ஏனாதிநாத நாயனார்
ஏனாதிநாத நாயனார் சைவ சமய அடியார்களாகிய 63 நாயன்மார்களில் ஒருவர்.
வாழ்க்கைக் குறிப்பு
ஏனாதிநாதர், நாச்சியார்கோயில் அருகில் உள்ள எயினனூரில், சான்றார் குலம் என்று போற்றப்படும் ஈழக்குலத்தில் தோன்றினார். சிறந்த சிவபக்தராகத் திகழ்ந்தார். திருநீறு அணிந்த சிவனடியார்களைச் சிவனாகவே கருதி வணங்கி வாழ்ந்தார். அரச குலத்தார்க்கு வாள் வித்தையைப் பயிற்றுவித்து, அதன் மூலம் ஈட்டிய பொருளை சிவனடியார்களுக்கே அளித்து சிவத்தொண்டு புரிந்தார்.
தொன்மம்/சிவனின் ஆடல்
அதிசூரன் என்னும் வாள்வித்தைப் பயிற்சியாளன் அதே எயினனூரில் வாழ்ந்து வந்தான். ஏனாதிநாதரின் புகழ் மீது அவன் பொறாமை கொண்டான். தன்னுடன் போரில் ஈடுபட்டு வெற்றி பெறுபவருக்குத் தான் அனைவருக்கும் வாள் வித்தை கற்பிக்கும் உரிமை என்று கூறி அவன் ஏனாதியாரைப் போருக்கு அழைத்தான். கடும் போரில் அவன் தோற்றான். ஏனாதிநாதரை வஞ்சனையால் வெல்ல எண்ணி மீண்டும் போருக்கழைத்தான்.
ஏனாதிநாதரும் போருக்கு வந்தார். அதிசூரன், கேடயத்தால் திருநீறு பூசிய தன் நெற்றியை மறைத்துக் கொண்டு வந்து, போரிடும் போது கேடயத்தை விலக்கி, நீறணிந்த தன் நெற்றியை ஏனாதிநாதரிடம் காட்டினான். நெற்றியில் திருநீற்றினைக் கண்டதும் ஏனாதிநாத நாயனார், சிவனடியாரை எதிர்ப்பதோ, போரிடுவதோ முறையாகாது என்று கருதி, தன் வாளையும், கேடயத்தையும் உயர்த்திப் பிடித்து போரிடாமல் அமைதியாக நின்றார். அதிசூரன் தன் வாளால் ஏனாதிநாதரை வெட்டிக் கொன்றான்.
உடன் அவருக்கு அருள் செய்ய அங்கே தோன்றிய சிவபெருமான், ஏனாதிநாத நாயனாருக்கு என்றும் தம்மோடு பிரியாதிருக்கும் வரத்தைத் தந்தார். ஏனாதிநாத நாயனார், சிவலோகம் அடைந்து என்றும் சிவனைப் பிரியாது வாழும் பேறு பெற்றார்.
“ஏனாதி நாதன் தன் அடியார்க்கும் அடியேன்” - சுந்தரர் (திருத்தொண்டத் தொகை)
பாடல்கள்
“ஏனாதி நாதன் தன் அடியார்க்கும் அடியேன்” என்று சுந்தரர் திருத்தொண்டத் தொகை கூறுகிறது. பெரிய புராணத்தில் இப்புராணக் கதையை விளக்கும் பாடல்கள்:
ஏனாதி நாத நாயனாருக்கும் அதிசூரனுக்கும் இடையே நிகழ்ந்த போர்க் காட்சி:
குருதியின் நதிகள் பரந்தன குறை உடல் ஓடி அலைந்தன
பொரு படை அறு துணி சிந்தின புடை சொரி குடல் உடல் பம்பின
வெருவர எருவை நெருங்கின வீசி அறு துடிகள் புரண்டன
இரு படை தனினும் எதிர்ந்தவர் எதிர் எதிர் அமர் செய் பறந்தலை
அதிசூரனின் வஞ்சனையான போர்த் திட்டம்:
தீங்கு குறித்து அழைத்த தீயோன் திருநீறு
தாங்கிய நெற்றியினார் தங்களையே எவ்விடத்தும்
ஆங்கு அவரும் தீங்கு இழையார் என்பது அறிந்தானாய்ப்
பாங்கில் திருநீறு பண்டு பயிலாதான்
வெண் நீறு நெற்றி விரவப் புறம் பூசி,
உள் நெஞ்சில் வஞ்சக் கறுப்பும் உடன் கொண்டு,
வண்ணச் சுடர் வாள் மணிப் பலகை கைக் கொண்டு,
புண்ணியப் போர் வீரர்க்குச் சொன்ன இடம் புகுந்தான்.
ஏனாதிநாத நாயனாருக்கு சிவனின் அருளிச் செயல்:
மற்று இனி நாம் போற்றுவது என்? வானோர் பிரான் அருளைப்
பற்று அலர் தம் கை வாளால் பாசம் அறுத்து அருளி,
உற்றவரை என்றும் உடன் பிரியா அன்பு அருளிப்
பொன் தொடியாள் பாகனார் பொன் அம்பலம் அணைந்தார்.
குரு பூஜை
ஏனாதிநாத நாயனாரின் குருபூஜை, சிவாலயங்களில், ஒவ்வோராண்டும், புரட்டாசி மாத உத்திராட நட்சத்திரத்தில் நடைபெறுகிறது.
உசாத்துணை
- சேக்கிழார் பெருமான் அருளிய திருத்தொண்டர் புராணம்: தமிழ் இணையக் கல்விக் கழகம்
- ஏனாதி நாத நாயனார்: தினமலர் இதழ் கட்டுரை
- சேக்கிழாரின் பெரிய புராணம்: பா.சு. ரமணன். தாமரை பிரதர்ஸ் மீடியா வெளியீடு
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
04-May-2023, 06:27:10 IST