சிவாஜி (இதழ்)
'சிவாஜி’ 1935 முதல் திருச்சியில் இருந்து வெளிவந்த இலக்கியச் சிற்றிதழ். இதன் ஆசிரியர் திருலோக சீதாராம். 'சிவாஜி’ இதழ் 1968 வரை வார இதழாகவும், 1969 முதல் 1973 வரை மாத இதழாகவும் வெளி வந்தது. திருலோக சீதாராமின் மறைவிற்குப் பின்னர் சேக்கிழார் அடிப்பொடி டி. என். ராமச்சந்திரன் இதன் ஆசிரியராக இருந்தார். இந்த இதழ் 1980 வரை வெளிவந்தது.
பதிப்பு, வெளியீடு
’சிவாஜி’ என்ற இதழை திருச்சியைச் சேர்ந்த சிவஞானம் பிள்ளை என்பவர் 1935-ல் தொடங்கி நடத்தி வந்தார். அதன் ஆசிரியராக திருலோக சீதாராம் பொறுப்பேற்றார். அவர் ஆசிரியராகப் பொறுப்பேற்றதும் இதழின் உள்ளடக்கம் மாறியது. அரசியலுக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்த இதழை இலக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் இதழாக மாற்றினார் திருலோக சீதாராம். அ.வெ.ரா. கிருஷ்ணசாமி ரெட்டியார் இவ்விதழின் இணை ஆசிரியராகப் பணி புரிந்தார்.
சிவாஜி இதழின் விலை 1 அணா. ஆரம்பகாலத்தில் சிவாஜி நியூஸ் பிரிண்டர்ஸ் மூலம் இவ்விதழ் அச்சிடப்பட்டு வெளிவந்தது. இதழின் உரிமையாளர் பெயராக தி சிவாஜி லிமிடெட் (The Shivaji Ltd) என்ற பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. திருச்சி தெப்பக்குளத்தில் இருந்து இந்த இதழ் செயல்பட்டு வந்தது. ஆரம்பத்தில் நாளிதழ் வடிவில் 16 பக்கங்களில் இதழ் வெளியானது. பின்னர் மாத இதழான போது பக்கங்களின் எண்ணிக்கை அதிகரித்தது. இதழின் விலையும் கூடுதலானது. இதழின் ஆண்டையும் மாத எண்ணிக்கையையும் குறிக்க கோட்டை; முற்றுகை என்ற வார்த்தைகளை ஆரம்ப காலக்கட்டத்தில் பயன்டுத்தியுள்ளனர்.
உள்ளடக்கம்
சிவாஜி ஆரம்பத்தில் அரசியல் இதழாக செய்தித்தாள் வடிவில் வெளிவந்தது. திருலோக சீதாராம் பொறுப்பேற்றதும் இதழை இலக்கியத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இதழாக மாற்றினார். 1939-ல், திருலோக சீதாராமே இதழின் உரிமையாளராக ஆனார்.
