under review

தண்டியடிகள் நாயனார்

From Tamil Wiki
தண்டியடிகள் நாயனார் (ஓவியம்: அமரர் எஸ். மாலையப்பன்)

தண்டியடிகள் நாயனார், சைவ சமய அடியார்களாகிய 63 நாயன்மார்களில் ஒருவர்.

வாழ்க்கைக் குறிப்பு

தண்டியடிகள் நாயனார், சோழநாட்டின் திருவாரூரில் பிறந்தார். பிறவியிலேயே பார்வையற்றிருந்த இவர், தியாகேசப் பெருமானை தனது அகக்கண்ணில் கண்டு அனுதினமும் வணங்கி வந்தார். எப்பொழுதும் ‘நமசிவாய’ மந்திரத்தை ஓதிக் கொண்டிருக்கும் தன்மை கொண்டிருந்தார். காண்பதற்குரியது சிவபெருமானது மெய்த்திருத்தொண்டே என்னும் கொள்கையுடையவராக இருந்தார்.

தொன்மம்/சிவனின் ஆடல்

தண்டியடிகள் காலத்தில் சமணம் செல்வாக்குப் பெற்றது. திருவாரூர் கமலாலயம் திருக்குளத்தின் பக்கம் முழுவதும் சமணர்களது பள்ளிகள் பெருகி, குளத்தின் எல்லை சிறுகச் சிறுகக் குறைந்தது. நாளடைவில் குளமே இல்லாமல் போய் விடுமோ என்று தண்டியடிகள் வருந்தினார். குளத்தைச் சீர்திருத்தி முன் போல் அமைக்க எண்ணினார்.

அதற்காகக் குளத்தின் நடுவிலும், குளத்தைச் சுற்றிலும் அடையாளமாக ஒரு கோலையும், தறியையும் நட்டு அவற்றில் ஒரு கயிறைக் கட்டினார். தினந்தோறும் அந்தக் கயிற்றைப் பிடித்துக் கொண்டே குளத்தின் நடுப்பகுதிக்குச் செல்வார். அங்குள்ள மண்ணைத் தோண்டுவார். அவற்றை ஒரு கூடையில் திரட்டி எடுத்துக் கொள்வார். அந்தக் கயிற்றைப் பிடித்தவாறே வெளியில் வந்து மணலைக் கொட்டுவார். பின் மீண்டும் அந்தக் கயிற்றைப் பிடித்துக் கொண்டே மண்ணை எடுக்கச் செல்வார். இவ்வாறே அவர் தினந்தோறும் செய்து வந்தார்.

சமணர்கள் இது கண்டு சினமுற்றனர். அவரைத் தடுத்து, ‘மண்ணில் வாழும் சிறு உயிர்கள் உங்கள் செயலால் அழியும். இதைச் செய்யக் கூடாது. நீங்கள் செய்வது தர்ம விரோதம்’ என்று தடுத்தனர். தண்டியடிகளோ, ‘இது சிவத்தொண்டு. இதில் தர்மவிரோதம் ஏதுமில்லை’ என்று வாதம் செய்தார். அதைக் கேட்டு மேலும் சினந்த சமணர்கள், “உங்களுக்குக் கண் தான் தெரியாது என்று நினைத்தோம். காதும் கேட்காது போலிருக்கிறதே!” என்று கிண்டல் செய்தனர்.

உடன் தண்டியடிகள், “நான் சிவபெருமானுடைய திருவடிகளைத் தவிர வேறு எதையும் காண்பதில்லை. அதனை அறிய உங்களால் எப்படி முடியும்? உங்கள் கண்கள் குருடாகி, உலகெல்லாம் காணும்படி நான் கண்பெற்றால் நீங்கள் என்ன செய்வீர்கள்?” என்று கேட்டார். சமணர்கள் அதற்கு, “நீங்கள் மட்டும் உங்கள் தெய்வத்தின் அருளால் பார்வை பெற்று விட்டால் அதன் பின் நாங்கள் இந்த ஊரிலேயே இருக்கமாட்டோம். இது உறுதி” என்றனர். பின் கோபத்தில் அவர் கையிலுள்ள மண்வெட்டியைப் பறித்து, அவர் நட்ட தறியையும், கோலினையும், கயிற்றையும் பிடுங்கி எறிந்துவிட்டுச் சென்றனர்.

