அரங்க. சீனிவாசன்
- சீனிவாசன் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: சீனிவாசன் (பெயர் பட்டியல்)
அரங்க. சீனிவாசன் (அருட்கவி அரங்க. சீனிவாசன்; டாக்டர் அரங்க. சீனிவாசன்: செப்டம்பர் 29,1920- ஜூலை 31,1996) கவிஞர், எழுத்தாளர், பேராசிரியர். காந்தியப் பற்றாளர். ‘மனித தெய்வம் காந்தி காதை,’ ‘வங்கத்துப் பரணி’ போன்ற பல நூல்களை எழுதியவர். சென்னிக்குளம் அண்ணாமலை ரெட்டியாரின் ஒளிப்படத்தை முதன் முதலில் கண்டறிந்து வெளிப்படுத்தினார். அண்ணாமலை ரெட்டியாரின் வாழ்க்கை வரலாற்றை முதன் முதலில் எழுதி வெளியிட்டார்.
பிறப்பு, கல்வி
அரங்க. சீனிவாசன், பர்மாவின் பெகு மாவட்டத்திலுள்ள சுவண்டி என்ற ஊரில், செப்டம்பர் 29, 1920 அன்று, அரங்கசாமி நாயுடு-மங்கம்மாள் தம்பதியினருக்கு பிறந்தார். அவர்களது சொந்த ஊர் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கோவிலூர் என்ற சிற்றூர். பிழைப்புக்காகக் குடும்பம் பர்மா சென்றது. அரங்க. சீனிவாசனின் தொடக்கக் கல்வி பர்மாவில் கழிந்தது. தாய் மங்கம்மாள் சுபாஷ் சந்திரபோஸின் இந்திய தேசியப்படையில் பணியாற்றியவர். 1942-ல் இரண்டாம் உலகப் போர் மூண்டதால், அரங்க. சீனிவாசன் தனது குடும்பத்தினருடன் புறப்பட்டு, நடந்தே இந்தியா வந்து சேர்ந்தார்.
தமிழகம் வந்ததும் சொந்த ஊருக்குச் சென்று வசித்தார். மாம்பழக் கவிராயரின் தலைமை மாணாக்கரான பழனி பக்கிரிசாமிப் பிள்ளை என்ற பரிபூரணானந்த சுவாமிகளிடம் தமிழ் இலக்கண, இலக்கியங்களைக் கற்றுக் கொண்டார். திண்டுக்கல் ‘தோப்புச்சாமிகள்’ என்னும் பி.எஸ்.இராமானுசதாசரிடம் வைணவ இலக்கியங்களைக் கற்றுத் தேர்ந்தார். தமிழ், சம்ஸ்கிருதம், மலையாளம், இந்தி, வங்காளம், ஆங்கிலம் உட்பட பதினான்கு மொழிகளை அறிந்திருந்தார்.
தனி வாழ்க்கை
அரங்க. சீனிவாசன், வறுமைச் சூழலால் விவசாயப் பணிகள், அச்சகப் பணி, அஞ்சல்துறையில் தற்காலிகப் பணி எனப் பல பணிகளை மேற்கொண்டார். பாப்பம்மாளுடன் திருமணம் நிகழ்ந்தது. இவர்களுக்கு விஜயலட்சுமி, திருவேங்கடம், மணிமேகலை, ராணி என நான்கு மகள்கள். சில வருடங்கள் கல்கத்தாவில் பாரதி தமிழ்ச்சங்க உறுப்பினராகவும், தமிழ் எழுத்தாளர் சங்க நிறுவனராகவும் பணிபுரிந்தார். கல்கத்தா பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பட்டப்படிப்பு மாணாக்கர்களுக்குப் பாடம் நடத்தினார்.
தொடர்ந்து அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில், தமிழ், சம்ஸ்கிருத, பிற இந்திய மொழிகள் ஆராய்ச்சி நிறுவனத்தின் தமிழ்ப் பிரிவில் ஆராய்ச்சி முனைவராகப் பணியாற்றினார். சென்னை இரத்தினவேல் சுப்பிரமணியம் செந்தமிழ்க் கல்லூரியில் சிறப்புப் பேராசிரியராகப் பணி புரிந்தார்.
