under review

ரவிசுப்பிரமணியன்

From Tamil Wiki
ரவிசுப்பிரமணியன்

ரவிசுப்பிரமணியன் (பிறப்பு: 1963) தமிழ்க்கவிஞர், எழுத்தாளர், ஆவணப்பட இயக்குநர், ஊடகவியலாளர் மற்றும் இசைக்கலைஞர். ஜெயகாந்தன், திருலோகசீதாராம், மா. அரங்கநாதன் போன்ற ஆளுமைகளைப் பற்றிய ஆவணப்படங்களை இயக்கியவர். தமிழ்ப் புதுக்கவிதைகளுக்கும் சங்கப்பாடல்களுக்கும் இசையமைத்துப் பாடியவர்.

பிறப்பு, கல்வி

ரவிசுப்பிரமணியன்.jpg

ரவிசுப்பிரமணியன் அக்டோபர் 8, 1963 அன்று தமிழ்நாட்டில் கும்பகோணத்தில் வெ. நடராஜன் - ந. ரமணி இணையருக்கு பிறந்தார். ரவிசுப்பிரமணியனுக்கு ஷண்முகம், சரவணன் என்று இரு தம்பிகளும், ஷண்முகவடிவு, கார்த்திகா என்று இரு தங்கைகளும் உள்ளனர்.

ரவிசுப்பிரமணியனின் தந்தை வன்பொருட்கள் விற்கும் கடை நடத்தி வந்தார். தாத்தா கருப்பையா மூப்பனாரின் மாமா கந்தசாமி மூப்பனாரிடம் கணக்குப்பிள்ளையாக வேலைபார்த்தார். ரவிசுப்பிரமணியன் தன் கலை இலக்கிய ஆர்வம், நல்ல பாடகியும், நாட்டியக்காரருமான வளர்ப்பு அன்னை ஜெயம் அவர்களிடமிருந்து வந்தது என்கிறார்.

ரவி சுப்பிரமணியன்.jpg

ரவிசுப்பிரமணியன் பள்ளிக்கல்வியும் உயர்படிப்பும் கும்பகோணத்திலேயே படித்தார். தொடக்கக் கல்வி சரஸ்வதி பாடசாலையிலும், பின்னர் 12-ம் வகுப்பு வரை கும்பகோணம் நகர மேல்நிலைப்பள்ளியிலும் தமிழை சிறப்புப்பாடமாகக் கொண்டு படித்தார். கும்பகோணம் அரசு ஆடவர் கல்லூரியில் பொருளியல் இளங்கலை (1983) & முதுகலை பட்டங்கள் (1985) பெற்றார்.

தனி வாழ்க்கை

ரவிசுப்பிரமணியன் நவம்பர் 11, 1988 அன்று எஸ்.விஜயலக்ஷ்மியை மணந்தார். இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். மகன் ஆர்.அஷோக் பி.ஏ படித்துள்ளார். மகள் சிண்ரெல்லா பி.எப்.ஏ படித்துள்ளார்.

ரவிசுப்பிரமணியன் எழுத்தாளராகவும் ஆவணப்படம் மற்றும் குறும்பட இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் செயல்படுகிறார்.

அரசியல் ஈடுபாடு

ரவிசுப்பிரமணியன் 1980 முதல் 1983 வரை தி. மு. க உறுப்பினராக இருந்தார். பின் கல்லூரி முடித்ததும் 1988 முதல் 1990 வரை இடதுசாரி அரசியலில் ஈடுபாடு கொண்டிருந்தார். அதன் பின்னர் அரசியல் ஈடுபாடு செயல்பாடுகள் ஏதுமில்லை.

இலக்கிய வாழ்க்கை

ரவி சுப்பிரமணியன்1.jpg

கவிஞராக அறிமுகமான ரவிசுப்பிரமணியனின் முதல் கவிதை 1986ல் சுட்டி இதழில் பிரசுரமானது. முதல் கவிதைத் தொகுதி 1990-ல் வெளிவந்த ஒப்பனை முகங்கள். தன் இலக்கிய ஆக்கத்தில் செல்வாக்கு செலுத்திய முன்னோடிகளாக எம்.வி.வெங்கட்ராம், கரிச்சான் குஞ்சு, சுந்தர ராமசாமி ஆகியோரைக் குறிப்பிடுகிறார்.

ரவிசுப்பிரமணியன் கும்பகோணத்தில் இருந்து சென்னைக்கு வந்து தொலைக்காட்சி ஊடகத்தில் ஈடுபட்டார். நூற்றுக்கும் மேற்பட்ட ஆவணப்படங்களை தொலைக்காட்சி அலைவரிசைகளுக்காக இயக்கியிருக்கிறார். இளையராஜா இசையமைத்து தயாரித்த ஜெயகாந்தன் ஆவணப்படம் அவற்றில் முக்கியமானது. ஜெயகாந்தன், மா.அரங்கநாதன், திருலோக சீதாராம் ஆகியோரைப்பற்றி இவர் இயக்கிய ஆவணப்படங்கள் முதன்மையான கொடைகள்.

ரவி சுப்பிரமணியன்2.jpg

ரவிசுப்பிரமணியன் பல்வேறு இலக்கிய அமைப்புகளுடன் தொடர்பில் இருப்பவர். சாகித்ய அகாதெமியில் ஆலோசனைக் குழு உறுப்பினராக 2003 முதல் 2007 வரை இருந்தார். பாவலர் விருது, சாரல் விருது போன்றவற்றின் ஒருங்கிணைப்பாளராகப் பணியாற்றினார்.-ம்பல் கலை இலக்கிய அறக்கட்டளையை உருவாக்கி அதன் நிர்வாக அறங்காவலராக இருக்கிறார். 65-வது தேசிய திரைப்பட விழாவின் விருதுக்குழுவின் உறுப்பினராகப் பணியாற்றியுள்ளார். தஞ்சை தமிழ்ப்பல்கலையின் மதிப்புறு இலக்கிய ஆளுமையாக, ஆசிரியராக 2020-21 ல் பணியாற்றினார்.

