ஆர். எஸ். வெங்கட்ராமன்
ஆர்.எஸ். வெங்கட்ராமன் (கஜமுகன்) (ஏப்ரல் 14, 1923 – பிப்ரவரி 04, 2025) எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர். அகில இந்திய வானொலியில் மொழிபெயர்ப்பாளராகவும், அறிவிப்பாளராகவும், செய்தி வாசிப்பாளராகவும் பணியாற்றினார்.
பிறப்பு, கல்வி
ஆர். எஸ். வெங்கட்ராமன், ஏப்ரல் 14, 1923 அன்று, மன்னார்குடிக்கு அருகிலுள்ள ராதாநரசிம்மபுரம் என்ற கிராமத்தில், சாம்பசிவ ஐயர் – கல்யாணி அம்மாள் இணையருக்குப் பிறந்தார். பள்ளி இறுதி வகுப்பு வரை படித்தார்.
தனி வாழ்க்கை
ஆர்.எஸ். வெங்கட்ராமன், மணமானவர். மனைவி, ஜெயலட்சுமி. இவர்களுக்கு பாக்யம், மனோரமா, பார்கவி என மூன்று மகள்கள்.
வானொலி
ஆர்.எஸ். வெங்கட்ராமன், 1945-ல், டெல்லியில் உள்ள ஆகாஷ்வாணியில் (அகில இந்திய வானொலி) தென்கிழாக்காசிய ஒலிபரப்புப் பிரிவில் அறிவிப்பாளராகப் பணியில் சேர்ந்தார். பின்னர் புதிதாகத் தொடங்கப்பட்ட தமிழ் செய்திப் பிரிவில் மொழிபெயர்ப்பாளராகவும், செய்தி வாசிப்பாளராகவும் பணியாற்றினார். இந்தியா சுதந்திரம் அடைந்த மறுநாள், ஆகஸ்ட் 16, 1947 அன்று, அதிகாலை 5.45 மணிக்கு தென்கிழக்கு ஆசிய ஒலிபரப்பில், பாரதத்தின் சுதந்திரம் பற்றிய செய்தியை அறிவித்தவர்.
வானொலியில் 20 ஆண்டுகள் செய்தித் துறைக்குத் தலைமை தாங்கி வழிநடத்தினார். இந்தியாவின் விடுதலை, குடியரசு தினம், இந்தியாவின் சீன, பாகிஸ்தான் போர்கள், பங்களாதேஷ் விடுதலை, எமர்ஜென்ஸி நாட்கள், இலங்கைக் கலவரங்கள் போன்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தருணங்களில், செய்திகளை கவனமாக மொழிபெயர்த்து அளிக்கும் பொறுப்பில் இருந்தார்.
ஓய்வு பெற்ற பிறகும், 86 வயது வரை தற்காலிக அடிப்படையில் செய்திப் பிரிவில் பணியாற்றினார்.
இலக்கிய வாழ்க்கை
ஆர்.எஸ். வெங்கட்ராமன், ஆனந்த விகடனில் 1944-ல் வெளிவந்த ’ஒரே ஒரு ரோஜா’ என்ற சிறுகதையால் ஈர்க்கப்பட்டார். தொடர் வாசிப்பால் இலக்கிய ஆர்வம் பெற்றார். ‘கஜமுகன்’ என்ற புனைபெயரில் இதழ்களில் சிறுகதைகளை எழுதினார். சுதேசமித்திரன், பாரதமணி, சக்தி, கலைமகள், கல்கி, சிவாஜி, பாரிஜாதம் போன்ற பல இதழ்களில் கஜமுகனின் சிறுகதைகள் வெளியாகின. கதைக்கோவை தொகுதி-4-லும் கஜமுகனின் சிறுகதை இடம்பெற்றது.
பொறுப்பு
டெல்லி தமிழ்ச் சங்கத்தின் செயலாளர் மற்றும் துணைத்தலைவர்.
விருதுகள்/பரிசு
ஆர்.எஸ். வெங்கட்ராமன் என்னும் கஜமுகன் எழுதிய பல்வேறு சிறுகதைகள் பரிசுபெற்றன. ’பாரிஜாதம்’ இதழில் வெளியான ’மல்லிகை மணம்’ என்ற சிறுகதை, சிறந்த கதைக்கான பரிசைப் பெற்றது.
மறைவு
ஆர்.எஸ். வெங்கட்ராமன் என்னும் கஜமுகன், பிப்ரவரி 04, 2025 அன்று, தனது 102-ம் வயதில், சென்னையில் காலமானார்.
மதிப்பீடு
ஆர்.எஸ். வெங்கட்ராமன் (கஜமுகன்), மத்திய தர மக்களின் வாழ்க்கையையும், கிராமத்துப் பின்னணியைக் கொண்ட சிறுகதைகளை எழுதினார். வானொலி, தொலைக்காட்சி போன்ற ஊடகங்களில் பணிபுரிந்துகொண்டே இலக்கியத்துக்கும் பங்களித்த எழுத்தாளர்களில் ஒருவராகவும், கி. ராமச்சந்திரன், மாயாவி, ரஸவாதி போன்ற எழுத்தாளர்களின் வரிசையில் ஒருவராகவும் மதிப்பிடப்படுகிறார்.
உசாத்துணை
- ஹிந்து இதழ் அஞ்சலிக் கட்டுரை
- மைலாப்பூர் டைம்ஸ் இதழ் அஞ்சலிக் கட்டுரை
- அமுதசுரபி இதழ் அஞ்சலிக் கட்டுரை, பி. குருமூர்த்தி, மார்ச், 2025 இதழ்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 16-Mar-2025, 09:44:16 IST