இலக்கிய வாழ்க்கை
அரங்க சீனிவாசனின் தொடக்ககாலக் கவிதைகள் ‘சுதேசபரிபாலினி’, ‘பர்மா நாடு’, ‘பால பர்மர்’, ‘சுதந்திரன்’, ‘ஊழியன்’ போன்ற இதழ்களில் வெளியாகின. ‘சங்கரன்கோவில் கோமதி நான்மணிமாலை' என்பது அரங்க. சீனிவாசன் முதன் முதலில் எழுதிய நூல். அதனைப் படித்த தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான் மேலும் அவர் கவிதைகள், நூல்கள் எழுத ஊக்குவித்தார். அரங்க. சீனிவாசன், சங்க நூல் ஆராய்ச்சிக் கட்டுரைகளை தினமணி இதழில் தொடராக எழுதினார். அதனை வானதி பதிப்பகம் நூலாக வெளியிட்டது. தினமணியில் தொடர்ந்து நூல்களுக்கு மதிப்புரை எழுதினார். "சங்க இலக்கியங்களில் தேசியம்" என்ற அரங்க. சீனிவாசனின் நூலை தேசிய சிந்தனைக் கழகம் வெளியிட்டது. அவர் எழுதிய “வங்கத்துப் பரணி” என்ற நூலை திருநெல்வேலி சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் வெளியிட்டது.
"தியாக தீபம்" என்ற வரலாற்று நாவலையும் அரங்க. சீனிவாசன் எழுதியுள்ளார். நாரண. துரைக்கண்ணன் அதற்கு அணிந்துரை வழங்கியுள்ளார். அரங்க. சீனிவாசன், சுமார் 30 நூல்களை எழுதியுள்ளார். 10-க்கும் மேற்பட்ட நூல்களைப் பதிப்பித்துள்ளார்.
காந்தி காதை
அரங்க. சீனிவாசன் எழுதிய நூல்களில் ‘மனித தெய்வம் காந்தி காதை’ முக்கியமானது. காந்தியின் வரலாற்றை மரபுக்கவிதையில் சொல்லும் காவியம் இது. நவீன காலத்தில் உருவான காவியங்களில் குறிப்பிடத்தக்கது. (காந்தி காதை)
அண்ணாமலை ரெட்டியார் வரலாறு
அரங்க. சீனிவாசன் அண்ணாமலை ரெட்டியாரின் ஓளிப்படத்தை முதன் முதலில் கண்டறிந்து வெளிப்படுத்தினார். தொடர்ந்து அண்ணாமலை ரெட்டியாரின் வாழ்க்கையைப் பற்றி மிக விரிவாக ஆய்வு செய்து, பல தேடல்களை மேற்கொண்டு, அவரது வரலாற்றை ’காவடிச் சிந்தும் கவிஞன் வரலாறும்'’ என்ற தலைப்பில் நூலாக எழுதி வெளியிட்டார்.
இதழியல் வாழ்க்கை
கொல்கத்தாவிலிருந்து வெளிவந்த ‘ஜோதி’ மாத இதழிலும், திருச்சியிலிருந்து வெளியான ‘தொழிலரசு’ இதழிலும் உதவி ஆசிரியராகப் பணியாற்றினார்.
இலக்கியச் செயல்பாடுகள்
சொற்பொழிவு
அரங்க. சீனிவாசன், ஆசுகவி, சித்திரக்கவி, வித்தாரக்கவி, மதுரகவி ஆகிய நாற்கவியும் புனைய வல்லவர். வானொலி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு கவிதை வாசித்திருப்பதுடன், பல சொற்பொழிவுகளையும் நிகழ்த்தியுள்ளார். பல பட்டிமன்ற நிகழ்ச்சிகளுக்கு நடுவராய் இருந்திருக்கிறார். தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் நடத்திய ஆய்வரங்குகளுக்குத் தலைமை தாங்கி நடத்தியுள்ளார். கம்பன் விழாக்களில் பங்கு கொண்டு கம்பன் கவிநுட்பம் பற்றி உரையாற்றியுள்ளார். தி. சு. அவிநாசிலிங்கம் செட்டியார் நிறுவிய தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் பொதுக்குழு உறுப்பினராகப் பணிபுரிந்தார். ‘தமிழ்க் கலைக் களஞ்சியம்’ உருவாக உறுதுணையாக இருந்தார்.
பதிப்புப்பணி
குமார ராஜா முத்தையா செட்டியார் நினைவு மலர், ராணி மெய்யம்மை ஆச்சி நினைவு மலர், மதுரை தமிழிசைச் சங்கத் தொடக்க விழா மலர் போன்ற மலர்களுக்குப் பதிப்பாசிரியராகச் செயல்பட்டார். சில நூல்களுக்கு உரை எழுதி பதிப்பாசிரியராகப் பணிபுரிந்திருக்கிறார். இவர் திருத்திப் பதிப்பித்த ’வானர வீர மதுரைப் புராணம்’ என்ற நூல், தொல்பொருள் துறை மூலம் வெளியாகி உள்ளது.
நினைவுகள், ஆய்வுகள்
அரங்க. சீனிவாசனின் ‘வங்கத்துப் பரணி’ நூலும் பட்டப் படிப்புக்கு பாட நூலாக இடம் பெற்றது. பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் இவரது பெயரில் ‘அரங்க சீனிவாசன் அறக்கட்டளை’ ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவரது படைப்புகளை ஆய்வு செய்து பல மாணவர்கள் இள முனைவர் (எம்.பில்), முனைவர் (பிஹெச்.டி.) பட்டம் பெற்றுள்ளனர்.
