தொழுவூர் வேலாயுத முதலியார்
- வேலாயுதன் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: வேலாயுதன் (பெயர் பட்டியல்)
தொழுவூர் வேலாயுத முதலியார் (ஆகஸ்ட் 19,1832 - பிப்ரவரி 21, 1889) தமிழறிஞர், சைவ அறிஞர். இராமலிங்க வள்ளலாரின் மாணவர். அவருடன் அணுக்கமாக இருந்து பாடம் கற்றவர், திருவருட்பா தொகுப்பை வெளியிட்டவர்.
பிறப்பு, கல்வி
ஆகஸ்ட் 19, 1832-ல் (நந்தன ஆண்டு, ஆவணி 9) செங்கற்பட்டு மாவட்டம், ஈக்காட்டுக் கோட்டம், சிறுகடல் (தொழுவூர் அஞ்சல் நிலையம் அருகிலுள்ளது) எனும் ஊரில் செங்கல்வராய முதலியார்-ஏலவார்குழலி இணையருக்கு மகனாகப் பிறந்தார். 1849-ல் தன் தந்தையின் நண்பர் காலவாய் குப்பண்ண முதலியார் வேலாயுத முதலியாரை வடலூர் இராமலிங்க வள்ளலாரின் மாணவராகச் சேர்த்துவிட்டார்.
தனிவாழ்க்கை
சென்னை பிரசிடென்ஸி கல்லூரியில் தமிழாசிரியராகப் பணியாற்றினார்.
வேலாயுத முதலியாரின் முதல் மனைவி ஸ்ரீரங்கம்மாள். மகன், நாகேஸ்வரன். மகள், சிவகாமி அம்மையார். முதல் மனைவி ஸ்ரீரங்கம்மாள், மகள் சிவகாமி அம்மையார் ஆகியோரின் மறைவுக்குப் பின் ஸ்வர்ணாம்பாள் என்பவரை மணந்தார். இவர்களுக்கு செங்கல்வராய முதலியார் என்னும் மகன் பிறந்தார்.
இராமலிங்க வள்ளலாருடன் உறவு
இராமலிங்க வள்ளலாருடன் தொடக்கம் முதலே அணுக்கமாக இருந்தவர் தொழுவூர் வேலாயுத முதலியார். வள்ளலாரின் பாடல்களை ஆறு திருமுறைகளாக தொகுத்து திருவருட்பா என்னும் தலைப்பில் வெளியிட முயற்சி எடுத்தார். 1860-ல் தொடங்கிய பதிப்பு முயற்சியில் 1867ல் முதல் நான்கு திருமுறைகளும் வெளிவந்தன. இதற்கு சோமசுந்தரம் செட்டியார் என்பவர் பொருளுதவி அளித்தார். இந்நான்கு திருமுறைகளின் இரண்டாம் பதிப்பை 1887-ல் கொண்டுவந்தார்.
இந்நூல்களின் முகப்பில் இராமலிங்கம் பிள்ளை என அச்சிடவேண்டும், இராமலிங்க சுவாமிகள் என்று கூட அச்சிடக்கூடாது என வள்ளலார் சொல்லியிருந்தும் கூட தொழுவூர் வேலாயுத முதலியார் 'திருவருட்பிரகாச வள்ளலார்’ என ஆசிரியர் பெயரை அச்சிட்டார். அதை இராமலிங்க வள்ளலார் கண்டித்தார். பின்னர் அதிலுள்ள ஆர் விகுதி மட்டுமே தன்னைக் குறிக்கிறது என ஏற்றுக்கொண்டார்.முதல் நான்கு திருமுறைகளும் வெளிவந்து 13 ஆண்டுகளுக்குப் பின் ஐந்தாம் திருமுறை 1880-ல் வள்ளலார் மறைந்த பிறகு வெளிவந்தது. தொழுவூர் வேலாயுத முதலியார் அவற்றை வெளியிட்டார்.
அருட்பா மருட்பா விவாதம்
யாழ்ப்பாணம் நல்லூர் ஆறுமுக நாவலர் இராமலிங்க வள்ளலாரின் பாடல்கள் அருட்பாக்கள் அல்ல என்று சொல்ல உருவாகிய விவாதத்தில் தொழுவூர் வேலாயுத முதலியார் இராமலிங்க வள்ளலார் தரப்பில் நின்று கடுமையான கண்டனப் பிரசுரங்களை வெளியிட்டார். இராமலிங்க வள்ளலார் தரப்பை ஒருங்கிணைத்தவரும் அவர்தான். (பார்க்க அருட்பா மருட்பா விவாதம்)
முரண்பாடு
திருவருட்பாவில் முதல் ஐந்து திருமுறைகளை வெளியிட்ட தொழுவூர் வேலாயுத முதலியார் ஆறாம் திருமுறையை வெளியிட ஆர்வம் காட்டவில்லை என ஆய்வாளர் தெரிவிக்கின்றனர். ஏனென்றால் அவற்றில் இராமலிங்க வள்ளலார் சைவம் உட்பட அனைத்து மதங்களையும் வழிபாடுகளையும் நிராகரித்து சுத்தசன்மார்க்கம் எனப்படும் ஜோதிவழிபாட்டை முன்வைத்திருந்தார்.
