தெளிவத்தை ஜோசப்
தெளிவத்தை ஜோசப் (பிப்ரவரி 16, 1934 - அக்டோபர் 21, 2022) ஈழத் தமிழ் நவீன எழுத்தாளர்களில் முக்கியமானவர். சிறுகதைகள், குறுநாவல்கள், நாவல்கள் எழுதியவர். இலங்கை மலையகத்தில் இருந்து எழுத வந்த முன்னோடி படைப்பாளிகளுள் ஒருவர். 2014-ம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் இலக்கிய விருதைப் பெற்றவர்.தெளிவத்தை என்னும் தோட்டத்தில் எழுதுவினைஞராக வேலை செய்த காலகட்டத்தில் எழுதத் தொடங்கியதால் இவர் பெயர் தெளிவத்தை ஜோசப் என்றானது.
பிறப்பு, கல்வி
தெளிவத்தை ஜோசப் பிப்ரவரி 16, 1934 அன்று இலங்கை மலையகத்தில் உள்ள பதுளை மாவட்டத்தின் ஹாலி எல்ல இற்கு அருகில் ஊவா கட்டவளை தோட்டத்தில் சந்தனசாமி பிள்ளை, பரிபூரணம் தம்பதியருக்கு இரண்டாவது மகனாகப் பிறந்தார். தெளிவத்தை ஜோசப் உடன் பிறந்தவர்கள் ஐந்து பேர் - அண்ணன் ஞானபிரகாசம், மூன்று தம்பிகள் சந்தனசாமி, சேவியர், பாக்கியசாமி, ஒரு தங்கை அருமைசெல்வி (வடகரை கும்பகோணம்).
தெளிவத்தையின் அப்பா சந்தனசாமி பிள்ளை தமிழகத்தில் திருச்சியிலிருந்து இலங்கை மலையகத்துக்குச் சென்று தோட்டத்து ஆசிரியா் வேலையைப் பொறுப்பேற்று, இரண்டு மூன்று மாதங்களுக்குப்பின் மீண்டும் இந்தியா சென்று பரிபூரணம் அம்மாளைத் திருமணம் செய்து மலையகம் திரும்பினார்.
ஆசிரியரான தந்தையிடம் ஐந்தாம் வகுப்பு வரை படித்த தெளிவத்தை மேலே படிக்க மலையகத்தில் வசதி இல்லாததால் மூன்று ஆண்டுகள் தமிழ்நாட்டில் கும்பகோணம் லிட்டில் பிளவர் உயர்நிலைப் பள்ளியில் நான்காம் வகுப்பில் சேர்ந்து ஆறாம் வகுப்பு வரை படித்தார். இலங்கை அரசாங்கம் பேருந்து வசதிகளைக் கட்டவளை வரை விரிவுபடுத்தியதும் இலங்கை திரும்பினார். அங்கே பதுளையில் உள்ள சென் பீட்டர்ஸ் கல்லூரி பாடசாலையில் மீண்டும் நான்காம் வகுப்பில் இருந்து கல்வியைத் தொடர்ந்தார்.
பின் ஜே.எஸ்.சி எனப்படும் Junior School Certificate தேர்வை பதுளையில் உள்ள அதே கல்லூரியில் படித்தார். அங்கேயே எஸ்.எஸ்.சி எனப்படும் Senior School Certificate தேர்வையும் இரண்டு வருடத்தில் எழுதித் தேறினார்.
தனி வாழ்க்கை
ஆகஸ்ட் 28, 1968 அன்று கொழும்பு கிரேண்பாஸில் வாழ்ந்த மரியசூசை லெக்ரான், திரேசம்மாள் தம்பதியரின் மகள் பிலோமினா ரூபௌவ் என்பவரை காதலித்துத் திருமணம் செய்து கொண்டார். தெளிவத்தை ஜோசபிற்கு திரேசா, தோமஸ் ரமேஸ், திமொதி ரவீந்திரன், தெக்ளா சியாமளா என நான்கு பிள்ளைகள்.
ஜோசப் முதலில் தெளிவத்தை தோட்டத்து ஆசிரியராகவும் (வாத்தியார்) பகுதி நேர எழுதுவினைஞராகவும் (தோட்டத்து காரியாலய கிளாக்கர்) பணியாற்றினார். இதன் காரணமாக இவர் பெயர் தெளிவத்தை ஜோசப் என்றானது. ஸ்டார் கொன்பெக்ஸனரி எனும் பாரிய நிறுவனத்தில் கணக்கராகவும் பின் தனியார் நிறுவனம் ஒன்றில் கணக்கராகவும் வேலை செய்து ஓய்வு பெற்றார்.
