகப் போற்றப்பட்டார். சிவபெருமானின் திருவடி நிழலில் நிலை பெற்றார் என்று பெரிய புராணம் கூறுகிறது.
சீர் கொண்ட புகழ் வள்ளல் சிறப்புலிக்கும் அடியேன் - சுந்தரர் (திருத்தொண்டத் தொகை)
பாடல்கள்
பெரிய புராணத்தில் இப்புராணக் கதையை விளக்கும் பாடல்கள்:
சிறப்புலி நாயனார், மழை போல் வாரி வழங்கிச் சிவனடியார்களைப் போற்றியது
ஆளும் அங்கணருக்கு அன்பர் அணைந்த போது அடியில் தாழ்ந்து
மூளும் ஆதரவு பொங்க முன்பு நின்று இனிய கூறி
நாளும் நல் அமுதம் ஊட்டி நயந்தன எல்லாம் நல்கி
நீளும் இன்பத்து உள் தங்கி நிதிமழை மாரி போன்றார்
சிறப்புலி நாயனார், சிவத்தொண்டு புரிந்து சிவபதம் பெற்றது
அஞ்சு எழுத்து ஓதி அங்கி வேட்டு நல் வேள்வி எல்லாம்
நஞ்சு அணி கண்டர் பாதம் நண்ணிடச் செய்து ஞாலத்து
எஞ்சல் இல் அடியார்க்கு என்றும் இடை அறா அன்பால் வள்ளல்
தம் செயல் வாய்ப்ப ஈசர் தாள் நிழல் தங்கினாரே.
குருபூஜை
சிறப்புலி நாயனாரின் குருபூஜை, சிவாலயங்களில், ஒவ்வோராண்டும், கார்த்திகை மாதம், பூராட நட்சத்திரத்தில் நடைபெறுகிறது.
உசாத்துணை
- சேக்கிழார் பெருமான் அருளிய திருத்தொண்டர் புராணம்: தமிழ் இணையக் கல்விக் கழகம்
- சிறப்புலி நாயனார் : தினமலர் இதழ் கட்டுரை
- சேக்கிழாரின் பெரிய புராணம்: பா.சு. ரமணன். தாமரை பிரதர்ஸ் மீடியா வெளியீடு
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
04-May-2023, 06:55:06 IST