வள்ளலார் பற்றிய அறிக்கை
வள்ளலாரின் இறுதிக்காலங்களில் வேலாயுத முதலியார் தன் அணுக்கத்தை குறைத்துக் கொண்டார் எனப்படுகிறது. ஆனால் வள்ளலார் மறைவுக்குப் பின் தொழுவூர் வேலாயுத முதலியார் தியோசஃபிக்கல் சொசைட்டிக்கு அளித்த விரிவான அறிக்கையில் ’அவர் சாதி வேற்றுமைகளைக் கண்டித்துப் பேசியதால் அனைவரது பெரும் பாராட்டுக்குரியவராக-ல்லை, ஆயினும் எல்லாச் சாதியாரும் பெருந்திரளாக அவரைச் சூழ்ந்திருந்தனர். உபதேசங்களைக் கேட்டுப்பயன் பெற அவர்கள் வரவில்லை. சித்தாடல்களைக் கண்டு களிக்கவும் அவற்றின் பயனைப் பெறவுமே வந்தனர். சித்தாடல்களில் அவர் வல்லவர். இயற்கைக்கு மேலான எதையும் அவர் ஒப்புவதில்லை. தமது மார்க்கம் அறவியலையே அடிப்படையாகக் கொண்டதென்று இடையறாது வற்புறுத்துவார்.’ என்று கூறியிருக்கிறார்
மறைவு
பிப்ரவரி 21,1889-ல் திருவொற்றியூரில் மறைந்தார். திருவொற்றியூர் வேலாயுத நகர் ஈசானமூர்த்தி தெருவில் முத்துக்கிருஷ்ண பள்ளி வளாகத்தில் தொழுவூர் வேலாயுத முதலியாரின் சமாதி உள்ளது
நூல்கள்
.உரைநடை
- பராசரஸ்மிருதி(ஆசார காண்டம்)
- சங்கர விஜய வசனம்
- மார்க் கண்டேய புராண வசனம்
- பெரியபுராண வசனம்
- வேளாண் மரபியல்
- திருவெண்காட்டடிகள் வரலாறு
- விநாயகர் சதுர்த்தி விரதம்
- போசராசன் சரிதம்
- மகாவீர சரித்திரம்.
செய்யுள்
- திருவருட்பிரகாசர் சந்நிதிமுறை
- திருப்பாதப் புகழ்ச்சிமாலை
- சித்திர யமக அந்தாதி
- திருத்தணிகைப் பதிற்றுப்பத்தந்தாதி
- திருத்தணிகை நான்மணிமாலை
- திருத்தணிகை மும்மணிக்கோவை
- திருப்போரூர் கவிவிண்ணப்பம்
- மகிழ்மாக்கலம்பகம்
- வடிவுடையம்மன் சவுந்தரியாட்டகம்
- சிவஞான பாலைய தேசிகர் மும்மணிக்கோவை
- நெஞ்சராற்றுப்படை
- தாதகுருநாதர் கலிமாலை.
உசாத்துணை
- திருவருட்பிரகாச வள்ளலார் குறித்து தொழுவூர் வேலாயுத முதலியார் கொடுத்த வாக்கு மூலம். - YouTube
- தொழுவூர் வேலாயுத முதலியார் திருஅருட்பிரகாச வள்ளலார் சந்நிதி முறை - நூல் -
- தொழுவூர் வேலாயுத முதலியார் "மகிழ்மாக் கலம்பகம்"
- The Poems about Vallalar : தொழுவூர் வேலாயுத முதலியார்
- பெரியபுராண வசனம் தொழுவூர் வேலாயுத முதலியார் இணைய நூலகம்
- தொழுவூர் வேலாயுத முதலியார் - வள்ளலார் மீது பாடிய பாடல்கள்
- தியோசபிகல் சொசைட்டிக்கு தொழுவூர் வேலாயுத முதலியார் வாக்குமூலம்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
25-Sep-2022, 14:46:25 IST