இலக்கிய வாழ்க்கை
முதல் காலகட்டம்
1960-ம் ஆண்டு தமிழ்வாணனின் கல்கண்டு (இதழ்) இதழுக்காக ’பால்காரப் பையன்’ என்ற சிறுகதையை எழுதினார். இது தெளிவத்தை எழுதிய முதல் சிறுகதை. ஆனால் அது பிரசுரம் ஆகவில்லை. தமிழகத்தில் ஜி. உமாபதி நடத்திய உமா மாத இதழில் தெளிவத்தையின் முதல் சிறுகதை ’வாழைப்பழத் தோல்’ பிரசுரமாகியது. பின் மோகன் நடத்திய கதம்பம் இதழில் 'மாயை’, 'அழகு’ சிறுகதைகள் பிரசுரமாகின.
ஜோசப் தெளிவத்தையில் வேலையில் இருந்த போது வீரகேசரியில் பிரசுரமான தோட்ட மஞ்சரி பகுதிக்கு ’பெயரோ பெயர்’ என்ற கட்டுரை அனுப்பினார். அக்கட்டுரை பாடசாலை வரவு இடாப்பில்(வருகைப்பதிவேடு) மாணவர்களின் பெயர்களைக் கொச்சைப்படுத்தும், சீரழிக்கும் முறைகேடான சம்பவங்களுக்கு எதிரானது. அதில் அவரது பெயர் தெளிவத்தை ஜோசப் எனப் பிரசுரமானது. அதிலிருந்து தெளிவத்தை ஜோசப் என அறியப்பட்டார்.
தெளிவத்தை ஜோசப் அப்பெயருக்கான காரணத்தை 2013 விஷ்ணுபுரம் விருதுவிழாச் சந்திப்பில் இவ்வாறு சொன்னார். தங்களைத் தோட்டத்திலிருந்து வந்தவர்கள் என்று சொல்லவே அன்றெல்லாம் படித்த மலையகமக்கள் கூச்சப்படுவார்கள். தோட்டக்காட்டான், கள்ளத்தோணி என்று அவர்கள் இழிவுபடுத்தப்பட்ட காலம். ஆகவே ‘நான் தோட்டக்காட்டான், அந்த மக்களைப்பற்றி எழுதுபவன்’ என்று பிரகடனம் செய்யவே அப்படிப் பெயரை வைத்துக்கொண்டதாக தெளிவத்தை சொன்னார். தெளிவத்தை என்பது ஆயிரம் ஏக்கருக்குமேல் பரப்புள்ள ஒரு தோட்டத்தின் பெயர்.
இரண்டாம் காலகட்டம்
தெளிவத்தை ஜோசப் 50-களின் தொடக்கத்தில் இருந்து கதைகள் எழுதி வந்தாலும் 1960 க்குப் பின் தான் இலக்கிய உலகில் அறியப்பட்டார். வீரகேசரியின் தோட்ட மஞ்சரி பகுதியில் தெளிவத்தையின் "படிப்பூ" சிறுகதை பிரசுரமாகியது. தோட்டத்திலுள்ள மக்களின் கல்வியறிவு எந்தளவில் இருக்கின்றது என்பதைப்பற்றிய கதை.
1963-ம் ஆண்டு வீரகேசரி நடத்திய சிறுகதைப் போட்டியில் தெளிவத்தையின் 'பாட்டி சொன்ன கதை’ முதல் பரிசு பெற்றது. அதே ஆண்டு மாலை முரசு நடத்திய சிறுகதைப் போட்டியில் 'நாமிருக்கும் நாடே' சிறுகதை முதல் பரிசு பெற்றது. தொடர்ந்து 1964-ம் ஆண்டு வீரகேசரி நடத்திய சிறுகதைப் போட்டியில் 'பழம் விழுந்தது’ சிறுகதை முதல் பரிசை வென்றது. இந்த மூன்று கதைகளும் இலக்கிய உலகில் தெளிவத்தையின் பெயர் அறியப்படக் காரணமாக அமைந்தன.
