under review

எம்.வி. வெங்கட்ராம்

From Tamil Wiki
MVV.png
தஞ்சை பிரகாஷ், எம்.வி.வி, தேனுகா (நன்றி கனலி)
எம்விவி சாகித்ய அக்காதமி

எம்.வி.வெங்கட்ராம் (மே 18, 1920 - ஜனவரி 14, 2000) தமிழ் நாவலாசிரியர், சிறுகதை எழுத்தாளர். மணிக்கொடி இலக்கியக்குழுவின் இளைய உறுப்பினர். காதுகள் நாவலுக்காக 1993-ல் சாகித்ய அகாதெமி விருது பெற்றார்.

பிறப்பு, கல்வி

MVV1.png

எம்.வி. வெங்கட்ராம் மே 18, 1920 அன்று கும்பகோணம் நகரத்தில் சௌராஷ்டிரக் குடும்பத்தில் ’ரெங்கா’ வீரய்யர், சீதையம்மாள் தம்பதியருக்கு மூன்றாவது குழந்தையாகப் பிறந்தார். உடன்பிறந்தவர்கள் நால்வர். தந்தை ரெங்கா வீரய்யர் குடும்பத் தொழிலான நெசவுத் தொழில் செய்தார். எம்.வி. வெங்கட்ராம் தன் ஐந்து வயதில் தாய் மாமனான மைசூர் வெங்கடாசலம், சரஸ்வதி தம்பதியருக்கு தத்துக் கொடுக்கப்பட்டார். எம்.வி. வெங்கட்ராம் தன் வளர்ப்பு தந்தை பெயரையும் சேர்த்து தன் முழு பெயரை மைசூர். வெங்கடாசலம். வெங்கட்ராம் (எம்.வி.வி) என்றே குறிப்பிடுவார்.

MVV2.png

எம்.வி. வெங்கட்ராம் ஆரம்பக் கல்விக்கு பின் கும்பகோணம் நகர உயர்நிலைப் பள்ளியில் ஆங்கில வழியில் பயின்றார். கல்லூரி இண்டர்மீடியட் படிப்பை கும்பகோணம் அரசு கல்லூரியில் தொடர்ந்தார். கல்லூரி நாட்களில் ஹிந்தி விஷாரத் தேர்வுக்காக பி.எம். கிருஷ்ணசாமியிடம் தனியாக ஹிந்தி கற்றார். பி.ஏ படிக்கும் போது விஷாரத் தேர்வும் எழுதித் தேர்ச்சி பெற்றார்.

எம்.வி.வி யின் இலக்கிய ஈடுபாட்டால் அவரது இண்டர்மீடியட் கல்வி ஓராண்டு தடைப்பட்டது. மறு ஆண்டு மீண்டும் தேர்வெழுதி தேர்ச்சி பெற்றார். பின் குடந்தைக் கலைக் கல்லூரியில் பி.ஏ. பொருளியல் பயின்றார். எழுத்தாளர் தி. ஜானகிராமன் எம்.வி.வி. யின் கல்லூரித் தோழர்.

தனி வாழ்க்கை

MVV4.png

1941-ம் ஆண்டு எம்.வி. வெங்கட்ராம் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது தந்தையின் தொழிலில் நஷ்டம் ஏற்படதால் கும்பகோணம் சிறிய மலர் உயர்நிலைப் பள்ளியில் ஓராண்டு காலம் பட்டதாரி ஆசிரியராகப் பணியாற்றினார். 1942-ம் ஆண்டு பூனா இராணுவ அலுவலகத்தில் கணக்குப் பிரிவில் (Military Accounts Section) எழுத்தராகப் பணியில் சேர்ந்து, இரண்டாண்டு காலம் பணியாற்றினார். 1944-ம் ஆண்டு மீண்டும் ஊர் திரும்பினார்.

எம்.வி. வெங்கட்ராம் ருக்மணி அம்மாளை 1939-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். எம்.வி.வி, ருக்மணி அம்மாள் தம்பதியருக்கு நான்கு ஆண், மூன்று பெண் என மொத்தம் ஏழு குழந்தைகள்.

இலக்கிய வாழ்க்கை

மனைவியுடன் எம்.வி.வி

பி.எம். கிருஷ்ணசாமி மணிக்கொடி இதழில் ஹிந்தி சிறுகதைகளை தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டு வந்தார். எம்.வி.வி க்கு பி.எம். கிருஷ்ணசாமி மூலம் கிடைத்த மணிக்கொடி இதழ்களால் தமிழ் இலக்கியத்தில் பரிச்சயம் ஏற்பட்டது.

