under review

திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார்

From Tamil Wiki
திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார் (ஓவியம்: அமரர் எஸ். மாலையப்பன்)

திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார், சைவ சமய அடியார்களாகிய 63 நாயன்மார்களில் ஒருவர்.

வாழ்க்கைக் குறிப்பு

திருநீலகண்ட யாழ்ப்பாணர், சோழநாட்டின் திருவெருக்கத்தம்புலியூரில், புகழ்பெற்ற பாணர் குலத்தில் பிறந்தார். சிறந்த சிவ பக்தராகத் திகழ்ந்தார். அவரது மனைவி மதங்கசூளாமணியார். அவரும் இசையில் வல்லவராக இருந்தார். இருவரும் இணைந்து சோழநாட்டில் உள்ள சிவத்தலங்களுக்கெல்லாம் சென்று இறைவனைத் தரிசித்தனர். ஈசனின் புகழை யாழில் மீட்டி மகிழ்ந்தனர்.

தொன்மம்/சிவனின் ஆடல்

திருநீலகண்ட யாழ்ப்பாணரும், மதங்கசூளாமணியாரும், மதுரை சொக்கநாதரைத் தரிசிக்கும் பொருட்டு பாண்டிய நாட்டின் தலைநகராகிய மதுரைக்குச் சென்றனர். அக்காலத்தில் நிலவிய சாதிச் சூழலால், ஆலயத்தின் உள்ளே செல்ல இயலாது வெளியே நின்று யாழிசையால் சிவபெருமானின் புகழைப் பாடினர். ஆலவயாரான சொக்கநாதப் பெருமான், அன்றிரவு தன் அடியவர்களின் கனவில் தோன்றி, திருநீலகண்ட யாழ்ப்பாணரைத் தமது திருமுன் கொண்டுவரும்படிப் பணித்தார்.

அவ்வாறே மறுநாள் காலை அடியவர்கள், நீலகண்ட யாழ்ப்பாணரை சொக்கநாதப் பெருமான் ஆலயத்திற்கு அவர் சன்னதிக்கு முன் அழைத்து வந்தனர். ‘இதெல்லாம் இறைவனின் திருவருளே’ என்று எண்ணி மகிழ்ந்த நீலகண்ட யாழ்ப்பாணர், சிவபெருமானின் புகழைத் தனது யாழில் மீட்டிப் பாடினார். அவர் இருந்த அந்த இடம் ஈரமாக இருந்தாலும் அதைப் பொருட்படுத்தாமல் அங்கேயே நின்று பாடினார்.

சிவனது திருவருளினால் அப்பொழுது வானிலே ஓர் அசரீரி எழுந்தது. “என்மீது கொண்ட அன்பினால் பாணர் பாடுகின்றார். தரையில் உள்ள ஈரம் தாக்கினால் யாழின் நரம்புகளது இறுக்கம் சிதையும். அதனால் அவருக்கு அமர்ந்து பாட அழகிய பொற்பலகை ஒன்றை இடுங்கள்” என்றது அது.

தொண்டர்களும் பொற்பலகை ஒன்றை இட்டனர். அதன் மீது ஏறியமர்ந்து சிவபெருமானின் பெருமைகளை யாழில் இசைத்துப் பாடினார் நீலகண்ட யாழ்ப்பாணர். பின் அங்கிருந்து புறப்பட்டு பல தலங்களையும் தரிசித்து இறுதியில் திருவாரூர் தலத்தை அடைந்தார். தமது குல வழக்கப்படி ஆலயத்துக்குள் செல்ல முடியாததால் அங்கும் திருக்கோயிலின் வாயில் முன்பு நின்று யாழில் வாசித்தார்.

அது கண்ட ஆருர் அண்ணல், பாணர் உள்ளே வந்து வழிபட, அவருக்கென்று புதிதாக வடதிசையில் வேறொரு வாயிலை உருவாக்கி அருளினார். அதன் வழியே உள்ளே சென்ற யாழ்ப்பாணர், கருவறையை அடைந்து தியாகராஜனை வணங்கித் துதித்தார். யாழில் பாடல்கள் மீட்டி வணங்கினார். பின் சீர்காழியை அடைந்தவர், ஞானசம்பந்தப் பெருமானைத் தரிசித்தார். அவருடைய திருவடிகளை வழிபட்டு, அவரை ஒருபொழுதும் பிரியாதவரானார். ஞானசம்பந்தர் செல்லும் சிவத்தலங்களுக்கெல்லாம் கூடவே சென்று, சம்பந்தர் பாடியருளும் திருப்பதிகங்களை எல்லாம் யாழில் இட்டு வாசிக்கும் பேற்றைப் பெற்றார்.