1965-ல் வீரகேசரி சிறுகதை போட்டியை நடத்தத் திட்டமிட்டதும், "இம்முறையும் தெளிவத்தை ஜோசப் எழுதுகிறாரா என்ற கேள்விகள் கூட எழுந்தன. அதனால் என்னை நடுவர் குழுவில் அப்போது அதற்கு பொறுப்பாக இருந்த வீரகேசரியின் துணையாசிரியர் திரு.கார்மேகம் அவர்கள் இணைத்து விட்டார்" என்று தெளிவத்தை, தினகரன் நேர்காணல் ஒன்றில் தெரிவித்தார்.
1966-ல் எழுதி கதம்பம் தீபாவளி மலரில் பிரசுரித்த பாலாயி, 1966-ல் கலைமகளில் வெளியான 'ஞாயிறு வந்தது’, 1969-ல் தினகரன் பிரசுரித்த மனம் வெளுக்க ஆகிய குறு நாவல்களை எழுதினார். இந்த மூன்று குறு நாவல்களையும் பாலாயி என்ற குறுநாவலையும் தொகுப்பாக ஜூலை, 1997-ல் துறைவி பதிப்பகம் வெளியிட்டது.
இக்காலக்கட்டத்தில் இரண்டு நாவல்கள் எழுதினார். 1967-ல் இவரின் முதல் நாவல் காதலினால் அல்ல நூலுருப் பெறவில்லை. பின் 1972-ல் எழுதிய காலங்கள் சாவதில்லை நூல் 1974-ல் வெளிவந்தது.
தெளிவத்தை 1972 முதல் 1984 வரை எந்த இலக்கிய ஆக்கமும் எழுதவில்லை.
மூன்றாம் காலக்கட்டம்
தெளிவத்தை ஜோசப் 1984-ல் மீண்டும் தன் எழுத்துப் பணியைத் தொடங்கினார். 1995-ல் எழுதிய குடைநிழல் நாவல் 2010-ல் வெளிவந்தது. இந்நூல் 1996-ல் தேசிய கலை இலக்கிய பேரவை சுபமங்களா ஆகியன இணைந்து நடாத்திய குறு நாவலுக்கான போட்டியில் இரண்டாம் இடத்தை பெற்றது. 1996-ல் எழுதிய "நாங்கள் பாவிகளாக இருக்கிறோம்" நாவல் மல்லியப்பு சந்தி திலகரின் பாக்யா பதிப்பகத்தின் வெளியீடாக 2014-ல் வெளிவந்தது.
தெளிவத்தை ஜோசப் முதல் சிறுகதைத் தொகுப்பான 'நாமிருக்கும் நாடே’ வைகறை வெளியீடாக 1979-ல் வெளிவந்தது. இத்தொகுப்பு 1979-ம் ஆண்டின் இலங்கை அரச சாகித்திய விருது பெற்றது. மலையகத்தில் இருந்து பெற்ற முதல் அரச சாகித்திய விருது இது.
ஆய்வுப் பணி
தெளிவத்தை ஜோசப் புனைவிலக்கியத்தோடு இலக்கிய ஆய்வும் மேற்கொண்டார். இவர் எழுதிய இருபதாம் நூற்றாண்டில் ஈழத்து இதழியல் வரலாறு, மலையக சிறுகதை வரலாறு, மலையக நாவல் வரலாறு ஆகிய மூன்று நூல்களும் இவரின் ஆய்வுப் பணியில் குறிப்பிடத்தக்கவை.இதழியல் துறை சார்ந்த கற்கை நெறிகளுக்கு இந்த இருபதாம் நூற்றாண்டில் ஈழத்து இதழியல் வரலாறு எனும் கட்டுரைத் தொடர் 2001 – 2002 காலப்பகுதியில் தினகரன் வார மஞ்சரியில் தொடர்கட்டுரையாக வெளிவந்தது. மலையக சிறுகதை வரலாறு எனும் நூல் மலையக, மலையகம் பற்றி எழுதிய எழுபத்தாறு எழுத்தாளர்கள் படைப்புக்கள் பற்றிய ஆய்வு.
கவிதை
1965-ல் ஈழக்குமார் தொகுத்து கவிதை நிலையம் வெளியிட்ட 'குறிஞ்சிப்பூ’ என்ற கவித்தொகுப்பு நூலில் "இன்று நீ சுடுவதேனோ" என்ற கவிதையும், வீரகேசரியில் 'கருணை இழந்தோம் நாம்’ என்ற கவிதையினையும் 'ஜோரு’ என்ற புனைபெயரில் எழுதினார். பின் பாலாயி என்ற குறுநாவல் தொகுதியின் சமர்ப்பணத்துக்காகத் தனது தாய் தந்தையைப் பற்றிய கவிதையொன்றினை எழுதினார்.
