under review

சண்டேசுர நாயனார்

From Tamil Wiki
சண்டேசுர நாயனார் (ஓவியம்: அமரர் எஸ். மாலையப்பன்)

சண்டேசுர நாயனார் சைவ சமய அடியார்களாகிய 63 நாயன்மார்களில் ஒருவர்.

வாழ்க்கைக் குறிப்பு

சோழநாட்டின் சிறப்புப் பொருந்திய ஊர்களுள் ஒன்று சேய்ஞலூர். அவ்வூரில் வாழ்ந்த, அந்தணர் குலத்தைச் சார்ந்த எச்சதத்தன்-பவித்திரை தம்பதிக்குப் பிறந்தவர் விசாரசர்மன். வேதக் கல்வியில் தேர்ச்சி பெற்ற அவர், சிறந்த அறிவுடையோராகத் திகழ்ந்தார். ஒரு நாள், பசுக் கூட்டங்களை ஓட்டிக் கொண்டு வந்த ஒருவன், அப்போது தான் கன்றை ஈன்றிருந்த பசு ஒன்றை அடிப்பதை விசாரசர்மன் கண்டார். மிகவும் மனம் வருந்தினார். பசுவின் மேன்மையை அவனிடம் எடுத்துரைத்து, தானே அப்பசுக்கூட்டங்களை மேய்ப்பதற்கு, அவற்றின் உரிமையாளர்களான மறையவர்களின் ஒப்புதலைப் பெற்றார்.

தொன்மம்/சிவனின் ஆடல்

விசாரசர்மன் பசுக்கூட்டங்களை அன்புடன் பராமரித்தார். மகிழ்ச்சியாக வாழ்ந்த பசுக்கள், யாரும் கறக்காமலேயே பாலைப் பொழிந்தன. அதுகண்ட விசாரசர்மன், இந்தப் பாலைக் கொண்டு சிவனுக்கு அபிஷேகம், பூசைகள் செய்யலாமே என்று எண்ணினார். அவர் மேய்க்கச் செல்லும் மண்ணியாற்றின் மணற் திட்டில், ஆத்தி மரத்தின் அடியில், மணலால் சிவலிங்கம் ஒன்றை அமைத்தார். அதைச் சுற்றி மண்ணால் மதில் அமைத்து சிறு கோயில் ஒன்றைக் கட்டினார். கோபுரமும் அமைத்தார். அழகானதொரு நந்தவனத்தையும் உருவாக்கினார். பின்பு அனுதினமும் நறுமணமுள்ள மலர்களைப் பறித்துவந்து அர்ச்சித்து பூசைகள் செய்தார்.

புதிய குடங்களில், யாரும் கறக்காமலேயே பெருகி வரும் பசுக்களின் பாலைச் சேமித்து அபிஷேகம் செய்தார். இது ஊர் மக்கள் யாரும் அறியாமல் தினந்தோறும் நிகழ்ந்து வந்தது. சிவனின் திருவிளையாடலால், மறையவர்களின் வீடுகளில் அப்பசுக்கள் தரும் பாலின் அளவு ஒருநாளும் குறைவின்றி எப்பொழுதும் போல் நிறைந்தே இருந்தது.

இந்நிலையில் இதுபற்றி ஏதும் அறியாத அயலான் ஒருவன், விசாரசர்மன் பாலை மணல் லிங்கத்திற்கு ஊற்றி அபிஷேகம் செய்வதைப் பார்த்தான். பசுக்களின் உரிமையாளர்களான மறையவர்களிடம் சென்று, “விசாரசர்மன் பாலை வீணாக்கித் தரையில் கொட்டுகிறான்” என்று புகார் செய்தான். அவர்கள் விசாரசன்மனின் தந்தை எச்சதத்தனிடம் அது குறித்துப் புகார் செய்தனர்.

எச்சதத்தன், உண்மை என்ன என்பதை தானே நேரில் சென்று கண்டறிய எண்ணினார். மறுநாள் பொழுது புலர்ந்ததும் விசாரசர்மன் அறியாமல் பின் தொடர்ந்த எச்சதத்தன், மேய்ச்சல் நிலத்தில் உள்ள மரத்தின் மீதேறி ஒளிந்து கொண்டார்.

மாடுகளை மேய விட்ட விசாரசன்மன், ஆற்றில் இறங்கி நீராடிவிட்டு, வழக்கம் போல் தான் மணலால் அமைத்திருந்த சிவலிங்கத்திற்கு தனது பூஜைகளைத் தொடங்கினார். மலர்களைக் கொண்டு பூஜித்தவர், பின் பசுக்கள் தாமாகவே பொழிந்த பால் குடங்களைக் கொண்டு அபிஷேகம் செய்தார்.