விருதுகள்
- அகில இந்தியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் வழங்கிய ’அருட்கவி; விருது.
- திருச்சி கலைப்பண்ணை வழங்கிய ‘கவிக்கடல்’ விருது.
- நாமக்கல் கவிஞர் நினைவுக்கு குழுவினர் வழங்கிய ’கவித்தென்றல்’ பட்டம்.
- சென்னைத் தமிழ் வளர்ச்சி மன்றம் வழங்கிய ’கவிதைச் செம்மல்’ விருது.
- கி.வா.ஜ. வழங்கிய ‘கம்பன் வழிக் கவிஞர்’ விருது.
- பாரதீய வித்யா பவன், இவரது, ‘மனித தெய்வம் காந்தி காதை' நூலுக்கு ‘ராஜாஜி இலக்கிய விருது’ வழங்கிச் சிறப்பித்தது.
- ’மனித தெய்வம் காந்தி காதை’ நூலுக்குத் தமிழக அரசின் சிறப்புப் பரிசு கிடைத்தது.
- ’மனித தெய்வம் காந்தி காதை’ நூலுக்கு கோவை ராமகிருஷ்ணா வித்யாலயத்தின் பரிசு மற்றும் பாராட்டு கிடைத்தது.
- ’காவடிச் சிந்தும் கவிஞன் வரலாறும்’ நூலுக்கு தமிழக அரசின் முதல் பரிசு கிடைத்தது.
- உலகப் பல்கலைக்கழகம் வழங்கிய ‘டாக்டர்' (டி.லிட்.) பட்டம்.
மறைவு
ஜூலை 31, 1996-ல், அரங்க. சீனிவாசன் காலமானார்.
இலக்கிய இடம்
கவிஞராக, இலக்கிய ஆய்வாளராகப் பணிபுரிந்தவர் அரங்க. சீனிவாசன். காந்திய நெறிப்படி வாழ்ந்தார். தமிழில் காந்திய இலக்கியத்தில் அரங்க சீனிவாசனின் 'மனித தெய்வம் காந்தி காதை' முக்கியமான இடம் வகிக்கிறது. நவீனச் சூழலில் மரபுக்கவிதை எழுதிய கவிஞர்களில் அரங்க சீனிவாசன் முக்கியமானவர். பதிப்பாசிரியராகவும் பங்களிப்பாற்றியிருக்கிறார்.
நூல்கள்
- சரஸ்வதி துதி
- வடமலை சீனிவாசமாலை
- வயலாலி மணவாள சதகம்
- பர்மா நடைப் பயணம்
- தாகூர் அஞ்சலி
- காதல் அருவி
- வங்கத்துப் பரணி
- வழிகாட்டும் வான்சுடர்
- தியாக தீபம்
- வள்ளல் சண்முகனார்
- காதல் அருவி
- சுதந்திரப் போரின் எழுச்சிக் களம்
- காந்தி காதை
- அகமும் புறமும்
- எழுத்துலக நாயகி
- கருமாரி அந்தாதி
- சந்நிதி முறை
- வைணவத் தத்துவ அடிப்படைகள்
- கடவுள் வரலாறு
- காவடிச் சிந்தும் கவிஞன் வரலாறும்
- அருள் விளக்கு அரிவையர்
- அறிய வேண்டிய ஐம்பொருள்
- திருவரங்கத் திருநூல்
- தேசிய கீதம்
- நீலிப்பேயின் நீதிக்கதைகள்
பதிப்பாசிரியர்
- மண்ணியல் சிறுதேர்
- குமார ராஜா முத்தையா செட்டியார் நினைவு மலர்
- ராணி மெய்யம்மை ஆச்சி நினைவு மலர்
- மதுரை தமிழிசைச் சங்கத் தொடக்க விழா மலர்
- வானர வீர மதுரைப் புராணம்
- அண்ணாமலையார் நினைவு மலர்'
உரையாசிரியர்
- பத்மகிரிநாதர் தென்றல் விடுதூது
- அண்ணாமலை ரெட்டியார் கவிதைகள்
- கூடற் கலம்பகம்
உசாத்துணை
- அரங்க சீனிவாசன் வாழ்க்கைக் குறிப்பு: ஆர்கைவ் தளம்
- காந்தி காதை பாடிய கவிக்கடல்: தினமணி இதழ் கட்டுரை
- அரங்க சீனிவாசன் நூல்கள்
- அரங்க சீனிவாசன் தமிழ் ஹிந்து கட்டுரை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
27-Nov-2022, 06:16:31 IST