under review

ம.பொ. சிவஞானம்

From Tamil Wiki
ம.பொ. சிவஞானம்
ம.பொ. சிவஞானம்

ம.பொ. சிவஞானம் (மயிலாப்பூர் பொன்னுசாமி சிவஞானம்) (ஜூன் 26, 1906 - அக்டோபர் 3, 1995) சுதந்திரப்போராட்ட தியாகி, அரசியல் களச்செயல்பாட்டாளர், தமிழறிஞர். சிலப்பதிகாரத்தில் கொண்ட ஈடுபாட்டின் காரணமாக சிலம்புச் செல்வர் என அழைக்கப் பெற்றார்.

பிறப்பு, இளமை

ம.பொ. சிவஞானம், சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில் உள்ள சால்வன்குப்பம் என்ற இடத்தில் ஜூன் 26, 1906-ல் பிறந்தார். இவருடைய பெற்றோர் மயிலாப்பூர் பொன்னுசாமி – சிவகாமி.

இவரது பிறந்தபோது குடும்பத்தினர் கேட்டுக்கொண்டதனால், சரபைய செட்டி என்ற தேவாங்கர் வகுப்பைச் சேர்ந்த சோதிட முதியவர் இவருக்கு ஞானப்பிரகாசம் என்று பெயர் சூட்டினார். ஆனால் அந்தச் சோதிடர் இவரை 'சிவஞானி' என்றே அழைத்து வந்தார். பிற்காலத்தில் சிவஞானம் என்ற பெயரே நிலைத்துவிட்டது.

தனி வாழ்க்கை

ம.பொ. சிவஞானம், சிறு வயதில் நெசவுத் தொழிலில் ஈடுபட்டார்.1927-ல் 'தமிழ்நாடு ' நாளிதழில் அச்சு கோப்பாளராக வேலைக்குச் சேர்ந்தார். பின்னர் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டுச் சிறைவாசம் சென்றார்.எழுநூறு நாட்களுக்கு மேல் சிறையில் இருந்தார். காங்கிரஸ் இயக்கத்தில் சேர்ந்து சிறந்த சொற்பொழிவாளராகத் திகழ்ந்தார்.

31-ம் வயதில் ராஜேஸ்வரி அம்மையாரை மணந்தார். இவர்களுக்குத் ஒரு மகனும் கண்ணகி, மாதவி என்ற இரு மகள்களும் உள்ளனர்.

இலக்கியவாழ்க்கை

வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு - ம.பொ.சி
வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு - ம.பொ.சி

ம.பொ. சிவஞானம், சிறுவயதில் தன் தாய் சொன்ன புராணக் கதைகள் மற்றும் நீதிக் கதைகள்தான் தன்னை சிந்தனையாளராக மாற்றியதாக குறிப்பிடுகிறார். சொந்த முயற்சியால் படித்து தமிழ் இலக்கண, இலக்கியங்களில் தேர்ச்சி பெற்றார். ஆங்கில அறிவையும் வளர்த்துக்கொண்டார்.

ம.பொ.சி பாரதியின் எழுத்துகள் மூலம் சங்க இலக்கியங்களின் அறிமுகம் பெற்றார். சிறையில் இருந்தபோது சிலப்பதிகாரம் கற்றார். தான் ஆரம்பித்த தமிழரசு கழகம் மூலம் 1950-ல் முதன்முதலாகச் சிலப்பதிகார மாநாட்டை ஒருங்கிணைத்தார். பின் சிலப்பதிகார விழாவை ஆண்டுதோறும் நடத்த வழிவகை செய்தார்.

வீரபாண்டிய கட்டபொம்மன், வ.உ.சிதம்பரனார் ஆகியோரின் வாழ்க்கை வரலாற்றை விளக்கி நூல்கள் எழுதியுள்ளார். இந்நூலைகளைத் தழுவி பி.ஆர். பந்துலு திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

1966 -ல் ம.பொ.சியின் 'வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு' என்னும் நூலுக்கு சாகித்ய அகாதெமி விருது வழங்கப்பட்டது.

2006-ம் ஆண்டில் ம.பொ. சியின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு தமிழக அரசு அவரது நூல்களை நாட்டுடைமையாக்கிச் சிறப்பித்தது.

இலக்கிய இடம்

ம.பொ.சியின் இலக்கியப் பங்களிப்பு இரண்டு தளங்களில் ஆனது.

முதலாவதாக தமிழிலக்கியத்தின் பொதுக்கூறுகளை அடையாளம் கண்டு மக்களிடம் பண்பாட்டு மாற்றங்களை உருவாக்க முயன்ற அறிவியக்கத்தின் குரலாக இருந்தார். சிலப்பதிகாரம் பற்றிய ம.பொ.சி அவர்களின் அத்தனை நூல்களிலும் சிலம்பில் இருந்து தமிழ்ப்பண்பாட்டுக்கூறுகளைக் கண்டடைந்து தொகுக்கும்போக்கு இருப்பதைக் காணலாம். சிலம்பில் இருந்து கண்டடைந்த பண்பாட்டுக்கூறுகளை சமகாலத்தில் வலியுறுத்தவும் சமகாலத்தின் பண்பாட்டு அம்சங்களை சிலம்பில் கண்டடையவும் செய்தார்.

