தேவதேவன்
தேவதேவன் (பிச்சுமணி கைவல்யம்) ( பிறப்பு: மே, 5 1948) நவீனத் தமிழின் முதன்மை கவிஞர்களில் ஒருவர். கவிதைகள், சிறுகதைகள், கவிதை நாடகங்கள் எழுதியுள்ளார். தூத்துக்குடியில் ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றார். நவீன தமிழ் கவிதையில் மிக அதிக கவிதைகளை எழுதிய கவிஞர்களில் ஒருவர் தேவதேவன். இயற்கையின் வழியாக அடைந்த ஆன்மிக நிலையை வெளிப்படுத்தும் கவிதைகளை எழுதியவர். நவீனத் தமிழின் முதன்மைப்பெருங்கவிஞர் என ஜெயமோகன் போன்ற விமர்சகர்களால் மதிப்பிடப்படுபவர்.
பிறப்பு, கல்வி
தேவதேவன் மே 5, 1948 அன்று சோ. பிச்சுமணி, பாப்பாத்தி தம்பதியருக்கு இரண்டாவது மகனாகப் பிறந்தார். உடன் பிறந்தவர்கள் மூன்று பேர். தேவதேவனின் பூர்வீக ஊர் கோவில்பட்டி அருகே உள்ள இராஜாவின் கோயில், தாயின் பூர்வீகம் வேடப்பட்டி. தந்தை தன் 19-ம் வயதில் மில் வேலைக்காகத் தூத்துக்குடிக்கு வந்தது முதல் தூத்துக்குடி சொந்த ஊரானது.தேவதேவனின் தந்தை பிச்சுமணி ஈ.வெ.ராவின் மீது மிகுந்த பற்றுக் கொண்டவர். கரும்படைத் தொண்டர். தேவதேவன் பிறந்த அன்று தூத்துக்குடியில் நிகழ்ந்த கரும்படைக்கான மாநாட்டில் ஈ.வெ.ரா கலந்துக் கொண்டார். அதில் தேவதேவனைத் தூக்கிச் சென்று அவருக்கு பெயர்சூட்டும் படி ஈ.வெ.ராவிடம் வேண்டினார். ஈ.வெ.ரா தன் நண்பர் ’கைவல்யம்’ பெயரைச் சூட்டினார். கைவல்ய சாமியார் என அறியப்பட்ட அவர் ஒரு நாடோடி, பெரியாருடன் தொடர்ந்து பயணம் செய்து வந்தவர்.
தேவதேவன் ஆரம்பக்கல்வியை தூத்துக்குடி டுவிபுரம் தெருவில் உள்ள டி.டி.டி.ஏ. ஆரம்ப பள்ளியில் பயின்றார். சுப்பையா வித்யாலயம் ஆண்கள் உயர்நிலைப் பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி வரை பயின்றார். எஸ்.எஸ்.எல்.சி முடித்து மூன்று ஆண்டுகள் சிறு சிறு வேலைகள் செய்தார்.
குருவிக்குளத்தில் உள்ள ஆசிரியர் பயிற்சி பள்ளியில் ஆசிரியர் பயிற்சி முடித்தார். வேலை கிடைக்காததால் சிறிது காலம் அச்சகம் வைத்திருந்தார். கேரளத்தில் சிறு வேலை ஒன்றில் சில காலம் இருந்தார். பல்வேறு உடலுழைப்புப்பணிகளைச் செய்தார். தூத்துக்குடியில் தன் இல்லத்திலேயே ஒரு சிறு அச்சகம் நடத்தினார். தேவதேவனின் 33-ம் வயதில் அவருக்கு ஆசிரியர் பணி கிடைத்தது.
தனி வாழ்க்கை
தேவதேவன் தன் 35-ம் வயதில் சாந்தியை திருமணம் செய்துக் கொண்டார். இரு குழந்தைகள் மூத்த மகள் அம்ருதா ப்ரீதம், இளைய மகன் அரவிந்தன். குடும்பத்தின் மீதும், தூத்துக்குடி மணி நகரில் சொந்தமாகக் கட்டிய வீடு மீதும் தேவதேவனுக்கு மிகுந்த பிரியம் உண்டு.
