பூமணி
பூமணி (மே 12, 1947- ஜூலை 12, 2026) சாகித்திய அகாதெமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர். கரிசல் வட்டாரத்து வாழ்க்கையின் நுட்பங்களை அதன் முழுமையோடு தனது எழுத்தில் கலைப்படுத்தியவர். அஞ்ஞாடி நாவலுக்காக 2014-ல் சாகித்ய அகாதெமி விருது பெற்றார். இவரது பெரும்பாலான படைப்புகள் கரிசல் நிலத்தில் வாழும் அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டவை.
பிறப்பு, கல்வி
பூமணி, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை அடுத்த இளையரசனேந்தல் அருகேயுள்ள ஆண்டிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர். இவரது இயற்பெயர் பூ.மாணிக்கவாசகம். பெற்றோர் பூலித்துறை, தேனம்மாள்.
பூமணி, இளையரசனேந்தலில் தன் தொடக்ககால பள்ளிப்படிப்பையும், விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லூரியில் இளநிலை இயற்பியல் பட்டபடிப்பையும் பயின்றார்.
தனிவாழ்க்கை
பூமணியின் மனைவியின் பெயர் செல்லம். இவருக்கு 2 மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். எழுத்தாளர் சோ. தர்மன் இவரின் மருமகன். தமிழ்நாடு அரசு கூட்டுறவு துறையில் முதுநிலை ஆய்வாளராக பணியில் சேர்ந்த இவர், சென்னையில் கூட்டுறவு துறை துணைப் பதிவாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். சென்னையில் 30 வருடம் பணியாற்றி ஓய்வுபெற்றபின் கோவில்பட்டியில் வசித்து வந்தார்.
இலக்கியவாழ்க்கை
இலக்கிய அறிமுகம்
பூமணி கல்வி அறிவும் இலக்கிய அறிவும் பெற்றதற்கு அவர் அம்மாவே முதன்மை காரணம். சிறு வயதில் தன் அம்மாவிடம் கேட்டறிந்த நூற்றுக்கணக்காண மாயமந்திர கதைகள்தான் அவரின் கற்பனையை வளர்த்து இலக்கியத்திற்கு ஆட்படுத்தியிருக்கின்றன. "மழைக்கஞ்சியாக கதைகளைக் கரைத்து ஊட்டிய அம்மாவுக்கு" என சாகித்ய அகாதெமி விருது பெற்ற அங்காடி நாவலை தனது தாய்க்குச் சமர்ப்பணம் செய்திருக்கிறார்.
பூமணியின் இலக்கிய வாழ்க்கையின் இரண்டாவது வழிகாட்டி, கல்லூரியில் அவருக்கு ஆசிரியராக வந்த விமர்சகர் சி. கனகசபாபதி.
பூமணியின் இலக்கிய வாழ்க்கையில் எழுத்தாளர் கி. ராஜநாராயணன் மூன்றாவது பெரிய ஆளுமை. கி. ராஜநாராயணனின் கதைகள் அளித்த கொந்தளிப்பை பலமுறை பலவகைகளில் பூமணி பதிவு செய்திருக்கிறார். கி.ராஜநாராயணனுடன் தொடர் உரையாடலில் இருந்த பூமணி, அவரால் சிறுகதைகள் எழுத ஊக்குவிக்கப்பட்டார்.
தொடக்கம்
1971-ல் பூமணியின் முதல் சிறுகதை 'அறுப்பு' தாமரை இதழில் வெளிவந்தது. அதன் பிறகு தாமரை இதழின் ஆசிரியராக இருந்த தி.க.சிவசங்கரன் பூமணியை தொடர்ந்து எழுத ஊக்குவித்தார்.
சிறுகதைகள்
பூமணி 1966-ம் ஆண்டு முதல் கவிதைகள் சிறுகதைகள் எழுதி வருகிறார். பூமணி எழுதிய மொத்த 51 சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு "அம்பாரம்" பொன்னி பதிப்பகத்தால் 2007-ல் வெளியிடப்பட்டது.
நாவல்கள்
பூமணியின் முதல் நாவலான "பிறகு" 1979-ம் வருடம் வெளியானது. தொடர்ந்து வெக்கை, நைவேத்தியம், வரப்புகள், வாய்க்கால், அங்காடி ஆகிய நாவல்கள் எழுதினார்.
