under review

லட்சுமி கிருஷ்ணமூர்த்தி

From Tamil Wiki
லட்சுமி கிருஷ்ணமூர்த்தி

லட்சுமி கிருஷ்ணமூர்த்தி (ஆகஸ்ட் 1, 1925 - ஜூன் 12, 2009) (லக்ஷ்மி கிருஷ்ணமூர்த்தி) தமிழின் முதல் பெண் பதிப்பாளர். எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர். விடுதலைப் போராட்டத்தில் பங்கு கொண்டவர். அரசியல்வாதி. காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தியின் மகள். சமூக, இலக்கியப் பணிகளில் தீவிரமாக ஈடுபடுத்திக் கொண்டவர். இவர் உருவாக்கிய வாசகர் வட்டம் என்ற அமைப்பும் அதன் செயல்பாடுகளும் தமிழ் இலக்கிய வரலாற்றில் முக்கியமான பங்களிப்பு.

பிறப்பு, கல்வி

விடுதலைப் போராட்ட வீரரும், காங்கிரஸ் தலைவருமான சத்தியமூர்த்திக்கு ஜூலை 1925-ல் லட்சுமி மகளாகப் பிறந்தார். வீணை வாசிப்பு, குதிரையேற்றம், ஓவியம், இசை என பல துறைகளில் பங்கேற்றார். தமிழ், ஆங்கிலம், ஹிந்தி நூல்களைக் கற்றார்.

தனிவாழ்க்கை

கேரளாவைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தியை மணம் முடித்துக் கொண்டார். பெண்களுக்கான இலவச மருத்துவமனையை தன் இல்லத்தில் நடத்தினார்.

அரசியல் வாழ்க்கை

தமிழ்நாட்டில் 1964, 1970 ஆண்டுகளில் நடைபெற்ற பேரவைத் தேர்தல்களில் போட்டியிட்டு சட்டப் பேரவை உறுப்பினரானார். 1975-ல் அவசரநிலை பிறப்பிக்கப்பட்டபோது காங்கிரஸ் கட்சியில் இருந்தாலும் அதை எதிர்த்துப் போராடினார். பின்னர் காங்கிரசில் இருந்து வெளியேறி 1977-ல் ஜனதா கட்சி சார்பில் சென்னை மயிலாப்பூர் சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார். அதிலிருந்து அரசியலிலிருந்து முற்றாக ஒதுங்கி தீவிர சமூக மற்றும் இலக்கியப் பணிகளில் ஈடுபட்டார்.

இலக்கிய வாழ்க்கை

கல்கி, சுதேசமித்திரன், ஹிந்து என பல இதழ்களில் கதை, கட்டுரைகள் எழுதினார். இவர் எழுதிய ’ஐந்தாவது சுதந்திரம்' என்ற கட்டுரைத் தொகுப்பு தமிழக பதிப்புத்துறை முன்னோடிகளில் ஒருவரான 'சக்தி' வை.கோவிந்தனால் வெளியிடப்பட்டது. லட்சுமி கிருஷ்ணமூர்த்தி சத்தியமூர்த்தியின் கடிதங்களை At the threshold of life என்னும் தலைப்பில் நூலாக்கினார். லட்சுமியின் கணவரான கிருஷ்ணமூர்த்தியும் மலையாளத்தில் இருந்து ஆங்கிலத்துக்கு கே.எம். பணிக்கரின் நூல்களை மொழிபெயர்த்தார்.

வாசகர் சந்திப்புகள்

தன் இல்லத்தில் எழுத்தாளர்களை வரவழைத்து வாசகர்-எழுத்தாளர் சந்திப்புக்களை நடத்தினார். 'புக் கிளப்' என்ற கருத்தாக்கத்தை தமிழில் நனவாக்கியவர் லட்சுமி கிருஷ்ணமூர்த்தி. ஒவ்வொரு புத்தகம் வெளிவந்ததும் "வாசகர் செய்தி" என்கிற செய்திக் கடிதத்தை வெளியிட்டு அதில் புதிதாக வெளிவந்திருக்கும் புத்தகங்கள், வெளிவர இருக்கும் புத்தகங்கள் பற்றிய தகவல்களை அளித்தார். பின்னாளில், நூலகங்களுக்காக கவிஞர் குயிலன் நடத்திய "நூலகம்" இதழை வாசகர் வட்டம் மூலமாகவே நடத்தினார்.

அமைப்புப் பணிகள்

பொருளாதார நெருக்கடியால் பதிப்புத்துறையிலிருந்து விலகிய லட்சுமி கிருஷ்ணமூர்த்தி, தொடர்ந்து சமூகப் பணிகளில் அக்கறை காட்டினார்.

1987-ல் சத்தியமூர்த்தி ஆய்வு மையம் (Satyamurti Centre for Democratic Studies) என்னும் அமைப்பை தொடங்கினார்.