முப்பத்தி மூன்றாம் வயதில் தூத்துக்குடி சிவந்தாக்குளம் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார். 25 ஆண்டுகள் அதே பள்ளியில் பணியாற்றி 2005-ம் ஆண்டு ஓய்வு பெற்றார்.
தேவதேவன் எளிய உணவு பழக்கம் உடையவர். பழங்கள், குறிப்பாகப் பப்பாளிப் பழம் மீது பிரியம் அதிகம். முட்டை மற்றும் அசைவ உணவு உண்பதில் கருணையின்மை மட்டுமல்ல அதில் ஒருவகை ஒழுங்கின்மையும் உண்டு என்னும் கொள்கை கொண்டவர்.
தேவதேவனின் உறவினர்களில் கணிசமானவர்கள் இலங்கை, பர்மா என கப்பலேறிச் சென்று மறைந்து போனார்கள். அவர்கள் ஞாபகமாகச் சில இலங்கை பாணி மரப் பொருட்களும் ஒரு மூட்டை தூக்கும் ஊசியும் தேவதேவன் குடும்பத்தில் இருந்தன.
இலக்கிய வாழ்க்கை
கவிதைகள்
தேவதேவனுக்கு இளமையிலேயே இலக்கிய வாசிப்பில் பரிச்சயம் ஏற்பட்டது. புனைகதைகள், தத்துவ நூல்கள், பண்டை இலக்கியங்கள் என அவரது ஈடுபாடு பல தளங்களில் விரிந்தது. வில்லியம் ஹென்றி தோரோ மீதான ஈடுபாடு பல வருடங்களுக்குத் தேவதேவனைத் தொடர்ந்திருந்தது. பிரமிள் தொடர்பால் ஜெ. கிருஷ்ணமூர்த்தி மீது ஆர்வம் ஏற்பட்டது. "பிரமிள் தன்னிடமுள்ள முக்கியமான நூல்கள் பலவற்றை எனக்கு அளித்தது மிக உதவியாக இருந்தது" என தேவதேவன் குறிப்பிடுகிறார்.
நவீன புனைகதையாளர்களில் தல்ஸ்தோய் மீதும், பழைய மரபில் பக்தி இயக்கத்தைச் சார்ந்த கவிதைகளிளும் தான் தனக்கு ஈடுபாடு என்று குறிப்பிடும் தேவதேவன், குறிப்பாக ஆண்டாளின் வாழ்வும் கவிதையும் தன்னை வெகுகாலம் ஆட்கொண்டது என்கிறார்.
வில்லியம் ப்லேக் எழுதிய 'Songs of Innocence, Songs of Experience' என்ற தொகுப்பு தன் சிந்தனைப் போக்குகளை ஒட்டி அமைந்ததாக அவர் கருதுகிறார். மேலும் "என் கவிதைகள் ராபர்ட் ஃப்ராஸ்ட்(Robert Frost), தாகூர் கவிதைகளோடு ஒத்திசையும் தன்மையைக் கொண்டதாகக் கருதுகிறேன்" என்கிறார்.
முதலில் மரபு கவிதைகள் எழுதி முயற்சித்த தேவதேவன் பின் நவீன கவிதைகள் வாசிப்பில் ஈடுபாடு கொண்டு கணையாழி, பிரக்ஞை இதழ்களில் கவிதைகள் எழுதத் தொடங்கினார். அவரது முதல் கவிதைகளான 'தையல்', 'புண்களை கவனி' எனத் தொடங்கும் ‘வாழ்வும் கவிதையும்’ ஆகிய கவிதைகள் கணையாழியில் வெளிவந்தன.