சிறுகதைகள்

எம்.வி. வெங்கட்ராமின் முதல் சிறுகதையான சிட்டுக்குருவி மணிக்கொடி இதழில் அவரது பதினாறு வயதில் வெளிவந்தது. தொடர்ந்து பி.எஸ். ராமையா பதிப்பாசிரியராக இருந்த மணிக்கொடியில் முப்பதற்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதினார். மணிக்கொடி இதழ் மூலம் எழுத்தாளர் கு.ப. ராஜகோபாலன், ந. பிச்சமூர்த்தி, பி.எஸ். ராமையா, மௌனி போன்ற முன்னோடி எழுத்தாளர்களுடன் தொடர்பு ஏற்பட்டது. கலாமோகினி, காதல், கலாவல்லி, கணையாழி, உமா, சக்தி, முல்லை, கிராம ஊழியன், சுதேசமித்திரன், சிவாஜி, சந்திரோதயம், சௌராஷ்ட்ரா மணி போன்ற சிற்றிதழ்களில் தொடர்ந்து எழுதினார்.

நாவல்கள்

எம்.வி.வெங்கட்ராம் 1967-ம் ஆண்டு லட்சுமி கிருஷ்ணமூர்த்தி நடத்திய இலக்கிய வட்டம் என்ற அமைப்பிற்காக சௌராஷ்ட்ர சமூகத்தைப் பின்புலமாகக் கொண்டு வேள்வித்தீ என்ற நாவலை எழுதினார். தமிழில் பிறபகுதி மக்களின் குடியேற்றம் பற்றி எழுதப்பட்ட முதல் நூல் இது. நித்ய கன்னி மகாபாரதத்தில் வரும் ஒரு புதிரான கிளைக்கதையை ஒட்டி விரித்து நவீன காலத்திற்கேற்ப எழுதப்பட்ட மறுவாசிப்பு நாவல். தமிழில் இதிகாசத்தை மறுபுனைவு செய்து எழுதப்பட்ட முதல்நாவல்

தி. ஜானகிராமனின் தொடர் வற்புறுத்தலால் அரும்பு நாவலை சுதேசமித்திரனில் தொடர்கதையாக எழுதினார். எம்.வி.வி. தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால் தொடர்ந்து நலிவடைந்தார். அந்நாட்களில் அவர் காதுகளில் ஒரு விசித்திர ஒலி கேட்கத் தொடங்கியது. அவருக்கு மட்டும் கேட்கும் ஒலியில் ஆபாசமான சொற்கள் கேட்டன. எம்.வி.வி. அந்த அனுபவத்தை மையமாகக் கொண்டு காதுகள் நாவலை எழுதினார். உளவியல் மாயநிலைகளைப் பற்றிய நாவல் அது.

வாழ்க்கை வரலாறுகள்

எம்.வி.வெங்கட்ராம் பழனியப்பா பிரதர்ஸ் நிறுவனத்திற்காக ’நாட்டுக்கு உழைத்த நல்லவர்’ எனும் வரிசையில் தேசியத்தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றை அறுபது நூல்களாக எழுதினார். இவை பள்ளிமாணவர்களுக்குரிய நூல்கள். பல பதிப்புகள் கண்டவை. வறுமையின்போது எழுத்தையே தொழிலாகக் கொண்டிருந்தகாலத்தில் அவர் இவற்றை எழுதினார்

மொழியாக்கங்கள், தழுவல்கள்

எம்.வி.வெங்கட்ராம் எழுதியே வாழ்ந்த காலகட்டத்தில் ஆங்கிலம் வழியாக பரபரப்பு நாவல்களை தழுவியும் மொழியாக்கம் செய்தும் பல நூல்களை எழுதியிருக்கிறார். அவை பதிப்பகத்தாரின் தேவைக்காக எழுதப்பட்டவை. பெரும்பாலானவை மறுபதிப்பு வரவில்லை

நினைவுப்பதிவுகள்

எம்.வி.வெங்கட்ராம் மணிக்கொடி குழுவினரில் எஞ்சியிருந்த இளைய எழுத்தாளர். மணிக்கொடி எழுத்தாளர்களைப் பற்றிய அவருடைய என் இலக்கிய நண்பர்கள் நூல் முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது

இதழியல்

மகன் திருமணத்தில்..