மனம் வருந்திய தண்டியடிகள் ஆலயம் சென்று, இறைவனிடம், “ஐயனே! இன்று சமணர்களால் அவமதிக்கப்பட்டேன். நீங்கள்தான் எனது இந்த வருத்ததைத் தீர்த்தருள வேண்டும்” என்று முறையிட்டார். அன்று அவர் உறங்கும்போது சிவபெருமான் அவர் கனவில் தோன்றினார். “தண்டியே, உன் கவலையை ஒழிப்பாயாக! நாளை உனது கண்ணுக்குப் பார்வை கிடைக்கவும், சமணர்களுடைய கண் பார்வை மறையவும் யாம் அருள் செய்வோம். அஞ்சவேண்டாம்!” என்று ஆறுதல் கூறினார்.

பின்னர் சோழ மன்னனின் கனவில் தோன்றி, “சிவபக்தரான தண்டி எனக்காகக் குளத்தை ஆழப்படுத்திச் சீர் செய்தபோது அது பொறுக்க மாட்டாத சமணர்கள் அப்பணிக்கு இடையூறு செய்தனர். நீ தண்டியை நாடிச் சென்று அவர் விருப்பம் என்னவோ அதனை நிறைவேற்றுவாய்!” என்று சொல்லி மறைந்தார்.

மன்னனும் மறுநாள் விடிந்ததும் தண்டியடிகளை நாடிச் சென்று நடந்த விஷயங்களைக் கேட்டறிந்தான். பின் தண்டியடிகள் முன்னே செல்ல, தான் பின் தொடர்ந்து கமலாலயக் குளக்கரையை அடைந்தான். சமணர்களையும் அங்கே வரவழைத்தான். அவர்கள் தரப்பையும் கேட்டறிந்தான். பின் தண்டியடிகளை நோக்கி, “ஐயா, பெருந்தவமுடையவரே! நீங்கள் சிவனது திருவருளினால் கண்பெற்றுக் காட்டுங்கள்.” என்றான்.

உடனே தண்டியடிகள், “நான் சிவபெருமானுக்கு உண்மையான அடியவன் என்றால் கண் பெறுவேன். இதோ, இந்த மன்னர் காணும்படி இச்சமணர்கள் கண்ணிழப்பர்” என்று சொல்லி, சிவனின் ஐந்தெழுத்தை உச்சரித்தவாறே, தன் இரு கரங்களையும் சிரம் மேலே கூப்பி குளத்துக்குள் இறங்கினார். நீரில் மூழ்கினார்.

அவர் நீரினுள் இருந்து வெளிவந்த பொழுது பார்வை பெற்றவராக வெளியே வந்தார். உடன் தேவர்கள் பூ மழை பொழிந்து வாழ்த்தினர். சிவத்தொண்டுக்கு இடையூறு செய்த சமணரோ உடனே பார்வை இழந்து தடுமாறினர். மன்னனும், “பழுதுசெய்து அமண் கெட்டது” என்று சொல்லி, தன் ஏவலர்களிடம், “திருவாரூர் மட்டுமில்லை; இனி எங்கும் காண முடியாதபடி இவர்களைத் துரத்துங்கள்” என்று கட்டளையிட்டான். தண்டியடிகள் விருப்பப்படி சமணப் பள்ளிகளை அழித்து, திருக்குளத்தைச் சீரமைத்தான். பல்வேறு திருப்பணிகளைச் செய்தான்.