சிவாஜி என்ற இதழின் பெயர் மற்றும் வாளேந்திய வீர சிவாஜியின் ஓவியம் இதழின் இலச்சினையாக இடம் பெற்றது. 'சிவாஜி’ என்ற இதழின் தலைப்பின் கீழ்,
’ஊன்றிய கொள்கையும் ஒன்றே கணந்தொறும்
தோன்றும் கடமைகள் ஆற்றுதல் நன்றே" - என்ற வாசகம் இடம் பெற்றது. தலையங்கப் பகுதிகள் ஆரம்ப காலத்தில் வெளிவந்துள்ளன.அதில் அரசியல், சமூகச் சூழ்நிலைகள் பற்றிய கருத்துக்கள் வெளியாகியுள்ளன. பாரதியின் 'அமுத வாக்கு' இதழ் தோறும் இடம் பெற்றுள்ளது. சிறார் கதைகளும் இடம் பெற்றுள்ளன. திருலோக சீதாராம் எழுதி வந்த பிதா மகரின் கடிதங்கள் பலராலும் வரவேற்கப்பட்டது. இதழின் பக்கங்களில் ஆங்காங்கே விளம்பரங்கள் வெளியாகியுள்ளன. 'திருச்சி பஜார் விளம்பரங்கள்’ என்ற தலைப்பில் தனியாக திருச்சிப் பகுதியின் கடை விளம்பரங்கள் வெளியாகியுள்ளன. கு.ப.ரா., கரிச்சான் குஞ்சு, தி. ஜானகிராமன், எம்.வி. வெங்கட்ராம், அரங்க சீனிவாசன் போன்றோரை அவ்விதழில் எழுத வைத்தார் திருலோக சீதாராம். இளம் எழுத்தாளர்கள், கவிஞர்களின் கதை, கட்டுரைகளை 'சிவாஜி’யில் வெளியிட்டு ஊக்குவித்தார். குடியரசு மலர், தீபாவளி மலர், பொங்கல் மலர், ஆண்டு மலர் என அவ்வப்போது சிறப்பிதழ்களை வெளியிட்டு வந்தது சிவாஜி.
இரு மொழி இதழ்
சிவாஜி இதழ் சில காலத்திற்குப் பின் தமிழ் - ஆங்கிலம் என இரு மொழி இதழாகவும் சில காலம் வெளிவந்தது. திருலோகசீதாராமின் படைப்புகள், ஷேக்ஸ்பியர், மில்டன் என்று பல படைப்புகளை அதற்காக ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் அதன் ஆசிரியர் குழுவில் ஒருவராக இருந்த டி.என்.ராமச்சந்திரன் (சேக்கிழார் அடிப்பொடி). அவரும் ஏ.எஸ்.ராகவன், சேஷாத்ரி உள்ளிட்டோரும் சிவாஜியின் ஆசிரியர் குழுவில் அங்கம் வகித்தனர்.
சிவாஜி இதழில் வெளியான மொழிபெயர்ப்புகளில் குறிப்பிடத்தகுந்தது 'கந்தருவ கானம்.’ திருலோக சீதாராமின் தமிழ்க் கவிதைகளை டி. என். ராமச்சந்திரன் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். தமிழில் ஒருபுறமும் ஆங்கிலத்தில் மறுபுறமுமாக அது வெளியானது. அதுபோல அதன் உரைநடைப்பகுதிகளை பேராசிரியர் சேஷாத்ரி மொழிபெயர்த்தார்.
சிவாஜி’ இதழ் 1968 வரை வார இதழாகவும், 1969 முதல் 1973 வரை மாத இதழாகவும் வெளி வந்தது. 1973-ல் திருலோக சீதாராம் மறைந்தாலும் 1980 வரை டி.என். ராமச்சந்திரனின் ஆசிரியத்துவத்தில் சிவாஜி இதழ் வெளிவந்தது. இதழின் பதிப்பாசிரியராக திருலோக சீதாராமின் மனைவி ராஜாமணி இருந்தார். ’கவிஞன் அச்சகம்’ மூலம் சிவாஜி வெளியிடப்பட்டது.
பங்களிப்புகள்
- கரிச்சான் குஞ்சு தொடர்ந்து கதை, கவிதை, கட்டுரை, நாடகம் போன்றவற்றை எழுதி ஓர் எழுத்தாளராகப் புகழ்பெற்றது 'சிவாஜி’ இதழ் மூலம்தான்.
- 'சுஜாதா’வின் முதல் சிறுகதையான 'எழுத்தில் ஹிம்சை’ சிவாஜி இதழில் தான் வெளியானது.
- சுதந்திரப் போராளியாக இருந்து, பின் மைசூரில் துறவியாக வாழ்ந்த நீலகண்ட பிரம்மச்சாரியை நேரில் சந்தித்து உரையாடி அவரது வாழ்க்கையைத் தொடராக 'சிவாஜி’ இதழில் தான் எழுதினார் ரா. அ. பத்மநாபன்.