1944-ம் ஆண்டு புனாவிலிருந்து கும்பகோணம் திரும்பிய எம்.வி.வி யை எழுத்தாளர் கு.ப. ராஜகோபாலன் கிராம ஊழியன் இதழில் வேலை செய்யும் படி பணிந்தார். 1948 வரை எம்.வி.வி கிராம ஊழியனில் பணியாற்றினார். 1948-ல் கு.ப.ராவின் மறைவிற்கு பின் எம்.வி.வி தன் நண்பர்கள் கரிச்சான் குஞ்சு, தி. ஜானகிராமனுடன் இணைந்து கொண்டு தேனீ’ மாத இதழைத் தொடங்கினார். தேனீ இதழ் ஜனவரி 1948 முதல் ஜனவரி 1949 வரை ஓராண்டு காலம் வெளிவந்தது. அதன் பின் வியாபாரத்தில் ஏற்பட்ட நஷ்டத்தாலும், தேனீ இதழில் ஏற்பட்ட நஷ்டத்தாலும் இதழ் முடிவுக்கு வந்தது.

பேச்சாளர்

எம்.வி.வி. திருச்சி வானொலியிலும், சென்னை வானொலியிலும் உரையாற்றியுள்ளார். 1981-ம் ஆண்டு மயிலாடுதுறை தெய்வத் தமிழ் மன்றம் என்ற அமைப்பில் சிறுகதை நூற்றாண்டு விழாவில் சிறுகதையின் நவீன போக்கு குறித்து எம்.வி.வி ஆற்றிய உரை விவாதத்தை ஏற்படுத்தியது. தஞ்சை, கும்பகோணம் பகுதிகளில் நிகழ்ந்த ’இலக்கிய சந்திப்பு’, ‘சும்மா இலக்கிய கும்பல்’ மற்றும் நூலகங்களில் தொடர்ந்து உரையாற்றினார்.

அரசியல் வாழ்க்கை

MVV8.png

எம்.வி.வி யின் தொழில் நலிவடைந்திருந்த காலங்களில் சௌராஷ்டிர சமூக சங்கத்தில் தலைவராகப் பணியாற்றினார். எம்.வி.வி பட்டுக் கூட்டுறவு சங்கத்தின் இயக்குனர் பதவியில் இருந்த போது ஏற்பட்ட முறைகேடுகளால் சங்கம் மூடப்பட்டது. இது எம்.வி.வி க்கு மேலும் உளச்சிக்கலை ஏற்படுத்தியது. இதில் கூட்டுச்சதி, கையாடல் போன்ற வழக்குகளில் எம்.வி.வி யின் மீது குற்றப்பதிவு செய்யப்பட்டது. அவ்வழக்கில் நீதிமன்றத்தில் வாதாடி வென்றார்.

பின் காங்கிரஸ் கட்சியில் இணைந்து கவுன்சிலர் போட்டிக்கு நின்று தோல்வியடைந்தார்.

இலக்கிய இடம்

ரவி சுப்பிரமணியனுடன் எம்.வி.வி

“தமிழின் நவீன இலக்கியம் மறுமலர்ச்சி கொண்ட காலம் ந. பிச்சமூர்த்தி, கு.ப.ரா, மௌனி போன்றவர்கள் இயங்கிய காலம். அந்தக் காலத்தில் அவர்களை விட இளையவரான எம்.வி.வி. அவர்களோடு பழகி, இயங்கி தன் எழுத்தின் மூலம் இலக்கிய ஆளுமையாகத் தன்னை நிறுவுகிறார்.” என ரவிசுப்பிரமணியன் தன் இந்திய இலக்கியச் சிற்பிகள் -எம்.வி. வெங்கட்ராம் நூலில் குறிப்பிடுகிறார்.

எம்.வி.வெங்கட்ராம் மணிக்கொடி காலத்தில் எழுதவந்தாலும் இளமையில் வறுமையாலும் எழுத்தை தொழிலாகக் கொண்டமையாலும் நீண்டகாலம் இலக்கியப் பணிகளில் இருந்து விலகி நின்றார். சௌராஷ்டிரக் குடியேற்றம் பற்றிய வேள்வித்தீ, மகாபாரத மறு ஆக்கமான நித்யகன்னி ஆகியவை அந்தந்த வகைமைகளில் முன்னோடி முயற்சிகள். காதுகள் இந்திய ஆழ்மனம் கொள்ளும் சிதைவும் ஆன்மிகமான கண்டடைதலும் வெளிப்படும் நாவலாகக் கருதப்படுகிறது.

மறைவு

எம்.வி. வெங்கட்ராம் ஜனவரி 14, 2000 அன்று தனது 81 -ஆவயதில் கும்பகோணம் தோப்புத் தெருவில் உள்ள தன் வீட்டில் காலமானார்.