அகக்கண்ணோடு, சிவபிரானின் அருளால் புறக்கண்ணும் பெற்ற தண்டியடிகள், நீண்டகாலம் வாழ்ந்து, இறுதியில் சிவபெருமான் திருவடியை அடைந்தார்.

நாட்டம் மிகு தண்டிக்கும், மூர்க்கற்கும் அடியேன் - சுந்தரர் (திருத்தொண்டத் தொகை)

பாடல்கள்

பெரிய புராணத்தில் இப்புராணக் கதையை விளக்கும் பாடல்கள்:

தண்டியடிகள் குளத்தைச் சீரமைக்க முன் வந்தது

 செங்கண் விடையார் திருக்கோயில் குடபால் தீர்த்தக் குளத்தின்பாங்
கெங்கும் அமணர் பாழிகளாய் இடத்தாற் குறைபா டெய்துதலால்
அங்கந் நிலைமை தனைத்தண்டி யடிகள் அறிந்தே ஆதரவால்
இங்கு நான்இக் குளம்பெருகக் கல்ல வேண்டும் என்றெழுந்தார்

தண்டியடிகளின் திருப்பணி

குழி வாய் அதனில் குறி நட்டுக் கட்டும் கயிறு குளக் குலையின்
இழிவாய்ப் புறத்து நடுத் தறியோடு இசையக் கட்டி இடை தடவி
வழியால் வந்து மண் கல்லி எடுத்து மறித்தும் தடவிப் போய்
ஒழியா முயற்சியால் உய்த்தார்; ஓதும் எழுத்து அஞ்சுஉடன் உய்ப்பார்.

சமணர்களின் இடையூறு

நண்ணிநாளும் நல்தொண்டர் நயந்த விருப்பால் மிகப் பெருகி
அண்ணல் தீர்த்தக் குளம் கல்லக் கண்ட அமணர் பொறார் ஆகி
எண்ணித் தண்டி அடிகள் பால் எய்தி முன் நின்று இயம்புவார்
மண்ணைக் கல்லில் பிராணி படும் வருத்த வேண்டாம் என்று உரைத்தார்.

சமணர்கள், தண்டியடிகளின் பணியைக் குலைத்தது

அருகர் அது கேட்டு உன் தயெ்வத்து அருளால் கண் நீ பெற்றாய் ஏல்
பெருகும் இவ்வூரினில் நாங்கள் பின்னை இருக்கிலோம் என்று
கருகு முருட்டுக் கைகளால் கொட்டை வாங்கிக் கருத்தின் வழித்
தருகைக் கயிறும் தறியும் உடன் பறித்தார் தங்கள் தலை பறித்தார்

சிவனின் அருளிச் செயல்

நெஞ்சில் மருவும் கவலையினை ஒழி நீ நின் கண் விழித்து அந்த
வஞ்ச அமணர் தம் கண்கள் மறையுமாறு காண்கின்றாய்
அஞ்ச வேண்டாம் என்று அருளி அவர் பால் நீங்கி அவ்விரவே
துஞ்சும் இருளில் அரசன் பால் தோன்றிக் கனவில் அருள் புரிவார்

தண்டியடிகள் கண் பெற்றது

தொழுது புனல் மேல் எழும் தொண்டர் தூய மலர்க்கண் பெற்று எழுந்தார்
பொழுது தெரியாவகை அமரர் பொழிந்தார் செழும் தண்பூமாரி
இழுதை அமணர் விழித்தே கண் இழந்து தடுமாறக் கண்டு
பழுது செய்த அமண் கெட்டது என்று மன்னன் பகர்கின்றார்

குரு பூஜை

தண்டியடிகள் நாயனாரின் குரு பூஜை, சிவாலயங்களில், ஒவ்வோராண்டும், பங்குனி மாதம், சதய நட்சத்திரத்தில் நடைபெறுகிறது.

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 13-May-2023, 06:25:48 IST