தேவதேவனின் முதல் கவிதைத் தொகுதி 'குளித்துக் கரையேறாத கோபியர்கள்' 1976-ல் வெளியானது. இரண்டாம் தொகுதியான ‘மின்னல் பொழுதே தூரம்’ சுந்தர ராமசாமியின் முன்னுரைக்குச் சென்றது. பின்னர் பிரமிள் முன்னுரையுடன் அது வெளியானது. பிற்பாடு தேவதேவனில் முன்னிற்கப் போகும் சில கூறுகளை அத்தொகுப்பின் முன்னுரையில் பிரமிள் அடையாளம் கண்டு குறிப்பிட்டிருந்தார். தேவதேவன் முதல், இரண்டாம் தொகுப்புகளை அவரது நண்பர் எஸ்.பி.ஆர். முத்துப்பாண்டி உதவியுடன் சொந்த செலவில் வெளியிட்டார்.
பின் தொடர்ந்து தேவதேவனின் கவிதை நூல்கள் வெளிவந்தன. கிட்டதட்ட எண்பத்தி மூன்று கவிதை நூல்களை தேவதேவன் எழுதியுள்ளார்.
சிறுகதைகள்
தேவதேவன் பத்துக்கும் குறைவான சிறுகதைகள் எழுதியுள்ளார். அவை தமிழினி பதிப்பகத்தால் நூல்வடிவம் பெற்றுள்ளன.
கட்டுரைகள்
தன் நூல்களுக்கான முன்னுரைகளுடன் தேவதேவன் கவிதையியல் பற்றிய கட்டுரைகளும் எழுதியுள்ளார். அவை முழுமையாக நூல்வடிவம் பெறவில்லை. ஓர் உரையாடல் 'கவிதை பற்றி' எனும் நூலாக வெளிவந்துள்ளது. (காஞ்சனை வெளியீடு)
கவிதைக் கொள்கை
நவீனக்கவிதைகளில் பொதுவாக உள்ள எதிர்மறைத்தன்மை, தனிமனித உளச்சிக்கல்கள் ஆகியவை தேவதேவன் கவிதைகளில் இல்லை. அவை இயற்கை, பிரபஞ்சம் ஆகியவற்றுடன் மானுட ஆழம் அடையும் ஒத்திசைவின் விளைவான பெருங்களிப்பை வெளிப்படுத்துபவை "கவிதை, ஒரு சொல் விளையாட்டோ, வெறும் அழகியல் மாத்திரமோ அல்ல; அது தன்னுள் கொண்டிருக்கும் இலட்சியம் அபரிமிதமானது. முதலில் அது அவன் வாழ்வில் ஒரு புரட்சிகரத்தை உண்டாக்கி விடுகிறது. பின்னர் அதன் அழகியல், புனைவின்றியே ஒளிரத்தக்க பெருங்காட்சியாகவும் கண்கூடான ஒரு செயல்பாடாகவும் திகழ்கிறது. முதலில் கவிதையில் வெளிப்படுவது நமது ஆளுமைதான் என்று தெரிந்து கொண்டோமானால், நாம் நமது என் ஆளுமை வளர்ச்சியில் நாட்டம் கொள்ளத் தொடங்கிவிடுவோம். ஆளுமை வளர்ச்சி என்பது இடையறாத மெய்மையறிதலன்றி வேறில்லை என்ற நிலைக்குக் கொண்டுவந்து விடும்" என்று தேவதேவன் தன் கவிதையைப்பற்றி சொல்கிறார்.
விருதுகள்
- விஷ்ணுபுரம் விருது, 2012
- திருப்பூர் தமிழ்ச் சங்க விருது
- லில்லி தேவசிகாமணி விருது
- தேவமகள் அறக்கட்டளை விருது
- தமிழக அரசின் தமிழ்வளர்ச்சிக்கழக விருது
- விளக்கு விருது
- தூத்துக்குடி சாராள் - ராஜபாண்டியன் வாழ்நாள் இலக்கிய சாதனை விருது
- சென்னை புத்தகக் கண்காட்சி விருது 2022
- கவிக்கோ விருது
திறனாய்வு ,ஆவணப்படம்
- "நவீனத்துவத்திற்குப் பின் தமிழ்க் கவிதை - தேவதேவனை முன்வைத்து" என்ற கவிதா பதிப்பகத்தின் வெளியீடாக வந்த நூல் ஜெயமோகன் தேவதேவன் கவிதைகளைப் பற்றி எழுதிய திறனாய்வு நூல்
- தமிழினி வெளியீடாக ஜெ.ப்ரான்ஸிஸ் கிருபா இயக்கத்தில் தேவதேவனைப்பற்றி "யாதும் ஊரே யாதும் கேளிர்" என்ற செய்திப்படம் 2007-ம் ஆண்டு வெளியிடப்பட்டுள்ளது.
