under review

ம.ந.ராமசாமி

From Tamil Wiki
ம.ந.ராமசாமி

ம.ந.ராமசாமி (மே 15, 1927) தமிழ் எழுத்தாளர். கல்கி, கணையாழி முதலான இதழ்களில் சிறுகதைகளும் இலக்கியவிமர்சனக் குறிப்புகளும் எழுதியவர். ஆங்கிலத்தில் இருந்து இலக்கிய மொழியாக்கங்களும் செய்திருக்கிறார்.

பிறப்பு, கல்வி

ம.ந.ராமசாமி மே 15, 1927-ல் மானாமதுரையில் பிறந்தார். மானாமதுரையில் ஆரம்பப்பள்ளிக் கல்வி. தாராபுரத்தில் பட்டப்படிப்பை முடித்தார்.

தனிவாழ்க்கை

ம.ந.ராமசாமி ராயல் இந்தியன் நேவி, சிவில் ஜி.பி.டி. கம்பெனி, கூட்டுறவுப் பண்டகசாலை ஆகியவற்றில் ஊழியராக பணியாற்றினார். மின் உற்பத்தி நிலைய உதவியாளர், நில அளவுப் பதிவேட்டுத் துறை தலைமைக் கணக்காளர், திருச்சி காவேரி இஞ்சினீரிங் இன்டஸ்ட்ரீசில் உதவி மேலாளர் எனப் பல பணிகள் ஆற்றியிருக்கிறார்.

இலக்கிய வாழ்க்கை

ம.ந.ராமசாமியின் முதல்கதை 'தியாகி யார்?’ 1947-ல் நவயுவன் என்னும் இதழில் வெளியாகியது. தொடர்ந்து கல்கி , கலைமகள், சிவாஜி, செம்மலர் முதலிய இதழ்களில் சிறுகதைகளை எழுதினார். வாழத்துடிப்பவர்கள் முதல் சிறுகதைத் தொகுதி. இவர் எழுதிய யன்மே மாதா என்னும் சிறுகதை விவாதங்களை உருவாக்கியது. அதில் தந்தைக்கு சிரார்த்தம் செய்யும் மகன் அதிலுள்ள ’யன்மே மாதா பிரலுலோபசரதி’ என்னும் மந்திரம் (என் தாய் மாறானவழியில் என்னைப் பெற்றிருந்தாலும்) தன் தாயை அவமதிப்பது என்றும், தன் தாய் தன்னை குழந்தைப்பருவம் முதல் பேணிவளர்த்தவள் என்றும், பெண்ணைப்பழிக்கும் அந்த மந்திரத்தைச் சொல்லமுடியாது என்றும் கூச்சலிட்டு புரோகிதர்களை அனுப்பி வைக்கிறான். மனிதன் காட்டுமிராண்டியாக இருந்த காலத்தில் எழுதப்பட்ட மந்திரங்கள் நவீன கால மனிதனுக்கு எதற்கு என்கிறான். ம.ந.ராமசாமியின் படைப்புகளில் பரவலாக அறியப்பட்டது இது ஒன்றே. ம.ந.ராமசாமி திருவாழத்தான் என்ற பெயரிலும் எழுதியிருக்கிறார்.

விருதுகள்

 • யுகமாயினி அமரர் நகுலன் நினைவுப்பரிசு (சதுரங்கப்பட்டணம்)
 • நல்லி திசையெட்டும் மொழிபெயர்ப்பு விருது (அடிமையின் மீட்சி)

இலக்கிய இடம்

ம.ந.ராமசாமியின் படைப்புகள் மையமான ஒரு சீர்திருத்தக் கருத்தை ஒட்டிக் கட்டமைக்கப்பட்ட கதையமைப்பு கொண்டவை. அந்தச் சீர்திருத்தக் கருத்து சற்று இடதுசாரிச்சாய்வு கொண்டதாகவும், பொதுவான பார்வையில் தோன்றும் எண்ணமாகவும் இருக்கும். சீண்டும்தன்மை கொண்ட கதைகளை எழுதியிருந்தாலும் யன்மே மாதா மட்டுமே வாசகர்களிடம் அவ்வகை எதிர்வினையைப் பெற்றது. சமூகசீர்திருத்தக் கருத்துக்களைக் கதையாக்கிய காலகட்டத்தைச் சேர்ந்தவர்.

நூல்கள்

சிறுகதை
 • வாழத்துடிப்பவர்கள்
 • அன்னம்மா
 • ரத்திக்கல்குவியல்
 • பாகிஸ்தானிலிருந்து
 • குலக்கொடி
நாவல்கள்
 • சிரிப்பின் நிழல்
 • நாதலயம்
 • நாலாவான்
 • மந்திரபுஷ்பம்
 • தூணிலும் இல்லை துரும்பிலும் இல்லை
 • சதுரங்கப்பட்டணம்
 • கனவுபூமி
குறுநாவல்கள்
 • மாதே ஸ்வதந்திரதேசம்
 • அறுபத்தொன்பது விழுக்காடு
 • ஓவியங்கள் நிறைந்த அறை
 • ஜீவாத்மா
சிறுவர் இலக்கியம்
 • பயம் என்னும்பேய்
கட்டுரைகள்
 • பாரதி பாடாத கவிதை
மொழியாக்கம்
 • அடிமையின் மீட்சி (புக்கர் வாஷிங்டன்)
 • மகாபுல்வெளி (ஆண்டன் க்காவ்)
 • மழைத்தாரை (சாமர்செட் மாம்)
 • முத்து (ஜான் ஸ்டீன்பெக்)
 • கீதம் (அயன் ராண்ட்)
 • மாற்றான் தோட்டம் (மொழியாக்கச் சிறுகதைகள்)

உசாத்துணை✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Nov-2022, 13:36:37 IST