- எழுத்தாளர் பி. ஏ. கிருஷ்ணனின் தந்தையான பக்ஷிராஜனின் 'ஜெயதேவர் அஷ்டபதி’யின் தமிழாக்கம் 'சிவாஜி’ இதழில் தான் தொடராக வெளியானது.
- பாரதியின் பல அரிய படைப்புகள், டி.என். ராமச்சந்திரனால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு 'சிவாஜி’ இதழில் வெளியானது.
பங்களிப்பாளர்கள்
- கு.ப. ராஜகோபாலன்
- கரிச்சான்குஞ்சு
- ந. பிச்சமூர்த்தி
- தி. ஜானகிராமன்
- எம்.வி. வெங்கட்ராம்
- ரா. அ. பத்மநாபன்
- பி. எஸ். ராமையா
- அ.ச. ஞானசம்பந்தன்
- ஏ. எஸ். ராகவன்
- எம். எஸ். கமலா
- கஜமுகன்
- சிட்டி
- பக்ஷிராஜன்
- நையாண்டி பாரதி (வல்லிக்கண்ணன்)
- திருச்சி பாரதன்
- கிருத்திகா
- சாமி. பழனியப்பன்
- கொடுமுடி ராஜகோபாலன்
- கோவை அய்யாமுத்து
- வி.ஜி. சீனிவாசன்
- ஸ்வாமிநாத ஆத்ரேயன்
- ம. ந. ராமசாமி
- டி.என். சுகி சுப்பிரமணியன்
- ரகுநாதன்
- ப. தனுஷ்கோடி
- டாக்டர் சாலை இளந்திரையன்
- ஏ.ஆர். ராஜாமணி
- வல்லிக்கண்ணன்
- ஏ.வி. சுப்பிரமணிய அய்யர்
- நாராயணையங்கார்
- என். எஸ். சிதம்பரம்
- அரங்க சீனிவாசன்
- பரலி சு. நெல்லையப்பர்
- அ. வேதாசலம்
- கே. என். ராமானுஜம்
- கி.ரா. கோபாலன்
- என். ஆர். ராஜாமணி
- அ.சீனிவாசராகவன்
- சபரி
- என். ரங்கசாமி
- ஆர். கே. பார்த்தசாரதி
- ஸோனா
- ராஜம் கிருஷ்ணசாமி
- துறைவன்
- ஏ. எஸ். ரங்கநாதாச்சாரியார்
வரலாற்று இடம்
தமிழ் இலக்கியப் பரப்பில் விடுதலைக்கு முன்னர் தொடங்கப்பட்டு, நாட்டின் விடுதலைக்குப் பின்னரும் பல ஆண்டுகள் வெளிவந்த இலக்கியச் சிற்றிதழ் 'சிவாஜி’. மணிக்கொடி இதழை மையமாகக் கொண்டு தொடங்கிய தமிழ் நவீன இலக்கிய அலை மணிக்கொடி இதழின் மறைவுக்குப் பின்னர் சிவாஜி இதழில் நீடித்தது. தமிழ் நவீன இலக்கியம், மரபிலக்கியம் இரண்டுக்கும் இணையான பங்களிப்பை ஆற்றிய இதழ் என சிவாஜி மதிப்பிடப்படுகிறது.
உசாத்துணை
- திருலோக சீதாராம்: தென்றல் இதழ் கட்டுரை
- டி.என். ராமச்சந்திரன்: தென்றல் இதழ் நேர்காணல்
- திருலோக சீதாராம் ஆவணப்படம்: ரவி சுப்பிரமணியன்
- பசுபதிவுகள்
- கவிஞர் திருலோக சீதாராம்: விகடன் கட்டுரை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
14-Mar-2023, 19:18:10 IST