ஆறாவது நாவலான "அஞ்ஞாடி", 2014-ம் ஆண்டு சாகித்ய அகாதெமி விருது பெற்றது. அஞ்ஞாடி நாவல் சுமார் 1100 பக்கங்கள் கொண்டது. 1899-ல் நிகழ்ந்த சிவகாசி கலவரம் மற்றும் தென்மாவட்டங்களில் நிகழ்ந்த பல்வேறு வன்முறை நிகழ்வுகள் குறித்து 150 கிராமங்களில் மேற்கொண்ட கள ஆய்வு மூலம் உருவாக்கப்பட்ட நாவல் இது. ஏழு ஆண்டுகால உழைப்பில் உருவான "அஞ்ஞாடி" நாவல், 2012-ல் கிரியா பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
திரைப்படங்கள்
பூமணி தேசிய திரைப்பட நிறுவனம் (NFDC) நிதியுதவி பெற்று தன் கருவேலம்பூக்கள் என்னும் நீள்கவிதையை அதே தலைப்பில் கருவேலம்பூக்கள் என்னும் திரைப்படமாக எழுதி இயக்கினார். 1997ல் இந்த படம் தொலைக்காட்சியில் வெளிவந்தது.
பூமணியின் நாவலான "வெக்கை" அசுரன் என்ற பெயரில் 2019-ல் வெற்றிமாறன் இயக்கத்தில் தமிழ் திரைப்படமாக வெளிவந்துள்ளது.
பூமணியின் கருவேலம்பூக்கள் 1996-ம் ஆண்டுக்கான சிறந்த தமிழ்ப்படத்துக்கான சிறப்பு விருதை தமிழக அரசிடமிருந்து பெற்றது.
விருதுகள்
- இலக்கியச் சிந்தனை பரிசு
- அக்னி விருது
- திருவனந்தபுரம் தமிழ்ச் சங்க விருது
- விஷ்ணுபுரம் விருது - 2011
- சாகித்திய அகாதெமி விருது - 2014 (அஞ்ஞாடி நாவல்)
விழாக்கள், விமர்சன நூல்
விஷ்ணுபுரம் இலக்கிய விருது 18 டிசம்பர் 2011ல் பூமணிக்கு கோவையில் நிகழ்ந்த விழாவில் வழங்கப்பட்டது. இயக்குநர் பாரதிராஜா தலைமையில் நிகழ்ந்த விழாவில் எஸ். ராமகிருஷ்ணன் யுவன் சந்திரசேகர் வெ. அலெக்ஸ் கன்னடக் கவிஞர் பிரதீபா நந்தகுமார் மற்றும் ஜெயமோகன் கலந்துகொண்டனர்.
பூமணியின் படைப்புலகம் பற்றி ஜெயமோகன் எழுதிய 'பூக்கும் கருவேலம், பூமணியின் புனைவுலகம்' என்னும் நூல் 2011ல் பூமணிக்கு விஷ்ணுபுரம் விருது வழங்கப்பட்டதை ஒட்டி விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் சார்பில் வெளியிடப்பட்டது.
பூமணி சாகித்ய அக்காதமி விருது பெற்றதை ஒட்டி சென்னையில் 11 ஜனவரி 2015 அன்று விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் சார்பில் பாராட்டுவிழா நிகழ்த்தப்பட்டது. சா.கந்தசாமி , யுவன் சந்திரசேகர் ஜெயமோகன் ஆகியோர் கலந்துகொண்டார்கள்.
மறைவு
பூமணி ஜூலை 12, 2026 அன்று இரவு சென்னையில் காலமானார்.
இலக்கிய இடம்
பூமணி தமிழின் யதார்த்தவாத (இயல்பு வாதம்) [naturalist] இலக்கியத்துக்குப் பெருமை சேர்த்த படைப்பாளிகளுள் முக்கியமானவர். அவரது 'பிறகு', 'வெக்கை' ஆகிய இரு நாவல்களும் ' ரீதி ' என்ற சிறுகதைத் தொகுப்பும் அவ்வகையில் முன்னோடியான ஆக்கங்கள். ஓங்கிய பிரச்சாரக் குரலோ, பிரச்சினைகளை எளிமைப் படுத்தும் போக்கோ இல்லாத சமநிலை கொண்ட கலைப் படைப்புகள் அவருடையவை.