பதிப்பகப் பணி

லட்சுமி கிருஷ்ணமூர்த்தி - ராஜாஜி

1964-1965 காலகட்டத்தில் "வாசகர் வட்டம்" என்ற இலக்கிய அமைப்பை உருவாக்கி அதன் மூலம் நல்ல புத்தகங்களை வெளியிட்டார். அதற்காக 'புக்வெஞ்சர் பப்ளிகேஷன்ஸ்' என்ற பதிப்பகத்தை தன் கணவருடன் இணைந்து உருவாக்கினார். தரமான புத்தக உருவாக்கம், வித்தியாசமான புத்தக முயற்சிகள், வாசகர்களுக்கான மலிவு விலை, எழுத்தாளர்களுக்கான உரிய வெகுமதி என பதிப்பகத்துறையை முறையாக நடத்தினார். ஆரம்பத்திலேயே தனிப்பட்ட சந்தாதாரர்களைச் சேர்த்து, வருடத்திற்கு 25/- ரூபாய் கொடுப்பவர்களுக்கு பதிப்பக வெளியீடுகள் சலுகை விலையில் வழங்கப்பட்டன.

வாசகர் வட்டம் வெளியிட்ட முதல் நூல் ராஜாஜி எழுதிய 'சோக்ரதர்'. 'ஆத்ம சிந்தனை' 1965-ல் வெளியானது. தரமான தாள், நேர்த்தியான அச்சு, உயர்தர பைண்டிங் முறை, தனித்துவமான முகப்போவியம், வடிவமைப்பு என எல்லாவற்றிலும் வாசகர் வட்ட நூல்கள் தனித்த முன்மாதிரியாக விளங்கின. முதல் நூலில் ஓவியர் 'கலாசாகரம்' ராஜகோபாலின் கோட்டோவியம் அட்டையில் இடம்பெற்றது . பின்னர் ஓர் அடையாளமாக அதுவே வாசகர் வட்ட வெளியீடுகள் அனைத்திற்கும் பயன்படுத்தப்பட்டது.

லட்சுமி தொடர்ந்து புது நூல்களை வெளியிட்டார். பத்திரிகைகளில் தொடராக வெளிவந்த நாவல்களை நூலாக வெளியிடுவதைத் தவிர்த்தார். சிறந்த எழுத்தாளர்களின் சிறந்த படைப்புகளைத் தேடியெடுத்து வெளியிட்டார். தி. ஜானகிராமனின் 'அம்மா வந்தாள்', எம்.வி. வெங்கட்ராமின் 'வேள்வித் தீ, ஆ. மாதவனின் 'புனலும் மணலும்', நீல பத்மநாபனின் 'பள்ளிகொண்டபுரம்', லா.ச. ராவின் 'அபிதா' போன்ற நூல்கள் வாசகர் வட்டத்திற்கென்றே எழுதப்பட்டன. திறமை வாய்ந்த எழுத்தாளர்களை அடையாளம் கண்டு அவர்களது முதல் படைப்பு வெளியாகவும் லட்சுமி உதவியாக இருந்தார். அவ்வாறு அடையாளம் காணப்பட்ட படைப்புகளில் நரசய்யாவின் 'கடலோடி', சா.கந்தசாமியின் 'சாயாவனம்', மாதவனின் 'புனலும் மணலும்', ந. பிச்சமூர்த்தியின் முதல் கவிதைத் தொகுதியான 'குயிலின் சுருதி' ஆகியவை அடங்கும்.

'நடந்தாய் வாழி காவேரி' என்னும் கட்டுரை நூல் வாசகர் வட்டத்தின் முக்கியமான வெளியீடு. காவிரி ஆற்றின் கதையோடு சமூக வாழ்க்கையும் கலந்து சொல்லப்பட்ட அந்தப் படைப்பு தி. ஜானகிராமன், சிட்டி இருவரும் இணைந்து எழுதி 1971-ல் வெளியானது. காவிரி தோன்றுமிடம் தொடங்கி அது கடலில் கலக்கும் இடம்வரை உள்ள இடங்களைப்பற்றி மிக விரிவாகச் சொல்கிறது இந்நூல். எழுத்தாளர் ஜானகிராமன், ஓவியர் கலாசாகரம் ராஜகோபால் ஆகியோர் அந்தந்த இடங்களுக்கே நேரில் சென்று தங்கள் அனுபவங்களைத் தீட்டினர். ஒவ்வொரு படத்துக்கும் தனித்தனியாக 'பிளாக்' செய்து மிகுந்த பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட அது ஓர் சமூக, வரலாற்று ஆவணம்.

இலக்கியம் தவிர தொழில்நுட்பம், விஞ்ஞானம், மானுடவியல், வரலாறு எனப் பல்துறை சார்ந்த நூல்கள் வாசகர் வட்டம் மூலம் வெளியாகின. 'அக்கரை இலக்கியம்' என்ற தலைப்பில் இலங்கை, மலேசியத் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளைத் தொகுத்து வாசகர் வட்டம் வெளியிட்ட தொகுப்பு நூல் முக்கியமான பதிவு. சுஜாதா கணினித் துறை பற்றி எழுதிய 'காசளவில் ஓர் உலகம்' என்ற நூல்தான் வாசகர் வட்டம் வெளியிட்ட கடைசி நூல்.