இரண்டாவதாக இந்தியதேசியம் என்ற ஒருமைக்குள் வட்டாரதேசியத்தை அதன் தனித்தன்மையும் முழுமையும் கெடாமல் வளர்த்தெடுக்கும் நோக்கு. அதற்காக அவர் இளங்கோவை பழந்தமிழின் முகமாகவும் பாரதியை நவீனகாலகட்டத்தின் புதியகருத்துக்களின் அடையாளமாகவும் முன்னிறுத்தினார்.

ம.பொ.சியின் உரைநடை மேடைப்பேச்சுக்குரிய சொல்மிகையும் பொருள்மிகையும் கொண்டது.

மறைவு

ம.பொ. சிவஞானம் உடல்நலம் குன்றி அக்டோபர் 3,1995 அன்று தனது 89-ஆவது வயதில் காலமானார்.

விருதுகள்

  • சிலம்புச் செல்வர் என்ற விருது, சொல்லின் செல்வர் ரா.பி. சேதுப்பிள்ளை அவர்களால் வழங்கப்பெற்றது.
  • சென்னை, மற்றும் அண்ணாமலைப் பல்கலைக் கழகங்கள் அவருக்கு 'டாக்டர்' பட்டங்கள் வழங்கிச் சிறப்பித்தன.
  • மதுரைப் பல்கலைக் கழகம், 'பேரவைச் செல்வர்' என்ற பட்டம் வழங்கியது.
  • மத்திய அரசு, பத்மஸ்ரீ விருது தந்து கெளரவித்தது.

படைப்புகள்

பாரதியைப் பற்றிய ஆராய்ச்சி நூல்கள்
  • வள்ளலாரும் பாரதியும் [1965]
  • எங்கள் கவி பாரதி [1953]
  • பாரதியாரும் ஆங்கிலமும் [1961]
  • பாரதி கண்ட ஒருமைப்பாடு [1962]
  • உலக மகாகவி பாரதி [1966]
  • பாரதியார் பாதையிலே [1974]
  • பாரதியின் போர்க்குரல் [1979]
  • பாரதியார் பற்றிய ம.பொ.சி. பேருரை [1983]
  • என்னை வளர்த்த பாரதி[2013] ம.பொ.சி. கூறி விக்கிரமன் (எழுத்தாளர்), நாகராஜன் தொகுத்தது
சிலப்பதிகாரம் பற்றிய நூல்கள்
  • சிலப்பதிகாரமும் தமிழரும் [1947]
  • கண்ணகி வழிபாடு [1950]
  • இளங்கோவின் சிலம்பு [1953]
  • வீரக்கண்ணகி [1958]
  • நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம் (உரை) [1961]
  • மாதவியின் மாண்பு [1968]
  • கோவலன் குற்றவாளியா? [1971]
  • சிலப்பதிகாரத் திறனாய்வு [1973]
  • சிலப்பதிகார யாத்திரை [1977]
  • சிலப்பதிகார ஆய்வுரை [1979]
  • சிலப்பதிகார உரையாசிரியர்கள் சிறப்பு [1980]
  • சிலப்பதிகாரத்தில் யாழும் இசையும் [1990]
  • சிலம்பில் ஈடுபட்டதெப்படி? [1994]
சிதம்பரனார் பற்றிய நூல்கள்
  • கப்பலோட்டிய தமிழன் [1944]
  • தளபதி சிதம்பரனார் [1950]
  • கப்பலோட்டிய சிதம்பரனார் (விரிவான பதிப்பு) [1972]
கட்டபொம்மன் பற்றிய நூல்கள்
  • வீரபாண்டிய கட்டபொம்மன் [1949]
  • கயத்தாற்றில் கட்டபொம்மன் [1950]
  • சுதந்திர வீரன் கட்டபொம்மன் [1950]
திருவள்ளுவர் பற்றிய நூல்கள்
  • வள்ளுவர் வகுத்த வழி [1952]
  • திருவள்ளுவரும் காரல் மார்க்சும் [1960]
  • திருக்குறளில் கலை பற்றிக் கூறாததேன்? [1974]
இராமலிங்க அடிகள் பற்றிய நூல்கள்
  • வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு [1963] எனும் நூலுக்காக 1966 ம் ஆண்டு சாகித்ய அகாதெமி விருது பெற்றார்
  • வள்ளலாரும் பாரதியும் [1965]
  • வள்ளலார் வளர்த்த தமிழ் [1966]
  • வள்ளலார் வகுத்த வழி [1970]
  • வள்ளலார் கண்ட சாகாக் கலை [1970]
  • வானொலியில் வள்ளலார் [1976]
  • வள்ளலாரும் காந்தியடிகளும் [1977]
  • வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு (பள்ளிப் பதிப்பு) [1963]
ஆங்கில நூல்கள்
  • The Great Patriot V.O. Chidambaram Pillai
  • The First Patriot Veera Pandia Katta Bomman
  • The Universal Vision of Saint Ramalinga

உசாத்துணை


✅Finalised Page