திரைத்துறைப் பணி
தெளிவத்தை இலங்கையின் புகழ் பெற்ற புதிய காற்று என்ற திரைப்படத்திற்குத் திரைக்கதை வசனம் எழுதினார். ரூபவாஹினியில் ஒளிபரப்பிய பொகவந்தலாவை ராஜபாண்டியன் நடித்த 'காணிக்கை’ என்ற நாடகத் தொடர் இவரது 'புரியவில்லை’ என்ற சிறுகதையின் திரை வடிவம். அதைப் படமாக்க விரும்பியபோது அதற்குத் திரைக்கதை வசனமும் எழுதினார். இவர் திரைக்கதை வசனம் எழுதிய 'ஏன் இந்த உறவு’ என்ற திரைப்படம் காமினி பொன்சேக்கா அவர்கள் நடிக்கவிருந்து படபூஜையுடன் நின்றுவிட்டது.
மறைவு
இரண்டு ஆண்டுகளாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த தெளிவத்தை ஜோசப் தன் கொழும்பு வத்தளை இல்லத்தில் அக்டோபர் 21, 2022 அன்று (88 வயதில்) மறைந்தார்.
விருதுகள்
- தெளிவத்தை ஜோசப் 2013-ம் ஆண்டிற்கான விஷ்ணுபுரம் விருதைப் பெற்றார் (பார்க்க: விஷ்ணுபுரம் இலக்கிய விருது)
- 1979-ல் நாமிருக்கும் நாடே சிறுகதை தொகுப்புக்காக இலங்கை அரசு அரச சாகித்திய விருதைப் பெற்றார்.
- 1991-ல் ஊவா மாகாண இந்து கலாசார அமைச்சு இலக்கிய செம்மல் விருது வழங்கியது.
- 1995-ல் இலங்கை, இந்து கலாசார அலுவல்கள் திணைக்களம் கலாபூஷணம் விருது பெற்றார்.
- 2000-ம் ஆண்டில் தேசிய இன ஒற்றுமைக்கான சாகித்திய கௌரவ விருதினை சிலுமின பத்திரிகை வழங்கியது.
- மலையக சிறுகதை வரலாறு எனும் ஆய்வு நூலுக்காக 2001-ல் அரச சாகித்திய விருதினை வழங்கியது. அதே ஆண்டில் இந்நூலுக்காக சம்பந்தன் விருதைப் பெற்றார்.
- 2003-ல் அட்டன் புதிய பண்பாடு அமைப்பு மலையக சிறுகதை வரலாறுக்காக என்.எஸ்.எம்.இராமையா நினைவுப் பரிசைப் பெற்றார்.
- பேராதனை பல்கலைக் கழகம் 2007-ல் இலக்கிய விருதை வழங்கியது.
- 2008-ல் எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம் இராமகிருஸ்ணா கமலநாயகி தமிழியல் விருதினையும் தமிழியல் வித்தகர் பட்டத்தினையும்
- 2009-ல் மேல் மாகாண கலை,கலாசார அமைச்சு தமிழ் சாகித்திய விருதினையும் 2009 மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சு ஏற்பாடு செய்திருந்த மத்திய மாகாண சபை தமிழ் சாகித்திய விழாவில் சாதனையாளர் விருதினையும் பெற்றார்.
இலக்கிய இடம்
இலங்கை எழுத்து பெரும்பாலும் யாழ்ப்பாணத்தை மையம்கொண்டது. தெளிவத்தை ஜோசப் மலையக மக்களின் வாழ்க்கையை இலங்கை இலக்கிய உலகில் எடுத்துரைக்கும் குரலாக அறியப்பட்டார். தோட்டங்கள் சார்ந்து எழுதப்படும் எழுத்துக்கள் தொழிற்சங்க இயக்கங்களைச் சார்ந்தவையாகவே பெரும்பாலும் இருந்த சூழலில் தெளிவத்தை ஜோசப் தனிமனித அவலங்கள், அகப்போராட்டங்கள் சார்ந்து கதைகளை எழுதினார். பின்னர் ஈழப்போராட்டம் உருவானபோதுகூட பொதுவான அரசியலுணர்வுகளால் அடித்துச்செல்லப்படாமல் தானறிந்த வாழ்க்கையை ஆராய்ந்து உட்சென்று எழுதுவதில் குவிந்திருந்தார். ஆகவே தனித்தன்மையும், கலைசார்ந்த ஒருமையும் கொண்ட படைப்புகளாக தெளிவத்தை ஜோசப்பின் எழுத்துக்கள் திகழ்கின்றன.