வாசகர் வட்டம் 45 நூல்களை வெளியிட்டது. காலம் செல்லச் செல்ல சந்தாதாரர்கள் குறைந்து கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதால் பதிப்பு நிறுத்தப்பட்டது. தமிழின் ஆரம்பகட்ட எழுத்தாளர்களில் ஒருவரான வை.மு.கோதைநாயகி அம்மாள் கூட தன்னுடைய புத்தகங்களை தானே பதிப்பித்து பதிப்புத்துறையில் செயல்பட்டார். ஆனால் லட்சுமி கிருஷ்ணமூர்த்தி பிறரது நூல்களை பதிப்பித்து வெளியிட்டதால் முதல் பெண் பதிப்பாளராக நினைவுகூறப்படுகிறார்.

மொழிபெயர்ப்பு நூல்கள்

லட்சுமி கிருஷ்ணமூர்த்தி மொழிபெயர்ப்பு நூல்களையும் வாசகர் வட்டத்தின் மூலம் வெளியிட்டார். அந்த வரிசையில் லெஸ்டர் ப்ரஷன் ஆங்கிலத்திலே எழுதிய அறிவியல் நூல் தமிழில் 'அறிவின் அறுவடை' என்று வெளியானது. கே.ஏ. நீலகண்ட சாஸ்திரியின் 'தமிழர் பண்பாடும் வரலாறும்' சிட்டியின் மொழிபெயர்ப்பில் வெளியானது. 'எல்வின் கண்ட பழங்குடிகள்' எனும் நூல் மனித இன வரைவியல் நூல்.

மறைவு

லட்சுமி கிருஷ்ணமூர்த்தி தன் 83-ம் வயதில் ஜூன் 12, 2009-ல் காலமானார்.

இலக்கிய இடம்

தமிழில் சர்வதேசத் தரத்துடன் நூல்களை வெளியிட்ட பதிப்பகம் என்ற மதிப்பு வாசகர் வட்டம் பதிப்பகத்திற்கு உண்டு. சிற்றிதழ் சார்ந்த இலக்கிய நூல்கள் தரமான பதிப்பகங்கள் இன்றி கவனிக்கப்படாமலிருந்த சூழலில் அவற்றுக்கு நல்ல பதிப்புகள் கொண்டு வந்து ஒரு தொடக்கத்தை இந்த நிறுவனம் உருவாக்கியது.

வாசகர் வட்டம்: கடலோடி (நன்றி தென்றல் இதழ்)

வெளியிட்ட நூல்கள்

  • சி. ராஜகோபாலாச்சாரியார் - சோக்ரதர்
  • சி. ராஜகோபாலாச்சாரியார் - ஆத்ம சிந்தனை
  • தி. ஜானகிராமன் - அம்மா வந்தாள்
  • எம்.வி. வெங்கட்ராமன் - வேள்வித் தீ
  • ஆ. மாதவன் - புனலும் மணலும்
  • நீல பத்மநாபன் - பள்ளிகொண்டபுரம்
  • லா.ச.ரா - அபிதா
  • லா.ச.ராவின் - புத்ர நாவல்
  • கிருத்திகா - நேற்றிருந்தோம்
  • நா.பார்த்தசாரதி - ஆத்மாவின் ராகங்கள்
  • கி.ரா. - கோபல்ல கிராமம்
  • க.சுப்பிரமணியன் - வேரும் விழுதும்
  • ஆர்.சண்முகசுந்தரம் - மாயத்தாகம்
  • நாசய்யா - கடலோடி
  • சா.கந்தசாமி - சாயாவனம்
  • ஆ. மாதவன் - புனலும் மணலும்
  • சுஜாதா - காசளவில் ஓர் உலகம்
  • தி.ஜ.ரங்கநாதன் - தமிழில் உரைநடை
  • திரிவேணி - பூனைக்கண்
  • ந. சிதம்பர சுப்பிரமணியம் - மண்ணில் தெரியுது வானம்
  • டாக்டர் நாகசாமி - யாவரும் கேளிர்
  • மோஹன் ராகேஷ் - அரையும் குறையும்
  • ஆலுவாலி - மன்னும் இமயமலை
  • விஸ்வநாத சாஸ்திரி - அற்பஜீவி
  • பி.ஜி.எல்.சாமி - போதையின் பாதையில்
  • டாக்டர் எஸ். இராதாகிருஷ்ணன் - இந்துமத நோக்கு
  • மே.சு.இராமசுவாமி - இந்திய ஓவியம்
  • கிரா & சார்வாகன் - குறுநாவல் தொகுப்பு
  • ந.பிச்சமூர்த்தியின் - குயிலின் சுருதி (முதல் கவிதைத்தொகுதி)
மொழிபெயர்ப்பு நூல்கள்
  • அறிவின் அறுவடை
  • தமிழர் பண்பாடும் வரலாறும்
  • எட்வின் கண்ட பழங்குடிகள்

எழுதிய நூல்கள்

  • ஐந்தாவது சுதந்திரம்
  • At the threshold of life- The Satyamurti Letters

உசாத்துணை


✅Finalised Page