- தேவதேவன் விஷ்ணுபுரம் இலக்கிய விருது பெற்றதை ஒட்டி விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் 'ஒளியாலானது- தேவதேவன் படைப்புலகம்' (ஜெயமோகன்) என்னும் நூலை வெளியிட்டது.
இலக்கிய இடம்
எழுத்தாளர் ஜெயமோகன் தேவதேவன் கவிதைகளைப் பற்றிக் குறிப்பிடும் போது, "அவருக்குத் தன் கவிதைகளை 'சமகால பிரக்ஞை’யுடன் படைக்க வேண்டுமென்றோ, 'சமகால அரசியல்’ அதில் இருக்க வேண்டுமென்றோ எவ்விதமான திட்டமும் இல்லை. தமிழ்க் கவிஞர்களில் கவிதையை ஒரு தவமாக மேற்கொண்டவர். எனவே ’கவிஞர்’ என்ற சொல்லுக்கு முற்றிலும் பொருத்தமானவர் அவர்" என்கிறார்.
மேலும் அவர் தேவதேவனின் கவிதை உலகைச் சுட்டும் போது, "தேவதேவனின் உலகம் துயரற்றது. துயரென்றால் அது முடிவிலிமுன் நின்றிருப்பதன் பெருந்துயர் மட்டுமே. நவீனக் கவிதை என்பதே அன்றாடவாழ்வின் இருண்மையின் , கசப்பின், வெறுமையின் பதிவு என்றிருக்கும் சூழலில் தேவதேவனை தனித்து நிறுத்துவது இந்த இனிமை. இருத்தலின் கொண்டாட்டம் என அவர் கவிதைகளைச் சொல்லலாம். அவற்றின் குழந்தைத்தன்மை கனிந்து முதிர்வதன் விளைவாக எழுவது. அனேகமாக வாசகர்களே இல்லாத ஒருவெளியில் நின்றுகொண்டு தனக்கே என இவற்றை அவர் எழுதிக்கொண்டிருக்கிறார்." என்கிறார். க. மோகனரங்கன் [1]"இப்பிரபஞ்சத்திலுள்ள கோடிக் கணக்கான உயிரிகளின் தொகுதியுள் தன்னையும் ஒரு உறுப்பாகக் கருதி, இயற்கையுடன் ஒத்திசைந்து வாழ்தல் என்ற நமது கீழைத்தேய சிந்தனை மரபின் தொடர்ச்சியாக அமைபவை தேவதேவனின் கவிதைகள். ஒருவன் இயற்கையுடன் கொள்ளும் விதவிதமான தொடர்புகளும், அத்தருணங்களின் தீரா வியப்பும், அவற்றினூடாக மனம் கொள்ளும் விரிவும், அடையும் ஆனந்தமும், பெறும் அமைதியுமே தேவதேவனின் கவிதைகளில் திரும்பத் திரும்ப காட்சிப்படுத்தப்படுகிறது. இவருடைய கவிதைகளின் ஊற்று முகத்தை "கருணை மிக்க பேரியற்கையின் முன் வியந்து நிற்கும் குழந்தமை" என்று ஒற்றை வரியில் சுருக்கிக் கூறிவிடலாம். இவருடைய கவிதைகளில் காணப்படும் காட்சி சித்தரிப்பு, படிமத்தன்மை ஆகியவற்றை எடுத்துக் கொண்டால் அவற்றில் சங்கக் கவிதைகளில் காணப்படுவது போன்ற இயற்கை நவிற்சித் தன்மையும், வெளிப்பாட்டு மொழி என்று பார்த்தால் பக்தி இலக்கியங்களில் தென்படுவது போன்ற உணர்வு நெகிழ்ச்சியையும் ஒருசேரக் காணலாம் " என்று தேவதேவனின் கவிதைகளைப் பற்றிக் குறிப்பிடுகிறார்.