நூல்கள்
நாவல்கள்
- காதலினால் அல்ல
- காலங்கள் சாவதில்லை
- குடைநிழல்
- நாங்கள் பாவிகளாக இருக்கிறோம்
குறுநாவல்கள்
- பாலாயி
- ஞாயிறு வந்தது
- மனம் வெளுக்க
சிறுகதைகள்
- பால்காரப்பையன்
- மாயை
- அழகு
- படிப்….பூ
- பாட்டி சொன்ன கதை
- இது 12-வது
- விடுதலை
- ஊன்றுகோல்
- அழகு தெரிந்தது
- போலித்திருப்தி
- நாமிருக்கும் நாடே
- கம்பளித்துண்டு
- நா
- காட்டுப்பூ
- வாழ்வு வந்தால்
- வஞ்சம் கரைந்தது
- சீர்திருத்தம்
- அது
- பாவ சங்கீர்த்தனம்
- தீட்டு ரொட்டி
- பழம் விழுந்தது
- கூனல்
- ஊரான் பிள்ளை
- புல்
- புரியவில்லை
- மனிதர்கள் நல்லவர்கள்
- சோதனை
- லில்லி
- கடைசிவேளை
- பீலி மேலே போகிறது
- பிராயச்சித்தம்
- சிலுவை
- மீன்கள்
- கணக்கு
- வரவுக்கொரு பற்று
- கத்தியின்றி ரத்தமின்றி
- வேறு வழியில்லை
- எக்ஸீமா
- ஒரு தோட்டத்துப் பையன்கள் படம் பார்க்க போகிறார்கள்
- போலிகள்
- மண்ணைத்தின்று
- பயணம்
- ஒரு புதிய உயிர்
- நினைவுகள்
- அவரும் நானும்
- பார்வை
- எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
- பந்து
- பொட்டு
- உயிர்
- அம்மா
- வேலிகள்
- செத்துப் போகும் தெய்வங்கள்
- இன்னுமொரு
- பஸ்ஸிலிருந்து
- நாடகம்
- உயிர்ப்பு
- நரகம்
- இங்கேயும் ஒரு இயேசு
- சுவர்
- மழலை
- இருப்பியல்
- இறுமாப்பு
- சாம்பல்
- மந்திரக்கோல்
- தோல்வி
இலக்கிய ஆய்வு நூல்கள்
- இருபதாம் நூற்றாண்டில் ஈழத்து இதழியல் வரலாறு
- மலையக சிறுகதை வரலாறு
- மலையக நாவல் வரலாறு
வெளி இணைப்புகள்
- வாழ்நாள் சாதனையாளர் தெளிவத்தை ஜோசப்
- படைப்பே முதல். படைப்பாளியே முதல்வன் என்று பேச நமது விமர்சகர்கள் முன்வரவில்லை: தெளிவத்தை ஜோசப் நேர்காணல்
- தமிழ் இந்து - தெளிவத்தை ஜோசப்
- விழா 2013 - விஷ்ணுபுரம் விருது விழா
- கத்தியின்றி இரத்தமின்றி தெளிவத்தை ஜோசப்
- வாழ்வின் யதார்த்தம் சித்தரித்த தெளிவத்தை - நோயல் நடேசன்
- தெளிவத்தை ஜோசப்பின் 88 அகவை
- தெளிவத்தை ஜோசப் குடைநிழல் மதிப்புரை - ஜெயமோகன்.இன்
- தெளிவத்தை ஜோசப் மனிதர்கள் நல்லவர்கள் முருகபூபதி - ஜெயமோகன்.இன்
- தெளிவத்தை ஜோசப்பின் மீன்கள் பாவண்ணன் - ஜெயமோகன்.இன்
- தெளிவத்தை ஜோசப் -முருகானந்தம்
- குடைநிழல் மதிப்புரை லெனின் மதிவானம்
நன்றி: ஜெயமோகன்.இன், அகழ் மின்னிதழ்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
15-Nov-2022, 13:35:29 IST