under review

மாம்பழக்கவி சிங்கநாவலர்

From Tamil Wiki

மாம்பழக்கவிச்சிங்க நாவலர் (பழனி மாம்பழக் கவிராயர், மாம்பழக் கவிச்சிங்க நாவலர், மாம்பழக் கவிச்சிங்கம்) (1836- 1884 ) தமிழ் மரபுக்கவிஞர். வெண்பா மற்றும் சிலேடை பாடுவதிலும் ஆசு கவி பாடுவதிலும் திறன் பெற்றிருந்தார். இளம் வயதிலேயே அம்மை நோயால் கண்பார்வையை இழந்தவர்.ஒரு முறை காதால் கேட்டவற்றை அப்படியே உள்வாங்கிக் கொள்ளும் திறமை பெற்றிருந்தார் எனப்படுகிறது. ராமநாதபுரம் சேது சமஸ்தானத்தின் அவைப்புலவராகத் திகழ்ந்தார்.

பிறப்பு, கல்வி

மாம்பழக்கவி சிங்கநாவலர் பழனியில் விஸ்வகர்மா குலத்தைச் சார்ந்த முத்தையா ஆசாரி-அம்மணி அம்மாள் இணையருக்கு 1836-ல் இரண்டாவது மகனாகப் பிறந்தார். பழனியப்பன் என்ற இயற்பெயர் இருந்தபோதும் தம் முன்னோரில் ஒருவர் பெற்றிருந்த 'மாம்பழம்[1]' என்ற பெயரே அவரது பெயராக நிலைத்தது. மாம்பழக் கவிராயரின் குடும்பத்தினர் சிற்பக் கலைஞர்களாகவும் ஆகம, புராணங்களில் புலமை படைத்தவர்களாகவும் விளங்கினர். பள்ளி செல்லும் பருவத்தில் கடுமையான அம்மை நோயினால் பாதிக்கப்பட்டு கண்பார்வையை இழந்தார்.

முத்தையா தன் மகனுக்கு முதுகில் எழுத்துக்களை எழுதியும் வாய்மொழியாகவும் கல்வி கற்பித்தார். மாம்பழக் கவிராயர் தொடர்ந்து மாரிமுத்து கவிராயரிடம் தமிழ் கற்றுத் தேர்ந்தார். சுப்பராய பாரதியார் என்னும் வழக்கறிஞரிடமும் இராமசாமி ஐயர் என்னும் புரோகிதரிடமும் சம்ஸ்கிருதம் கற்றார். ஒரு முறை கேட்டதை அப்படியே நினைவில் நிறுத்தி திரும்பச் சொல்லும் ஆற்றலால் 'ஏகச்சந்த கிரஹி' எனப் பெயர் பெற்றார்.

இலக்கிய வாழ்க்கை

முருகன் மேல் கொண்ட பக்தியால் 'குமரகுரு பதிகம்', 'சிவகிரி பதிகம்', 'பழனிப் பதிகம்' ஆகிய பாமாலைகளைப் பாடினார்.அவரது பாடல்கள் சந்தநயம் மிக்கவையாக அமைந்தன. ஆசுகவி, மதுரகவி, சித்திரக்கவி, வித்தாரக்கவி ஆகிய நால்வகைக் கவிகளையும் ; நீரோட்ட வெண்பா முதலிய பாவகைகளையும் பாடும் வல்லமை பெற்றார். பாப்பம்பட்டி மிராசுதார் வேங்கடசாமி நாயக்கர், துளசிமாணிக்கம் பிள்ளை, ஆய்குடி ஓபுளக்கொண்டம நாயக்கர் ஆகியோரைப் புகழ்ந்து பாடல்கள் இயற்றினார். ராமநாதபுரம் சேது சமஸ்தானத்தின் மன்னர்கள் பொன்னுசாமித் தேவர், முத்துகுமாரசாமித் தேவர் ஆகியோரால் ஆதிரிக்கப் பட்டு அவைப்புலவராகத் திகழ்ந்தார். அவையில் மன்னர் தந்த ஈற்றடிகள் அனைத்தையும் வெண்பாவில் அமைத்துப் பாடினார். மன்னர் கவிராயருக்கு 'கவிச்சிங்கம்' எனற பட்டத்தை அளித்தார்.

பிரபந்தங்கள்

மாம்பழக்கவிச்சிங்க நாவலரின் பிரபந்தங்கள்'கவிச்சிங்க நாவலர் பிரபந்தத் திரட்டா'க தொகுக்கப்பட்டு வெளிவந்தன.