பூமணியின் எழுத்து பெரும்பாலும் வறண்ட கரிசல் நிலத்து மண் மற்றும் அதை சார்ந்து வாழும் மக்களை மையம் கொண்டே உருவாக்கப்பட்டது. மண்ணின் காட்சிகள், மண் சார்ந்த தகவல்கள், மண் சார்ந்த படிமங்கள் என ஒவ்வொரு கணத்திலும் மண்ணை நினைவுபடுத்திக்கொண்டே இருக்கும் நடை அவருடையது. பூமணி நில அடிமைகளின் கதையை எழுதவில்லை மாறாக சிறு நில உடைமையாளர்களை, வறட்சியால் அல்லது வேறு காரணங்களால் கூலிவிவசாயத்துக்குச் செல்லும் மக்களையே தன் கதைகளில் காட்டுகிறார். அவரது கதைகளில் நில உடைமையாளாருக்கும் உழைப்பாளர்களுக்குமான நுட்பமான மோதல் மௌனமாக வெளிப்படுகிறது. பூமணியின் புனைவுலகில் அவர் எந்தத் தரப்பின் குரலாகவும் ஒலிப்பதில்லை. எல்லாவற்றையும் ஆழ்ந்த சமநிலையுடன், விருப்பு வெறுப்புக்கு அப்பாற்பட்டு உள்ளது உள்ளபடியே யதார்த்த வாத நடையில் பதிவுசெய்கிறார்.
பூமணியை பற்றி எழுத்தாளர் ஜெயமோகன் "பூமணியின் படைப்பில் புறவுலகம் காண்பதுபோல அப்படியே பதிவாக்கப்படுகிறது. அக ஓட்டங்கள் அப்படியே சொல்லி செல்லப்படுகின்றன. எதுவும் விளக்கப்படுவதோ அல்லது சுருக்கப்படுவதோ இல்லை. நவீன தமிழ் இலக்கியத்தில் இத்தகைய யதார்த்தவாத புனைவெழுத்தின் தமிழ் முன்னோடி பூமணி அவர்களே. பூமணியின் கதைகளில், அவர் காட்டும் உலகில் சாதியின் ஏற்றத்தாழ்வும் சுரண்டலும் உள்ளது, ஆனால் அதை மீறிய மானுட உறவுகளும் அசலாக பதிவாகியுள்ளன. பூமணி சமூக மோதல்களைக்கூட மனித வாழ்க்கைக்குள் கொண்டுவந்து உறவுகளின் சிக்கல்களாக மட்டுமே காட்டுகிறார். அவரது கலையின் சிறப்பம்சமே இதுதான்" என குறிப்பிடுகிறார்.
படைப்புகள்
சிறுகதைத் தொகுப்புகள்
- வயிறுகள்
- ரீதி
- நொறுங்கல்கள்
- நல்லநாள்
- அம்பாரம் (51 சிறுகதைகள் தொகுப்பு)
நாவல்கள்
- வெக்கை
- நைவேத்தியம்
- வரப்புகள்
- வாய்க்கால்
- பிறகு
- அஞ்ஞாடி
- கொம்மை
மொழிபெயர்க்கப்பட்ட படைப்புகள்
வெக்கை நாவல் இந்தியில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது.
திரைப்படங்கள்
- கருவேலம்பூக்கள் (இயக்கம்)
- அசுரன் (கதை)
தேசிய திரைப்பட வளர்ச்சி நிறுவனத்துக்காக இவர் இயக்கிய கருவேலம்பூக்கள் திரைப்படம் பல முக்கிய உலகத் திரைப்பட விழாக்களில் பங்கு பெற்றது.
உசாத்துணை
- பூமணி- எழுத்தறிதல் - jeyamohan.in 27 Dec 2011
- பூமணிக்கு விஷ்ணுபுரம் விருது காணொலி
- பூமணியின் அஞ்ஞாடி நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது - BBC news Tamil 19 Dec 2014
- விருதுக்காக எழுதுவதில்லை: எழுத்தாளர் பூமணி - தினமணி 20 Dec 2014
- புனைவு என்னும் புதிர் : சித்திரமாய்த் தீட்டப்பட்ட கதை - இந்து தமிழ் திசை 08 May 2016
- பூமணியின் பிறகு
- பூமணியைத் தொடர்தல்
- பூமணி மண்ணும் மனிதர்களும்
- பூமணி சாகித்ய அக்காதமி பாராட்டுவிழா, காணொலி
- பூமணி நேர்காணல் காணொலி
- பூமணி சொல்லின் தனிமை
- விஷ்ணுபுரம் விருதுவிழா பூமணி ஏற்புரை
- பூமணியின் படைப்புலகம்
- பூமணி சந்திப்பு. செந்தில்குமார் தேவன்
- விடலையும் குடும்பனும். பூமணியின் அஞ்ஞாடி
- விஷ்ணுபுரம் விருதுவிழா பதிவு
- பூக்கும்கருவேலம் வடகரைவேலன் பதிவு
- பூமணி விழா மதி
- பூமணி விருதுவிழா இப்படிக்கு இளங்கோ
பூம் முதலில் வெளியிடப்பட்ட தேதி: 10-Jan-2023, 06:41:23 IST
✅Finalised Page