under review

மங்கையர்க்கரசியார்

From Tamil Wiki
மங்கையர்க்கரசியார் (ஓவியம்: அமரர் எஸ். மாலையப்பன்)

மங்கையர்க்கரசியார், சைவ சமய அடியார்களாகிய 63 நாயன்மார்களில் ஒருவர்.

வாழ்க்கைக் குறிப்பு

மங்கையர்க்கரசியார், சோழ நாட்டில் சோழ மன்னனின் மகளாகப் பிறந்தார். பாண்டிய மன்னனை மணம் செய்து கொண்டார். இயற் பெயர் மானி. கணவர் கூன் பாண்டியன் சமண சமயத்தைப் போற்றி வந்தாலும், மங்கையர்க்கரசியார், சிவனைச் சார்ந்து, சிவத்தைப் போற்றி வந்தார்.

சிவத்தொண்டு

மங்கையர்க்கரசியார், ஞானசம்பந்தப் பெருமானின் திருவருளினால் கூன் பாண்டியன் என்னும் நின்ற சீர் நெடுமாறனை சைவ சமயத்தை ஏற்கும்படிச் செய்தார். சமண மதத்தைப் பின்பற்றியதால் பாண்டியர் குலத்துக்கு நேர்ந்திருந்த பழியினைத் தீர்த்தார். சோழநாட்டைப் போலவே பாண்டியநாட்டையும் வளமுடையதாக்கினார். ஞானசம்பந்தப் பெருமானால் திருப்பதிகத்திலே சிறப்பித்துப் பாடப்பட்டார்.

சைவத்தின் சிறப்பை எங்கும் பரப்பி, சிவபெருமானின் திருவடியை அடைந்தார்.

வரிவளையாள் மானிக்கும், நேசனுக்கும் அடியேன் - சுந்தரர் (திருத்தொண்டத் தொகை)

பாடல்கள்

பெரிய புராணத்தில் மங்கையர்க்கரசியாரின் பெருமையைக் கூறும் பாடல்:

மங்கையர்க்கரசியாரின் பெருமை
மங்கையர்க்கரசியாரின் சிறப்பு

பூசுரர்சூ ளாமணியாம் புகலி வேந்தர்
போனகஞா னம்பொழிந்த புனித வாக்காற்
றேசுடைய பாடல்பெறுந் தவத்தி னாரைச்
செப்புவதியா மென்னறிந்து?;தென்னர் கோமான்
மாசில்புகழ் நெடுமாறன் றனக்குச் சைவ
வழித்துணையாய் நெடுங்கால மன்னிப் பின்னை
ஆசினெறி யவரோடுங் கூட வீச
ரடிநிழற்கீ ழமர்ந்திருக்க வருளும் பெற்றார்.

குரு பூஜை

மங்கையர்க்கரசியாரின் குரு பூஜை, சிவாலயங்களில், ஒவ்வோராண்டும், சித்திரை மாதம், ரோகிணி நட்சத்திரத்தில் நடைபெறுகிறது.

உசாத்துணை


✅Finalised Page