நூல்கள்
கவிதைத் தொகுப்பு
- குளித்துக் கரையேறாத கோபியர்கள் (1976)
- மின்னற்பொழுதே தூரம் (1981)
- மாற்றப்படாத வீடு (1984)
- பூமியை உதறியெழுந்த மேகங்கள் (1990)
- நுழைவாயிலிலேயே நின்றுவிட்ட கோலம் (1991)
- சின்னஞ்சிறிய சோகம் (1992)
- நட்சத்திர மீன் (1994)
- அந்தரத்தில் ஓர் இருக்கை (1995)
- நார்சிசஸ் வனம் (1996)
- புல்வெளியில் ஒரு கல் (1998)
- விண்ணளவு பூமி (2000)
- விரும்பியதெல்லாம்... (2002)
- விடிந்தும் விடியாப் பொழுது (2003)
- விதையும் கனியுமான பாரம் (2005)
- நீல நிலாவெளி (2005)
- பறவைகள் காலூன்றிநிற்கும் பாறைகள் (2007)
- விண்வரையும் தூரிகைகள் (2007)
- மார்கழி (2008)
- இரவெல்லாம் விழித்திருந்த நிலா (2012)
- மெய்வழிச்சாலை (2012)
- பள்ளத்திலுள்ள வீடு (2013)
- பேர்யாழ் (2014)
- ஹே,மா! (அதிஉச்சம்) (2014)
- கண்விழித்தபோது (2016)
- நுனிக்கொம்பர் நாரைகள் (2016)
- அமுதம் மாத்திரமே வெளிப்பட்டது (2016)
- பக்கத்தில்தான் இருக்கிறது வீடு (2019)
- பற்றி இழுக்கும் ரோஜாவின் முட்கிளை(2020)
- மலர் தேடும் மலர் (2020)
- சித்தார்த்த ராத்திரி (2018)
- ஒளிரும் ஓவிய நிலா (அச்சில்)
- ஆகும் என்றெழுந்த ஆல் (அச்சில்)
- எல்லாம் ஒரு கணம் முன்புதான் (அச்சில்)
- ஆம்பல் குளம் (2018)
- புரியாது கழிந்த பொய்நாட்களெல்லாம்... (2018)
- ஏஞ்சல் (2019)
- அமுதநதி (2019)
- மகாநதி (2019)
- தன்னியல்பின் தாரகை (அச்சில்)
- யாம் பெற்ற இன்பம் (அச்சில்)
- மகாநதியில் மிதக்கும் தோணி (அச்சில்)
- அமுதவெளி (அச்சில்)
- மேகங்கள் நடமாடும் வானம் (அச்சில்)
- காயமும் தழும்பும் (அச்சில்)
- காற்றினிலே வரும் கீதம் (அச்சில்)
- காணுங்கால் (அச்சில்)
- விண்ணளவாய் விரியும் வட்டம் (அச்சில்)
- பார்த்து நட (அச்சில்)
- ஈரம் மட்டுமே எங்கும் உள்ளது (அச்சில்)
- இலைகள் கூடி இசைக்கும் காற்று (அச்சில்)
- உலகடங்கு (காவியம்) (அச்சில்)
- நீர்குடத்தின் அலமறல்கள் (அச்சில்)
- எதுவாகவும் இல்லாதது (அச்சில்)
- அந்தி இருள் (அச்சில்)
- கடவுளின் ராஜ்ஜியம் (அச்சில்)
- பரிதி துடைக்கும் பனித்திரை (அச்சில்)
- வெண்கொக்கும்-ம்பல் மலர்களும் (அச்சில்)
- சூரியகாந்தி வயல் (அச்சில்)
- உதிராத மத்தாப்புகள் கோடி (2021)
- மழைக்காற்றில் ஆடும் மலர்கள்
- நீதியின்மேல் பசிதாகம் உள்ளவர்கள்
- பாடல் விழையும் மோன இசை
- ஒளியில் உயிர்த்த விழிகள்