தேவாங்க புராணம்

கோவை தேவாங்க குலகுரு ஸ்ரீஸ்ரீசதாசிவானந்த தேசிக சுவாமிகளும், கலப்பதி ஸ்ரீஸ்ரீதொட்டய்ய தேசிகரும் சமஸ்கிருதத்தில் இருந்து தமிழில் மொழிபெயர்த்த தேவாங்க புராணத்தை மாம்பழக் கவிச்சிங்க நாவலர் தமிழில் கவிதையாக இயற்றினார். போடிநாயக்கனூர் ஜமீன்தாரராகிய திருவங்காரு திருமலைபோடய காமராசய பாண்டிய நாயக்க துரை ஆதரவில் போடிநாயக்கனூர் ஸ்ரீசவுடேஸ்வரி அம்மன் திருக்கோவிலில் அரங்கேற்றம் செய்யப்பட்டது. (பார்க்க தேவாங்க புராணம்)

பாடல் நடை

கவிராயர் இயற்றிய சதுரங்க பந்தம்

நேம னதிவித காம னனைவர்க்கு நேயகம
சேம சகாயன் சிதபுஞ்சன் சீர் சின வாவிசய
தாமன் மனதிற் சலிக்கா னருட்கல்வி சால்பினொடு
மாமணி நேர வளர்மானு வேல்கன வாசகனே

இந்தச் செய்யுளில் முதல் வரியில் 18 எழுத்துக்களும் இரண்டாம் வரியில் 20 எழுத்துக்களும் மூன்றாம் வரியில் 22 எழுத்துக்களும் கடைசி வரியில் 18 எழுத்துக்களும் வருவதைக் காணலாம். மொத்த எழுத்துக்கள் 78.

பாடலை சதுரங்க பந்தத்தில் படிக்கும் விதம்

1, 10, 19, 28, 37, 46, 55, 64, 63, 62, 61, 59, 58, 57, 49, 50, 51, 52, 53, 54, 55, 56, 48, 47, 46, 45, 44, 43, 42, 41, 3, 34, 35, 36, 37. 38. 39, 40, 32, 31, 30, 29, 28, 27, 26, 25, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 16, 15, 14, 13, 12, 11, 10, 9, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 15, 22,29, 36, 43, 50, 57 என்ற கட்டங்கள் (சதுரங்க அறைகள்) வழியே சென்றால் பாடலைப் படிக்கலாம்.

கிரியில் கிரியுருகும் கேட்டு என்ற ஈற்றடிக்கு இயற்றிய வெண்பா

மாலாம்பொன் னுச்சாமி மன்னர்பிரான் தன்னாட்டில்
சேலாம்கண் மங்கையர் வா சிக்குநல்யாழ்---நீலாம்
பரியில் பெரிய கொடும் பாலைகுளி ரும்ஆ
கிரியில் கிரியுருகும் கேட்டு.

பொருள்: பொருள்: திருமாலை ஒத்த பொன்னுச்சாமித் தேவர் நாட்டில் சேல்போன்ற கண்ணையுடைய மங்கையர் இசைக்கும் நல்ல யாழிலிருந்து பிறக்கும் நீலாம்பரி இராகப் பாடலால் பெரிய கொடும் பாலை நிலமும் குளிர்ந்து விடும்; ஆகிரி இராகப் பாடலால் மலையும் உருகி விடும்.

மறைவு

மாம்பழக் கவிராயர் 1884 (மாசி 24) ல் மறைந்தார்.

இலக்கிய இடம்

மாம்பழக் கவிராயர் கவிதை என்பது செய்யுள்விளையாட்டாக கருதப்பட்ட காலகட்டத்தைச் சேர்ந்தவர். தமிழ்ப்பயிற்சியே அன்று கவிதைக்கான அளவுகோலாகக் கொள்ளப்பட்டது. அவருடைய கவிதைகள் மரபான உருவகங்களையும் கருத்துக்களையும் சொற்களாலான வேடிக்கையாக முன்வைப்பவை. அவருடைய தேவாங்க புராணம் முக்கியமான நூலாக இனவரைவியலில் மதிப்பிடப்படுகிறது.

நூல்கள்

 • விநாயக மூர்த்தி பதிகம்
 • ஆனந்தகீதரசம்
 • சரசுவதியம்மன் பஞ்சரத்தினம்
 • சிங்கார ரசமஞ்சரி
 • சுரஜதி
 • தங்கப் பாட்டுகள்
 • திருவோலக்க சிறப்பு
 • தனிச்செய்யுட்கோவை
 • பழநிப் பதிகம்
 • குமரகுருபரபதிகம்
 • சிவகிரிப் பதிகம்
 • திருச்செந்திற் பதிகம்
 • பழநி நான்மணிமாலை
 • திருப்பழநி வெண்பா
 • பழநிவெண்பா அந்தாதி
 • பழன புரிமாலை
 • குமரனந்தாதி
 • சிவகிரியமக வந்தாதி
 • பழநிக் கோயில் விண்ணப்பம்
 • தயாநிதிக் கண்ணி.
 • துதிப்பாசுரத்தொகை
 • திருவருச்சமூக விலாசதுதித் தமிழ்
 • தேவாங்க புராணம்

உசாத்துணை

அடிக்குறிப்புகள்

 1. தேர்ந்த சிற்பியாகவும் இனிமையாக சொற்பொழிவாற்றக்கூடியவருமான கவிராயரின் முன்னோர் ஒருவருக்கு நாயக்க மன்னர் 'மாம்பழம்' என்ற பட்டத்தை அளித்தார். அன்று முதல் அவர் வழி வந்தவர் பலருக்கு அப்பெயர் வழங்கி வந்தது.


✅Finalised Page