விருதுகள்

  • சாகித்திய அகாதெமி விருது (காதுகள், 1993)
  • தமிழக அரசு விருது (எம்.வி. வெங்கட்ராம் கதைகள்)
  • சித்த சூரி ரத்ன விருது
  • லில்லி தேவசிகாமணி விருது
  • சாந்தோம் விருது
  • புதுமைப்பித்தன் சாதனை விருது

வாழ்க்கை வரலாறுகள்

MVV3.png
  • இந்திய இலக்கியச் சிற்பிகள்- எம்.வி. வெங்கட்ராம் (ரவிசுப்பிரமணியன், ஜனவரி 2023)
  • ஜெயமோகன் எழுதிய அறம் சிறுகதைத் தொகுப்பின் தலைப்புக் கதையான அறம் எம்.வி. வெங்கட்ராமின் வாழ்க்கையை ஒட்டிய புனைவு.

ஆய்வு நூல்கள்

  • எம்.வி.வி.யின் அரும்பு ஓர் ஆய்வு எம். மாசிலாமணி (1980, எம்.ஃபில் பட்டத்திற்கான ஆய்வு)
  • எம்.வி.வெங்கட்ராம் நாவல்கள் ஓர் ஆய்வு சொ.இரா. கிருஷ்ணமாச்சாரியார் (1982, எம்.ஃபில் பட்ட ஆய்வு)
  • எம்.வி.வெங்கடராம் ஒரு அறிமுகம் தமிழாசிரியர் க.பெ. செந்தில் (1987)’
  • எம்.வி.வெங்கட்ராம் நாவல்களில் பாத்திரப் படைப்புத்திறன் ஓர் ஆய்வு ச. மணி (1995)
  • எம்.வி.வெங்கட்ராம் புதினங்களில் பன்முகம் : முனைவர் சு. ஜெயசீலா
  • எம்.வி.வெங்கட்ராம் வாசகப்பார்வை. ராணி திலக்

நூல்கள்

எம்.வி.வி.சாகித்ய அக்காதமி நூல்
சிறுகதைத் தொகுதிகள்
  • வரவும் செலவும், மல்லிகைப் பதிப்பகம், சென்னை, முதல் பதிப்பு: ஜூலை 1964
  • குயிலி, ஸ்ரீமகள் நிலையம், சென்னை, முதல் பதிப்பு: நவம்பர் 1964
  • மாளிகை வாசம், கலைஞன் பதிப்பகம், சென்னை, முதல் பதிப்பு: நவம்பர் 1964
  • மோகினி, குயிலன் பதிப்பகம், சென்னை, முதல் பதிப்பு: நவம்பர் 1964
  • உறங்காத கண்கள், கலைஞன் பதிப்பகம், சென்னை, முதல் பதிப்பு: நவம்பர் 1964
  • வியாசர் படைத்த பெண்மணிகள், தமிழ்ப் புத்தகாலயம், சென்னை, முதல் பதிப்பு: 1968
  • அகலிகை முதலிய அழகிகள், வானதி பதிப்பகம், சென்னை, முதல் பதிப்பு: அக்டோபர் 1993
  • இனி புதிதாய், சிலிக்குயில் வெளியீடு, முதல் பதிப்பு: அக்டோபர் 1991
  • நானும் உன்னோடு, வானதி பதிப்பகம், சென்னை, முதல் பதிப்பு: செப்டம்பர் 1993
  • எம்.வி.வி கதைகள் (தொகுப்பாசிரியர்: பாவை சந்திரன்), கண்மணி வெளியீடு, சென்னை, முதல் பதிப்பு: டிசம்பர் 1998
  • முத்துகள் பத்து, அம்ருதா பதிப்பகம், சென்னை, 2007
  • பனிமுடி மீது ஒரு கண்ணகி, காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில், 2007
  • ம்.வி. வெங்கட்ராம் சிறுகதைகள் முழுத் தொகுப்பு, காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில், 2021
நாவல்கள்
  • நித்ய கன்னி (1946)
  • உயிரின் யாத்திரை (1956)
  • இருட்டு (1956)
  • அரும்பு (1965)
  • வேள்வித் தீ (1967)
  • ஒரு பெண் போராடுகிறாள் (1976)
  • காதுகள் (1992)
  • மீ காய் கெரு (அச்சில், 2022)
கட்டுரைகள்
  • என் இலக்கிய நண்பர்கள்
  • நாட்டுக்கு உழைத்த நல்லவர் வரிசை

உசாத்துணை

வெளி இணைப்புகள்



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 02-Feb-2023, 06:31:46 IST