மகனின் செய்கையைக் கண்ட தந்தை எச்சதத்தன் சினமுற்றார். பாலை மகன் மண்ணில் கொட்டி வீணாக்குவதாக நினைத்த அவர், மரத்திலிருந்து வேகமாக இறங்கி வந்து தன் கைக் கோலினால் மகன் விசாரசன்மனின் முதுகில் ஓங்கி அடித்தார். பலவாறான கொடுமொழிகளைச் சொல்லி ஏசினார்.

தன்னை மறந்து சிவபூஜை செய்துகொண்டிருந்த விசாரசர்மன் காதில் தந்தையின் கண்டனக் குரல் விழவில்லை. இதனால் கடும் கோபம் கொண்ட எச்சதத்தன், சிவபெருமான் திருமஞ்சனத்திற்காக வைத்திருந்த பால் குடங்களைத் தனது கால்களால் எட்டி உதைத்துத் தள்ளினார். அதுவரை தன்னை மறந்து பூசையில் ஆழ்ந்திருந்த விசாரசர்மன், அபிஷேகத்துக்கான பால் குடங்கள் கவிழ்க்கப்படுவதைக் கண்டார். அதைச் செய்தது தன் தந்தையே என்பதை அறிந்தார். தந்தையே ஆனாலும், செய்தது சிவ அபராதமாகையால் அதற்குரிய தண்டனையைத் தர வேண்டும் என்ற எண்ணத்தில், அருகில் கிடந்த சிறு கம்பை எடுத்து பால் குடங்களை உதைத்துத் தள்ளிய தந்தையின் கால்களை நோக்கி வீசினார். அந்தக் கம்பு மழுவாக மாறியது. எச்சதத்தன் கால்களைத் துண்டித்தது. அவர் அங்கேயே இறந்துவிழுந்தார்.

தனது பூசைக்கு ஏற்பட்ட இடையூற்றினைப் போக்கியபின் மீண்டும் விசாரசர்மன் மனமொன்றிப் பூசை செய்தார். அப்பொழுது வானில் பேரொளியாகத் தோன்றினார் சிவபெருமான். பார்வதி தேவியுடன் இடப வாகனத்தில் காட்சி கொடுத்தார்.

விசாரசர்மன் இறைவனைப் பணிந்து வணங்கினார். சிவபெருமான், விசாரசர்மனிடம், “அன்பனே, என்மீது கொண்ட அளவற்ற அன்பின் காரணமாக உன்னைப் பெற்ற தந்தை என்றும் பாராமல் அவர் இறந்து போகும்படி நீ மழுவை வீசினாய்; இனி, நாமே உனக்குத் தந்தையாயினோம்” என்றார். பின் விசாரசர்மனை அணைத்து, உச்சிமோந்து ஆசிர்வதித்தார். விசாரசர்மனை தொண்டர்களுக்கெல்லாம் அதிபராக ஆக்கி, “நாம் உண்ட கலமும், உடுக்கும் உடைகளும், சூடும் மாலை, அணிகலன் முதலியன யாவும் உனக்கே உரிமையாகும்படி சண்டீசப் பதவியை தந்தோம்” என்று சொல்லி வாழ்த்தினார். பின்னர் தான் தலையில் சூடிய கொன்றை மலர் மாலையை தன் கையால், தானே எடுத்து விசாரசர்மனுக்குச் சூட்டினார். விசாரசர்மன் அதுமுதல் சண்டீசப் பதம் பெற்று சண்டீசர் ஆனார். சண்டேசுர நாயனாராக உயர்ந்தார். எச்சதத்தன், தம் சுற்றத்தாருடன் சிவலோகத்தில் வசிக்கும் பேறு பெற்றார்.

மெய்ம்மையே திருமேனி வழிபடா நிற்க
வெகுண்டு எழுந்த தாதைதாள் மழுவினால் எறிந்த

அம்மையான் அடி சண்டிப் பெருமானுக்கு அடியேன் - சுந்தரர் (திருத்தொண்டத் தொகை)

பாடல்கள்

பெரிய புராணத்தில் இப்புராணக் கதையை விளக்கும் பாடல்கள்:

விசாரசர்மன் பசுக்கூட்டங்களை மேய்க்கும் உரிமை பெற்றது

யானே இனி இந்நிரை மேய்ப்பன் என்றார் அஞ்சி இடை மகனும்
தான் நேர் இறைஞ்சி விட்டு அகன்றான் தாமும் மறையோர் இசைவினால்
ஆனே நெருங்கும் பேர் ஆயம் அளிப்பார் ஆகிப் பைங் கூழ்க்கு
வானே என்ன நிரை காக்க வந்தார் தெய்வ மறைச் சிறுவர்