ரவிசுப்பிரமணியன் மரபிசை பயின்றவர். சங்கப்பாடல்கள் தவிர இதுவரை 90க்கும் மேற்பட்ட தமிழ் நவீனக்கவிதைகளுக்கு மெட்டமைத்திருக்கிறார். ஒடிசி நடனநாடகமான 'உடையவர்’ என்ற தலைப்பில் அமைந்த ஒடிசி நடனநாடகத்தை இயக்கினார். சுப்ரிதா திரிலோக் நடித்த இந்த நாடகம் 2017-ல் அரங்கேறியது.

ஊடகப்பணிகள்

  • இயக்குனரும், படத்தொகுப்பாளருமான பி. லெனினிடம் ஐந்து ஆண்டுகள் உதவி இயக்குனர் பணி.
  • நிகழ்ச்சி தயாரிப்பாளர் - விஜய் டிவி, ஜெயா டிவி
  • சென்னை ஆன்லைன், ஆறாம்திணை இணைய இதழ்களின் ஊடக ஒருங்கிணைப்பாளர்
  • தூர்தர்சன் மற்றும் சன் டிவியின் சுதந்திரதின நிகழ்ச்சி தயாரிப்பாளர்
  • சி.ஜெ.பாஸ்கர் இயக்கிய பெண் திரைத்தொடரின் பாடலாசிரியர், வசனகர்த்தா.
  • அனல் காற்று படத்தின் பாடலாசிரியர்
  • 1986 முதல் பி கிரேட் நாடக நடிகர் ஆல் இந்தியா ரேடியோ
  • தாமரை என்னும் குறும்பட இயக்குநர்

விருதுகள்

  • 1992 - தமிழக அரசு விருது
  • 1996 - திருப்பூர் தமிழ்ச்சங்க விருது
  • 2004 - நியூஜெர்ஸி தமிழ்ச்சங்க விருது
  • 2015 - சிற்பி இலக்கிய விருது
  • 2017 - தி. க. சி இயற்றமிழ் விருது
  • 2018 - மா. அரங்கநாதன் இலக்கிய விருது
  • 2018 - தமிழ் வித்தகர் விருது
  • 2018 - தஞ்சை பிரகாஷ் கவிதை விருது
  • 2019 - ஆனந்தாஸ் எம்.பி கலை இலக்கிய விருது
  • 2021 - இலக்கியப்பேராளுமை விருது
  • 2023 - எஸ்.ஆர்.எம். பல்கலை கழகத்தின் பாரதியார் கவிதை விருது

நூல்கள்

கவிதைகள்
  • ஒப்பனை முகங்கள் - 1990 (அன்னம் பதிப்பகம்)
  • காத்திருப்பு - 1995 (அன்னம் பதிப்பகம்)
  • காலாதீத இடைவெளியில் - 2000 (மதி நிலையம்)
  • சீம்பாலில் அருந்திய நஞ்சு - 2006 (சந்தியா பதிப்பகம்)
  • விதானத்துச் சித்திரம் - 2017 (போதிவனம்)
  • நினைவின் ஆழியில் அலையும் கயல்கள் - 2020 (போதிவனம்)
கட்டுரைகள்
  • ஆளுமைகள் தருணங்கள் - 2014 (காலச்சுவடு)
  • எம்.வி. வெங்கட்ராம் இந்திய இலக்கிய சிற்பிகள் வரிசை, சாகித்ய அகாடமி, ஜனவரி 2023
தொகுப்புகள்
  • வண்ணதாசன் கடிதங்கள் (கோவை வைகறை நஞ்சப்பன் வெளியீடு) - 1997
  • பாலகுமாரனின் தேர்ந்தெடுத்த கதைகள் (அம்ருதா பதிப்பகம்) - 2011
  • எம்.வி.வெங்கட்ராம் கதைகள் (காலச்சுவடு) - 2021
  • ஜானகிராமன் படைப்புலகம் (தொகுப்பு: உமா சங்கரி, ரவிசுப்பிரமணியன்), தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் வெளியீடு - 2023
மொழியாக்கம்
  • That was a Different Season (Selected Poems) English Translation Poems (Authors Press Publication) - 2018

ஆவணப்படங்கள்

  • இந்திரா பார்த்தசாரதி - "இந்திரா பார்த்தசாரதி எனும் நவீன நாடகக் கலைஞன்"[1]
  • மா. அரங்கநாதன் - "மா. அரங்கநாதனும் கொஞ்சம் கவிதைகளும்"[2]
  • ஜெயகாந்தன் - "எல்லைகளை விஸ்தரித்த எழுத்துக் கலைஞன்"[3]
  • சேக்கிழார் அடிப்பொடி தி. ந. இராமச்சந்திரன் - "சைவத் தமிழ் வளர்க்கும் சேக்கிழார் அடிப்பொடி தி. ந. இராமச்சந்திரன்"[4]
  • திருலோக சீதாராம் - "திருலோகம் என்றொரு கவி ஆளுமை"[5]
  • பாலசந்தர் ஆவணப்படம்

உசாத்துணை

அடிக்குறிப்புகள்


✅Finalised Page