திருநீலகண்ட யாழ்ப்பாணர், தனது மனைவி மதங்க சூளாமணியாருடன் ஞானசம்பந்தருடைய திருமணத்திற்கு வருகை தந்தார். இறையருளால் அப்போது அங்கே தோன்றிய சோதியுள் அனைவருடனும் புகுந்து சிவத்துடன் கலந்தார். மீண்டும் பிறவா நிலை பெற்றார்.

திருநீல கண்டத்துப் பாணனார்க்கு அடியேன் - சுந்தரர் (திருத்தொண்டத் தொகை)

பாடல்கள்

பெரிய புராணத்தில் இப்புராணக் கதையை விளக்கும் பாடல்கள்

திருநீலகண்ட யாழ்ப்பாணர் மதுரையில் யாழ் மீட்டியது

ஆலவாய் அமர்ந்தார் கோயில் வாயிலை அடைந்து நின்று
பாலை ஈர் ஏழு கோத்த பண்ணினில் கருவி வீக்கிக்
காலம் ஆதரித்த பண்ணில் கை பல முறையும் ஆராய்ந்து
ஏலவார் குழலாள் பாகர் பாணிகள் யாழில் இட்டார்

இறைவன் அடியவர்கள் கனவில், பாணரைத் தன் முன் கொண்டு வரப் பணித்தது

மற்று அவர் கருவிப் பாடல் மதுரை நீடு ஆலவாயில்
கொற்றவன் திருள்ளத்துக் கொண்டு தன் தொண்டர்க்கு எல்லாம்
அற்றைநாள் கனவில் ஏவ அருள் பெரும் பாணனாரைத்
தெற்றினார் புரங்கள் செற்றார் திரு முன்பு கொண்டு புக்கார்

சிவபெருமான் பாணருக்குப் பொற்பலகை இடச் செய்தது

அந்தரத்து எழுந்த ஓசை அன்பினில் பாணர் பாடும்
சந்தம் யாழ் தரையில் சீதம் தாக்கில் வீக்கு அழியும் என்று
சுந்தரப் பலகை முன் நீர் இடும் எனத் தொண்டர் இட்டார்
செந்தமிழ்ப் பாணனாரும் திரு அருள் பெற்றுச் சேர்ந்தார்

சிவபெருமான், திருவாரூரில் யாழ்ப்பாணருக்காகத் தனி வாயில் உண்டாக்கியது

கோயில் வாயில் முன் அடைந்து கூற்றம் செற்ற பெருந்திறலும்
தாயின் நல்ல பெரும் கருணை அடியார்க்கு அளிக்கும் தண் அளியும்
ஏயும் கருவியில் தொடுத்து அங்கு இட்டுப் பாடக் கேட்டு அங்கண்
வாயில் வேறு வடதிசையில் வகுப்பப் புகுந்து வணங்கினார்

திருநீலகண்ட யாழ்ப்பாணர், திருஞான சம்பந்தருடன் இணைந்து யாழ் மீட்டி சிவபதம் பெற்றது

ஞானம் உண்டார் கேட்டு அருளி நல்ல இசை யாழ்ப் பெரும் பாணர்க்கு
ஆன படியால் சிறப்பு அருளி அமரும் நாளில் அவர் பாடும்
மேன்மைப் பதிகத்து இசை யாழில் இடப் பெற்று உடனே மேவியபின்
பானல் களத்தார் பெருமணத்தில் உடனே பரமர் தாள் அடைந்தார்

குரு பூஜை

திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனாரின் குரு பூஜை, சிவாலயங்களில், ஒவ்வோராண்டும், வைகாசி மாதம், மூல நட்சத்திரத்தில் நடைபெறுகிறது.

உசாத்துணை✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 18-Jun-2023, 07:07:02 IST