பசுக்கள், மகிழ்ச்சியால் யாரும் கறக்காமலேயே பால் பொழிந்தமை

அனைத்துத் திறத்தும் ஆன் இனங்கள் அணைந்த மகிழ்ச்சி அளவு இன்றி
மனைக் கண் கன்று பிரிந்தாலும் மருவும் சிறிய மறைக் கன்று
தனைக் கண்டு அருகில் சார்ந்து உருகித் தாய் ஆம் தன்மை நிலைமையவாய்க்
கனைத்துச் சுரந்து முலைக் கண்கள் கறவாமே பால் பொழிந்தன ஆல்

விசாரசர்மன், மணலால் சிவாலயம் கட்டியது, மணல் லிங்கத்திற்கு பால் கொண்டு அபிஷேகித்தது

அங்கண் முன்னை அர்ச்சனையின் அளவின் தொடர்ச்சி விளையாட்டாப்
பொங்கும் அன்பால் மண்ணி மணல் புளினக் குறையில் ஆத்தியின் கீழ்ச்
செங்கண் விடையார் திருமேனி மணலால் ஆக்கிச் சிவ ஆலயமும்
துங்கம் நீடு கோபுரமும் சுற்று ஆலயமும் வகுத்து அமைத்தார்
கொண்டு மடுத்த குடம் நிறையக் கொணர்ந்து விரும்பும் கொள்கையினால்
அண்டர் பெருமான் வெண்மணல் ஆலயத்துள் அவை முன் தாபித்து
வண்டு மருவும் திருப் பள்ளித் தாமம் கொண்டு வரன் முறையே
பண்டைப் பரிவால் அருச்சித்துப் பாலின் திரு மஞ்சனம் ஆட்டி

எச்சதத்தன் மகனின் சிவ பூஜைக்கு இடையூறு செய்தது

கண்ட போதே விரைந்து இழிந்து கடிது சென்று கைத் தண்டு
கொண்டு மகனார் திரு முதுகில் புடைத்துக் கொடிதாம் மொழி கூறத்
தொண்டு புரியும் சிறிய பெருந்தோன்றலார் தம் பெருமான் மேல்
மண்டு காதல் அருச்சனையின் வைத்தார் மற்று ஒன்று அறிந்திலர் ஆல்
மேல் ஆம் பெரியோர் பலகாலும் வெகுண்டோன் அடிக்க வேறு உணரார்
பாலார் திருமஞ்சனம் ஆட்டும் பணியில் சலியாதது கண்டு
மாலா மறையோன் மிகச் செயிர்த்து வைத்த திருமஞ்சனக் குடப்பால்
காலால் இடறிச் சிந்தினான் கையால் கடைமைத் தலை நின்றான்

விசாரசர்மன் தந்தைக்கு அளித்த தண்டனையும், சிவனின் திருக்காட்சியும்

எறிந்த அதுவே அர்ச்சனையில் இடையூறு அகற்றும் படையாக
மறிந்த தாதை இருதாளும் துணித்த மைந்தர் பூசனையில்
அறிந்த இடையூறு அகற்றினர் ஆய் முன் போல் அருச்சித்து இடப்புகலும்
செறிந்த சடை நீள் முடியாரும் தேவியோடும் விடை ஏறி

சிவபெருமானின் அருளிச் செயல்

தொடுத்த இதழி சூழ் சடையார் துணைத் தாள் நிழல் கீழ் விழுந்தவரை
எடுத்து நோக்கி நம் பொருட்டால் ஈன்ற தாதை விழ எறிந்தாய்
அடுத்த தாதை இனி உனக்கு நாம் என்று அருள் செய்து அணைத்து அருளி
மடுத்த கருணையால் தடவி உச்சி மோந்து மகிழ்ந்து அருள
அண்டர் பிரானும் தொண்டர் தமக்கு அதிபன் ஆக்கி அனைத்தும் நாம்
உண்ட கலமும் உடுப்பனவும் சூடுவனவும் உனக்காகச்
சண்டீசனும் ஆம் பதம் தந்தோம் என்று அங்கு அவர் பொன் தட முடிக்குத்
துண்ட மதிசேர் சடைக் கொன்றை மாலை வாங்கிச் சூட்டினார்.

குருபூஜை

சண்டேசுர நாயனாரின் குருபூஜை, சிவாலயங்களில், ஒவ்வோராண்டும், தை மாதம், உத்தர நட்சத்திரத்தில் நடைபெறுகிறது.

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 04-May-2023, 06:38:23 IST