- தனிப்பெருங்கருணை
- கண்கள்மட்டுமே தொடும்வானம்
- அருட்பெருஞ்சோதி
- பிறிதொரு பசி
- வெயில்மலர்க் குளிர்தல்ம்
- வானப் பெருவெளி
- பார்வை நடத்தும் பாதை
- இந்தக் காற்று வெளியிடையே
- மலரும் நன்மைகள்
- ஒளிகுன்றாது உதிர்ந்த மலர்கள்
- விண்மாடம்
- வேணுவனம்
- மெதுவிஷமும் பற்றி இயலாப் புதுமனிதன்
- நடைமண்டலம்
- காண்பதும் காணாததும்
- இப்போதும் எப்போதும் காணக் கிடைக்காததென்ன
- குழந்தை பார்த்த குறைநிலா
- புறப்பாடு (காவியம்)
- துயர்மலி உலகின் பெருவலி
- நிலவில் உதித்த கார்முகில்
- ஈரத்தரை எங்கும் வானம்
- மறைந்து கிடக்கும் மாங்கனிகள்
- மேஜைத் தடாகத்தில் ஓர் ஒற்றை மலர்
- சுட்டும் விழிச்சுடர்
- இனி ஒரு விதி செய்வோம்
- இனி அசையலாம் எல்லாம்
- நாட்டியப் பேரொளி
முழுத் தொகுப்புகள்
- தேவதேவன் கவிதைகள் முழுத் தொகுப்பு (முதல் 15 நூல்கள், தமிழினி பதிப்பகம்)
- தேவதேவன் கவிதைகள் முழுத் தொகுப்பு 1,2 (தன்னறம் வெளியீடு, 2022)
- தேவதேவன் கவிதைகள் முழுத் தொகுப்பு (முதல் 16 நூல்கள் தொகுப்பாக, வம்சி பதிப்பகம், 2022)
நாடகங்கள்
- அலிபாபாவும் மோர்ஜியானாவும் (பிச்சுமணி கைவல்யம் சொந்த முயற்சியில் பதிப்பித்தது, 1999)
கட்டுரை
- கவிதை பற்றி (காஞ்சனை பிரசுரம்)
உசாத்துணை
வெளி இணைப்புகள்
- தேவதேவன் பேட்டி - தீராநதி
- தேவதேவன் ஆவணப்படம்
- கவிதையின் அரசியல் - ஜெயமோகன்
- தேவதேவனின் வீடு ஒரு குறிப்பு - ஜெயமோகன்
- தேவதேவன் கவிதைகளை ரசிப்பது பற்றி - ஜெயமோகன்
- மார்கழியில் தேவதேவன்
- தேவதேவன் கருத்தரங்கு விளக்கு விருது ஒட்டி
- கலைஞனின் முழுமை - ஜெயமோகன்
- தேவதேவன் கவிதைகள் - கவிதைகள்.இன்
- தேவதேவன் படைப்புலகம் ஆய்வரங்கு திற்பரப்பு
- தேவதேவன் உரை- குமரகுருபரன் விருதுவிழா
- தேவதேவன் பேட்டி
- விஷ்ணுபுரம் விருது விழா தேவதேவன் குறிப்புகள்
- திண்ணை - விஷ்ணுபுரம் விருது தேவதேவன்
- விஷ்ணுபுரம் விருதுவிழா தேவதேவன்
- விஷ்ணுபிரம் விருது 2012 இப்படிக்கு இளங்கோ
- தேவதேவனின் கவிதையுலகம் ஜெயமோகன்
- தேவதேவன் பேட்டி
- தேவதேவன் கவிதைகள்- கவிதைகள் இணையதளம்
- கவிதையின் மதம்- தேவதேவன். அரூ இதழ்
- தேவதேவன் பேட்டி- சங்கர ராமசுப்ரமணியம்
- தேவதேவனின் கவிதை மரபு சுயாந்தன்
- தேவதேவன் நேர்காணல் காணொளி
- தேவதேவன் இணைய உரையாடல்
அடிக்குறிப்புகள்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
18-May-2023, 13:48:32 IST